இசையில் நடிப்பது பெரிய விஷயமாக பார்க்கிறேன். அவர் நம் வாழ்க்கையில் கலந்துள்ளார். சூரி, இளையராஜா குறித்து

ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சூரி, இளையராஜா குறித்தும் பேசினார். அவர் பேசுகையில், “நான் சினிமாவில் நுழைந்ததில் இருந்து இளையராஜா சாரை பார்த்தது இல்லை. ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் ஸ்க்ரீனில் அல்லது தூரமாகத்தான் பார்த்துள்ளேன். ஆனால் இப்படம் மூலமாகத்தான் பக்கத்தில் உட்கார்ந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் வரும் காட்டு மல்லி பாடலின் ரெக்கார்டிங் போது அவரை சந்தித்தேன். இப்பாடல் இளையராஜாவின் சொந்த ஸ்டூடியோவில் சென்டிமெண்டாக ரெகார்ட் செய்யப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் நடந்த இந்த பாடல் பதிவு, இப்படத்தின் முதல் பாடலாக பதிவு செய்தோம். அப்போது நான், வெற்றிமாறன் மற்றும் இளையராஜா மூன்று பேரும் உள்ளே இருந்தோம். விஜய் சேதுபதி வந்து கொண்டிருந்தார்.
இளையராஜா பக்கத்தில் வெற்றிமாறன் உட்கார்ந்திருந்தார். எதிர்புறத்தில் நான் உட்கார்ந்திருந்தேன். இளையராஜா அவரது ஹார்மோன் பெட்டியில் ட்யூன் போட கை வைத்து பின்பு என்னை பார்த்தார். பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டார். எனக்கு பதட்டமாகி விட்டது. 10 நொடிக்கு மேல் பேசாமல் அப்படியே பார்த்ததால், பதட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தேன். பின்பு அவரிடம் கேட்டபோது, தனது 45 ஆண்டு கால அனுபவத்தில் ஹீரோவை அருகில் வைத்துக் கொண்டு ட்யூன் போடுவது இதுதான் முதல் முறை எனக் கூறினார். அவரது இசையில் நடிப்பது பெரிய விஷயமாக பார்க்கிறேன். அவர் நம் வாழ்க்கையில் கலந்துள்ளார். என் பிள்ளைகளின் வாழ்க்கையிலும் கலந்துள்ளார். நாளைக்கு அவனுடைய பிள்ளை வாழ்க்கையிலும் கலந்து இருப்பார்.
நன்றி: நக்கீரன்