வசனம் மீறிய வானம் – மகேந்திரன்

வசனம் மீறிய வானம் – மகேந்திரன்
*ஜானி*
‘வித்யாசாகர்’ கதாப்பாத்திரத்தை போலீஸார் கைது செய்வார்கள். சோகத்தோடு ஶ்ரீதேவி திரும்பும் காட்சி. மழை விட்ட சமயம். ‘ஜானி’ ரஜினி ஓடி வந்து நடந்து வர வர தாளங்களின் ஆட்சி. அருகில் வருவார். இருவரும் ஒருவரையொருவர் பார்க்கத் துவங்கியதும் ‘ஜானி’யின் உயிரிசை. ரஜினியின் முகத்தில் சிறிதாக ஒரு சிரிப்பு அரும்பும். அதோடு ரஜினியின் காட்சிப்படிமம் உறைந்து நிற்கும்.
அடுத்து ஶ்ரீதேவி.ஶ்ரீதேவியின் முகத்தில் சிரிப்பு கலந்து கொஞ்சம் கண்ணீர். கண்ணீரைத் துடைத்ததும் அப்படியே ஶ்ரீதேவியின் காட்சிப்படிமம் உறையும். இருவரது உறைந்த முகங்களும் மாறி மாறி திரையில் காட்டப்படும்.
மெதுவாக புல்லாங்குழல் உள்ளே வரும்.
அதைத்தொடர்ந்து அப்படியே ஒரு புல்வெளியில் இருவரும் நடந்துவர “Music The Life Giver” என்று திரையில் வரும்.
*உதிரிப்பூக்கள்*
விஜயனுக்கு எதிராக திரும்பும் ஊர்மக்கள் இறுதியில் விதிக்கும் தண்டனையோடு காட்சி தொடங்கும்.
“நீங்க வாழத்தகுதியில்லாத மனுஷன். ஏன்னா நீங்க யாரையும் நிம்மதியா வாழவச்சதில்ல. நாங்க நினச்சா உங்க சாவு ஒரே நிமிஷம். எங்க கையால அத செய்ய விரும்பல. எல்லார் வாழ்க்கையையும் நீங்க அழிச்ச மாதிரி இப்ப உங்க முடிவையும் நீங்களே தேடிக்கணும். இதான் எங்க எல்லாரோட தீர்மானமும்’
தவறுணர்ந்தோ இல்லையோ அதற்கு பதில் சொல்ல விஜயன் பேசும் வசனம்.
“இவ்ளோ நாள் நீங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருந்தீங்க. இன்னிக்கி உங்க எல்லாரையும் நான் என்னப் போல மாத்திட்டேன். நான் செஞ்சத் தவறுகள்லயே பெரிய தவறு அதான்.”
இந்த வசனத்தைப் பேசிவிட்டு அதுவரை கெட்டவனாக இருந்த ஒரு கதாப்பாத்திரம் பிள்ளைகளைப் பார்தது புன்னகைத்து அழைக்கும். பிள்ளைகளைச் சந்திக்க வாய்ப்பு அளிக்கப்படும்போது தூக்குமேடைக்காரனின் கடைசி ஆசை போல அது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். விஜயன் கதாப்பாத்திரம் தனது பிள்ளைகளுக்கு முத்தமிட்டு ‘நல்லா படிக்கணும், நல்ல பேர் வாங்கணும். அப்பா இப்ப குளிக்கப் போறேன்’ என்று இறுதியாக சொல்லிவிட்டு ஆற்றிலிறங்கி தன் உயிரை மாய்த்துக்கொள்ளும். அதற்குப் பிறகும் காட்சி தொடரும். நதி சலனத்தோடு பாய்ந்தோடும். உயிர் பிரிவதன் மொழி. மலைத்தொடர் காட்டப்படும். புல்லாங்குழலின் ஓலம். அந்த உயிர் பிரிந்தபோதே கதை முடிந்ததாக காட்டியிருக்கலாம். இருந்தாலும் இரண்டு நிமடங்கள் இவ்வாறு தொடரும். விஜயனின் பிள்ளைகள் நதிக்கரையோடு நடந்துவருவார்கள். அவர்களோடு காட்சி உறையும். ஊரார் சென்றாலும் ஊரார் கொன்றாலும் அந்த உதிரிப்பூக்களுக்கு அப்பா விஜயன். அதனாலே ஊர்மக்கள் சென்றாலும் அவர்கள் அங்கேயே இருப்பார்கள்.
*முள்ளும் மலரும்*
“இஞ்சினியர் சார். எனக்கு உங்களப்பிடிக்கல சார். ஆனா என் தங்கச்சிக்கு உங்களப் பிடிச்சிருக்கு. ஆனா உங்க எல்லாரையும்விட நான்தான் முக்கியம்னு இப்போ காமிச்சிட்டாளே அந்த பெருமையும் சந்தோஷமும் போதும் சார் சாகுற வரைக்கும்” என்று சந்தோஷித்து சரத்பாபுவுக்கு ஷோபாவை திருமணம் செய்துகொள்ள சம்மதிப்பார் ரஜினி. படம் இங்கேயே முடிவடையலாம். அதற்குப்பிறகும் ரஜினியின் முகமும் ஷோபாவின் முகமும் கண்ணீர் வழிந்தோட மாறி மாறி திரையில் தோன்றும். இங்கும் புல்லாங்குழலின் ஒத்திசை. ரஜினியின் உச்சபட்ச பெருமை இஞ்சினயரை வென்றதும் தங்கையின் விருப்பத்தை நிறைவேற்றியதும் ரஜினியின் முகத்திலிருந்து உதிரும் கண்ணீரின் அடர்த்தி சொல்லும். அண்ணன் தன்னால் தோற்கவில்லை என்ற உணர்வு ஷோபாவிடம். அப்படியே படம் முடிவடையும்.
——-
வசனங்களுக்குப் பின்னும் உணர்வுகள் இருக்கிறது என்று காட்சியப்படுத்திய மூன்ற நிகழ்வுகள் இவை. கதை முடிந்தாலும் கதாப்பாத்திரங்களின் கண்ணீருக்கும் புன்னகைக்கும் வேலை என்று நிரூபிப்பது புதுமையான இலக்கணம்.
இந்த இலக்கணத்தின் ஆசான் மகேந்திரன் நினைவு தினம் இன்று.
Elambarithi Kalyanakumar (சக்ரவர்த்தி)
