கைரேகை வைத்துள்ள விண்ணப்பங்களை மட்டும் தேர்ந்தெடுத்தேன்

காமராஜரின் எளிமையும் நேர்மையும்
எளிமையின் சின்னம் : காமராஜர் முதல்வராக இருந்தபோது மதுரை சென்றார். விருந்தினர் மாளிகையில் தங்கினார். இரவு மின்சாரம் இல்லை. ‘கட்டிலை துாக்கி மரத்தடியில் போடு’ என்றார். கட்டிலுக்கு அருகில் ஒரு போலீஸ்காரர் துப்பாக்கியை வைத்துக்கொண்டு காவலுக்கு நின்றார். ‘நீ இப்படி துப்பாக்கியை வைத்துக்கொண்டு அருகில் நின்றால், எனக்கு எப்படி துாக்கம் வரும். என்னை யாரும் துாக்கிச்சென்றுவிட மாட்டார்கள். நீ போய் படு’ என்றார். இப்படி ஒரு முதல்வரை யாராலும் பார்க்க முடியுமா?
அன்னையாருக்கு ரூ.120 : காமராஜர் முதல்வராக இருந்தபோது தாயாருக்கு செலவுக்காக 120 ரூபாய் கொடுத்தார். ‘முதல் மந்திரியின் தாயாராக நான் இருப்பதால், பலரும் என்னை பார்க்க வருகிறார்கள். அவர்களுக்கு சோடா, கலர் வாங்கிக்கொடுக்காமல் எப்படி அனுப்புவது? மாதம் 30 ரூபாய் கூடுதலாக 150 ரூபாய் வேண்டும்’ என்றார். அதற்கு காமராஜர் என்ன சொன்னார் தெரியுமா? ‘யார் யாரோ வருவார்கள், அவர்களுக்கு சோடா, கலர் வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று அவசியமில்லை. 120 ரூபாய்க்கு மேல் தரமுடியாது’ என்று சொல்லிவிட்டார். கழிவறை கட்ட இடம் வாங்க 3 ஆயிரம் வேண்டும் என்றார். அதற்கும் மறுத்துவிட்டார்.

ராமநாதபுரம் புயல் : 1955ல் ராமநாதபுரம், புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டது. மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து துடித்தனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகள் புறப்பட்டனர். தண்ணீரை கண்டு தயங்கி நின்றனர். பரமக்குடியில் பாலம் இடிந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நேரில் பார்வையிட வந்த காமராஜரிடம், ‘ஐயா, நிவாரணம் வழங்கும் பணிகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் செல்லுங்கள்’ என்று அதிகாரிகள் கூறினர்.
‘அதிகாரிகளே எல்லாத்தையும் கவனித்து கொள்ளுங்கள்’ என்று கோட்டையில்
இருந்தபடியே உத்தரவு போட்டிருக்கலாமே. ‘மக்களின் கஷ்டத்தை நேரில் பார்த்து ஆறுதல் சொல்லவே நான் வந்துள்ளேன்’ என்றுச் சொல்லி வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு, சாரைக்கயிறைப் பிடித்துக்கொண்டு மார்பளவு தண்ணீரை கடந்து சென்றார். இதை அண்ணாதுரை
திராவிட நாடு இதழில் காமராஜரை பாராட்டி எழுதினார்.
பொது வாழ்வில் நேர்மை : காங்., மாநாடு நடந்து முடிந்து கணக்கு கேட்டபோது, ’67 ரூபாய் 3 அணா குறைகிறது’ என்று சொன்னவரிடம் ‘பொது வாழ்வில் நேர்மை வேண்டும். உன் காசை போட்டு கணக்கை முடி’ என்று சொல்லியவர் காமராஜர்.தன் தங்கையின் மகள் வழி பேரன் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம் போட்டுவிட்டு, ‘தாத்தா, நீங்கள் சிபாரிசு செய்தால் போதும்; கிடைத்துவிடும்’ என்றான். அதற்கு காமராஜர் ‘அதற்கென்று கமிட்டி போடப்பட்டுள்ளது. நீ நல்லா பதில் சொன்னால் கிடைக்கும். கிடைக்கலைன்னா கோயம்புத்துாரில் பி.எஸ்சி., விவசாயம் ஒரு பாடம் இருக்கு. அதில் வேலை கிடைக்கும். சேர்ந்துபடி’ என்றார்.முதல்வராக இருந்தபோது, மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களை அவரிடம் கொடுத்து ‘முதல்வர்
கோட்டாவில்’ பத்தை தேர்வு செய்யுமாறு அதிகாரிகள் சொன்னார்கள். அவரும் 10 விண்ணப்பங்களை எடுத்துக்கொடுத்தார். ‘உங்களுக்கு வேண்டியவர்களா’ என அதிகாரிகள் கேட்டனர். ‘இல்லை, தகப்பன் கையெழுத்து போடும் இடத்தை பார்த்தேன். அதில் கைரேகை வைத்துள்ள விண்ணப்பங்களை மட்டும் தேர்ந்தெடுத்தேன். பாவம் அந்த குடும்பத்தில் இந்த பையன்களாவது படித்து டாக்டராகட்டும்’ என்றார். வாழ்வில் அவர் எவ்வளவு துாய்மையாக வாழ்ந்துள்ளார் என்பதற்கு இது சான்று.