தோழர் ஜீவாவை கடுமையாக விமர்சித்த அண்ணா

தோழர் ஜீவாவை கடுமையாக விமர்சித்த அண்ணா. கோபத்தில் எஸ்.எஸ்.ஆர்.
ஒரு நாள் காலை படப்பிடிப்பு நடைபெறும் இடைவெளியில் செய்தித் தாளில் ஒரு செய்தியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் அண்ணா அவர்களால் ” இலட்சிய நடிகர் ” என்று பாராட்டைப் பெற்ற எஸ்.எஸ்.ஆர். தோழர் ஜீவா அவர்களைப்பற்றி கடுமையான வார்த்தைகளில் விமர்சித்து இருந்தார் அறிஞர் அண்ணா. இதைக் கண்ட எஸ்.எஸ்.ஆர், அண்ணா மீது மிகவும் கோபம் கொண்டார். படப்பிடிப்பை பாதியிலேயே முடித்துக் கொண்டு, காஞ்சீபுரம் நோக்கி காரில் பரந்தார் எஸ்.எஸ்.ஆர். அண்ணா அவர்கள் காஞ்சிபுரம் வீட்டில் தன் சகாக்களுடன் பேசிக் கொண்டு இருந்தார். மிகுந்த கோபத்துடன் அங்கே வந்து அண்ணாவின் முன்பு இருந்த மேஜையின் மீது அந்த செய்தித் தாளை வீசினார்.
”ஜீவா அவர்களின் பெருமைகளை எங்களுக்கெல்லாம் எடுத்துச் சொன்ன எங்க அண்ணாவா இப்படி கேவலமான வார்த்தைகளால் விமர்சித்து இருப்பது ? ” என்று கேட்டார் எஸ்.எஸ்.ஆர். உடனே அண்ணா ” இதைப்பற்றி நாம் பிறகு பேசலாம், நீ முதலில் அமைதியாக உட்கார் ” என்று சமாதானம் செய்தார். ஆனால் அண்ணாவின் முகத்தைக் கூட பார்க்காமல் திரும்பிக் கொண்டார் எஸ்.எஸ்.ஆர்.
சுற்றி இருந்தவர்கள் ஆச்சர்யமாக பார்த்தனர். அண்ணா முன்பு இப்படி யாருமே இதுபோல் நடந்து கொண்டதில்லை.
உடனே அண்ணா எஸ்.எஸ்.ஆரை வீட்டின் பின்புறம் தனியாக அழைத்துச் சென்று ” என்ன உன் பிரச்சினை ? ” என்று சொல்லி, ஒரு சாவியை கொடுத்து, வீட்டில் பின்புறம் உள்ள ஒரு சிறிய அறையின் பூட்டை திறக்கச் சொன்னார். குழப்பத்தில் சாவியை வாங்கி பூட்டை திறந்தால் பூட்டிய வீட்டில் தோழர் ஜீவானந்தம் இருக்கின்றார்.
ஜீவாவைக் கண்ட எஸ்.எஸ்.ஆர் அதிர்ச்சி அடைகின்றார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான ஜீவா போலிசாரால் தேடப்பட்டு வரும் நிலை.
”ஜீவா அவர்கள் நம்முடன் இருப்பதாக யாருக்கும் எந்த சந்தேகமும் வரக் கூடாது என்பதற்கு இவ்வாறு விமர்சித்து எழுதினேன் ” என்று அண்ணா விளக்கம் அளிக்க, ஆம் என்று தலை அசைத்தார் ஜீவா.
தான் அவசரப்பட்டு அண்ணாவையே மதிக்காமல் நடந்து கொண்டோமே என்று உணர்ந்தார் எஸ்.எஸ்.ஆர்.
”என்னை மன்னித்து விடுங்கள், இனி கனவில் கூட உங்களை தவறாக நினைக்க மாட்டேன் ” என்று சொல்ல, அதற்கு அண்ணா ” இதற்கான தண்டனையை நான் உனக்கு தரப்போகிறேன்” என்றார்.
”கொடுங்கள் ! நான் மனதார ஏற்றுக் கொள்கிறேன் ” என்றார்.
”இனி இவர் இங்கு தங்குவது பாதுகாப்பு இல்லை. எனவே இந்த நிமிடத்தில் இருந்து 2 மாத காலம் இவரை பாதுகாப்பாக தங்க வைப்பது உன்னுடைய பொறுப்பு, உடனே இவரை அழைத்துக் கொண்டு புறப்படு ” என்றார் அண்ணா.
”தண்டனை வழங்குவதாகச் சொல்லி வெகுமானம் தந்து விட்டீர்களே ? இந்த அறிய வாய்ப்பை வழங்கியமைக்கு நன்றி ” என்று சொல்லி ஜீவா அவர்களை மாறு வேடத்தில் அங்கிருந்து அழைத்துச் சென்றார் எஸ்.எஸ்.ஆர்.