வாழ்நாளின் 45 வருட காலத்தை பயணங்களில் செலவழித்தவருமான மஹா பண்டிட் ராகுல் சாங்கிருத்தியாயன்

இந்தி பயண இலக்கியத்தின் தந்தை ‘என்று அறியப்படுபவரும் வாழ்நாளின் 45 வருட காலத்தை பயணங்களில் செலவழித்தவருமான மஹா பண்டிட் ராகுல் சாங்கிருத்தியாயன் இதே ஏப்ரல் 9 ஆம் தேதி கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் ஆஸிம்கார் என்ற கிராமத்தில் பிறந்தார் (1893).
இவரது இயற்பெயர் கேதார்நாத் பாண்டே. இளம் வயதிலேயே தாய் இறந்துவிட்ட தால். பாட்டியால் வளர்க்கப்பட்டார். ஆரம்பக் கல்வி மட்டுமே கற்றார்.
10 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி ஊர் ஊராக சுற்றி ஏராளமான விஷயங்களைக் கற்றார். காசி சென்று சாதுக் களுடன் மடாலயங்களில் தங்கியிருந்தார். அப்போது இவருக்கு ராம் உதார் தாஸ் என்று பெயர் சூட்டப்பட்டது.
தமிழகம் வந்து சைவ, வைணவ நூல்களைக் கற்றார். தத்துவம், பயணம், வரலாறு, மதம், மொழி, இலக்கியம் என்று அனைத்து துறைகளிலும் இவரது அறிவு விரிவடைந்தது. இலங்கை முதல் லண்டன் வரை பயணம் மேற்கொண்டார்.
இந்தி, பாலி, உள்ளிட்ட பல இந்திய மொழிகளையும் சிங்களம், பிரெஞ்சு, ரஷ்ய மொழி உள்ளிட்ட அயல்நாட்டு மொழிகளையும் கற்றார். புகைப்படக் கலையிலும் வல்லவராகப் பிரகாசித்தார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். பல முறை சிறை சென்றுள்ளார். அப்போது பல நூல்களையும் படைத்தார்.
இவர் எழுதிய ‘வால்கா ஸே கங்கா தக்’ நூல் வேதகாலத்துக்கு முந்தைய நாட்களிலிருந்து 1944-ம் ஆண்டு வரை யிலான காலக் கண்ணாடி. இருபது கதைகள் கொண்ட இந்த வரலாற்றுப் புனைவு நூல், தமிழ், தெலுங்கு மலையாளம் உட்பட மொத்தம் 14 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
பல்வேறு துறைகளில் ஏறக்குறைய 150 புத்தகங்களை எழுதியுள்ளார். உலகம் முழுவதும் வலம் வந்த இவர், தனது அனுபவங்களை சமஸ்கிருதத்தில் ஒரு டைரியில் எழுதி வந்தார். இவரது வாழ்க்கை வரலாற்று நூலுக்கு இதுதான் அடித்தளம்.
‘ஓடும் நீர்தான் பவித்ரமானது. ஒரே இடத்தில் இருக்கக் கூடாது சதா திரிந்துகொண்டே இரு’ என்பதுதான் இவரது வாழ்க்கைத் தத்துவம். திபெத் சென்ற இவர் புத்த துறவியாக மாறினார். தன் பெயரை ராகுல் சாங்க்ருத் தியாயன் என்று மாற்றிக்கொண்டார்.
அங்கிருந்த பல புத்தகங்களையும் ஓவியங்களையும், ஓலைச் சுவடிகளையும் இந்தியாவுக்குக் கொண்டு வந்தார். 1935-ல் சோவியத் நாடு சென்றார். இவர் முறைப்படி கல்வி எதுவும் கற்கவில்லை என்றாலும் இவரது மதிநுட்பத்தை அறிந்த சோவியத் யூனியனின் லெனின்கிராட் பல்கலைக்கழகம் இவரை இந்தியவியல் பேராசிரியராக நியமித்தது.
1958-ல் சாகித்ய அகாடமி விருது, 1963-ம் ஆண்டு பத்மபூஷண் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளும் மகாபண்டிட் உள்ளிட்ட பட்டங்களையும் பெற்றுள்ளார். மகாபண்டிட் ராகுல் சாங்கிருத்தியாயன் தேசிய விருது, சாங்கிருத்தியாயன் சுற்றுலா விருது உள்ளிட்ட பல விருதுகள் இவர் பெயரில் வழங்கப்பட்டு வருகின்றன.
அறிவுக்கடல், தத்துவஞானி, மகாபண்டிதர் என்றும் போற்றப்படும் ராகுல் சாங்க்ருதியாயன் 1963-ம் ஆண்டில் 70-வது வயதில் காலமானார்.
நன்றி: ஜியோ தமிழ்