அன்பு இருக்கும் இடத்தில் மரியாதை இருக்கக் கூடாதா என்ன?

விகடனில் ஒரு கட்டுரையில் மேற்கோளாக நன்னூல் நூற்பா ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார் சுஜாதா. ஆனால் தவறுதலாக தொல்காப்பிய நூற்பா என எழுதி விட்டார். தொலைபேசியில் சுஜாதாவைத் தொடர்பு கொண்டு விஷயத்தைத் தெரிவித்தேன். ‘அப்படியா?` என்ற அவர் தொலைபேசியை வைத்து விட்டார்.
மறுவாரம் விகடன் வந்தது. நான் சுஜாதா பக்கங்களைப் பிரித்துப் பார்த்தேன். தூக்கிவாரிப் போட்டது. அதில் என்னைப் பற்றியும் ஒருவரி எழுதியிருந்தார்! நான்தான் அந்தத் தவறைக் கண்டுபிடித்துத் திருத்தினேன் என்று எழுதியிருந்த அவர், `திருப்பூர் கிருஷ்ணன்` என்று எழுதாமல் `திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள்` என்று எழுதியிருந்தார்!
அந்த `அவர்கள்` என்ற சொல்லை அவர் ஏன் எழுத வேண்டும்? நான் அவருக்கு மிகவும் நெருக்கமான அவரின் அன்பன் தானே? அப்படியிருக்கும்போது எதற்கிந்த விசேஷ மரியாதை? அதுபற்றி விளக்கம் கேட்க உடனே அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.
அவர் தொலைபேசியில் மிக மிகச் சுருக்கமாகத் தான் பேசுவார். அவரின் வெற்றிக்கான பல காரணங்களில் அதுவும் ஒன்று.
`நான் உங்களுக்குத் தகவல் தெரிய வேண்டும் என்பதற்காகச் சொன்னேனே தவிர, அதை நான் சுட்டிக்காட்டியதாக விகடனில் குறிப்பிட்டு நீங்கள் எனக்குப் பெருமை சேர்த்திருக்கத் தேவையில்லை. நான் சொல்லாவிட்டாலும் நீங்களாகவே நன்னூலைப் புரட்டும்போது அதைக் கண்டுபிடித்திருப்பீர்கள். நான் முந்திக் கொண்டேன் என்பதே உண்மை. இருக்கட்டும். என் பெயரைக் குறிப்பிட்டதே பெரிது. அதில் மரியாதைச் சொல்லான அவர்கள் என்பதை ஏன் சேர்த்தீர்கள்? நீங்கள் எனக்கு ஆசிரியர். உங்களிடம் நான் அன்பைத்தான் எதிர்பார்க்கிறேனே அன்றி மரியாதையை அல்ல!`
நான் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட அவர் கலகலவெனச் சிரித்தார். பிறகு விளக்கினார்:
`இங்க பாருப்பா, நான் தனிப்பட்ட முறையில் உன்கிட்ட பேசும்போது எப்படி வேண்டுமானாலும் உன்னைக் கூப்பிடலாம். அது அன்பின் அடையாளம். உரிமை. ஆனால் பொதுவெளியில் உன்னைப் பற்றி நான் சொல்லும்போது உனக்குரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும். நீ என் மரியாதைக்குரியவன் என்ற என் கருத்தை வேறு எப்படி நான் வாசகர்களுக்குத் தெரிவிக்க முடியும்? அன்பு இருக்கும் இடத்தில் மரியாதை இருக்கக் கூடாதா என்ன? நீ என்மேல் அன்பு செலுத்துகிறாய். கூடவே என்னை மதிக்கவும் செய்கிறாயே? என் தவறு ஒன்றை நீ சுட்டிக் காட்டுகிறாய். அதை நானும் ஒப்புக் கொள்கிறேன். அப்படியிருக்கும்போது நீ மரியாதைக்குரியவன் தானே?`
சொல்லிவிட்டுத் தொலைபேசியை வைத்துவிட்டார்! என் மனம் நெகிழ்ந்தது. உண்மையிலேயே பெரிய மனிதர்தான் அவர். மிக உயர்ந்த பண்பாளர்…
திருப்பூர் கிருஷ்ணன்
*சங்க இலக்கியம் முழுவதையும் விரும்பிப் படித்தவர். இன்றைய இளைஞர்களுக்குப் புரிகிற மாதிரி இன்றைய தமிழில் அவற்றை மறுஆக்கம் செய்தவர். திருக்குறளுக்கு எளிய தமிழில் புதிய உரை எழுதியவர். (நூலகத் துறையின் முன்னாள் இயக்குநர் ஆவுடையப்பன், சுஜாதா தொடர்ந்து கன்னிமாரா நூலகத்திற்கு வந்து கொண்டிருந்ததையும் பல திருக்குறள் உரைகளைப் படித்தே குறளுக்கான தம் உரைநூலை எழுதினார் என்பதையும் தெரிவிக்கிறார்.)
by Kandasamy R