யாழ்

யாழ்
பண்டைய கால இசைக்கருவிகளில் சிறப்பு வாய்ந்தது யாழ் ஆகும்.
யா என்பது யாக்கப்படுதல் அல்லது கட்டப்படு தல். ழ் என்பது மீட்டுதல் என்னும் பொருள் உடையது.
நரம்புகளால் கட்டப்பட்டு மீட்டுதல் என்பதன் பொருளில் யாழ் எனும் இசைக்கருவி நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்.
யாழ் என்னும் நரம்புக் கருவி, தமிழர்கள் வாசித்த முதல் இசைக்கருவியாகும்.
திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல் பாடும்போது, திருநீல கண்ட யாழ்ப்பாணர், யாழ் வாசித்ததாக நாம் அறிவோம்.
பழந்தமிழ் இலக்கிய நூலான பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் யாழ் பற்றிய செய்திகள் அறிய முடிகிறது.
யாழில் கட்டப்படும் நரம்புகள் கணக்கில், அதன் பெயரும் மாறுபடுகின்றன.
21 நரம்புகள் கட்டப்பட்டால் அதற்கு பேரியாழ் என்றும், 19 நரம்புகள் கட்டப்பட்டால் மகர யாழ் என்றும், 14 நரம்புகள் கட்டப்பட்டால் சகோட யாழ் என்றும், ஏழு நரம்புகள் கட்டப்பட்டால் அதற்கு செங்கோட்டு யாழ் என்று நம் முன்னோர்கள் பெயர் வைத்து,பண்
இசைத்து மகிழ்ந்தனர்.
சங்ககாலத்தில் இசைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டும், இசைத்தமிழை நம் முன்னோர்கள் வளர்த்ததும் தமிழர்களாகிய நமக்கு பெருமை தானே.
யாழ் என்னும் இசைக் கருவியின் சில குறிப்புகள் வைத்து அடியேன் எழுதியுள்ள பதிவு :
மூன்றாம் பிறையென மரத்திலமைத்த வளைவில்
முறுக்கின நரம்புகளை கோர்த்திடுவர் துளையில்
அழுத்தமாய் இரு பக்கம் இறுக்கமுடன் கட்டி
அழகுடனே இசைவாணர் கணக்குடன் கூட்டி
செய்த இசை கருவியை யாழ் என்பர்.
சங்கத் தமிழில் பெருமை சேர்த்த பண்ணில்
சார்ந்தே ஓசை தரும் தமிழ்ச் சபையின் தன்னில்
மெய்மறந்து கேட்பவர்கள் நெஞ்சமதை ஈர்த்து
மேன்மையாக்கும் யாழும் தனித்தன்மையை சேர்த்து
நரம்புகள் சுகமாக்கும் விரல்களின் நுனியில்
நயம்பட ஒலிக்கும் கேட்பவர்கள் செவியில்
போற்றுதலாகும் பண்டைய கால இக்கருவி
ஆற்றுப்படை இலக்கிய பாட்டுக்களைத் தழுவி
இருபத்தொரு நரம்புடன் இருந்த பேரியாழ்
ஒன்பது பத்துடனே ஒலிதந்த மகரயாழ்
பதினான்குடனே சேர்ந்த சகோடயாழ்
ஏழு நரம்புகளோட எளிதான செங்கோடயாழ்
வெவ்வேறு கட்டமைப்பில் சேர்த்தது சிறப்பை
விரல்களின் வாசிப்பில் நுண்ணிய அமைப்பை
அரசர்களும் அறிஞர்களும் அடைந்தனர் பிரமிப்பை
ஆனந்தமுடன் யாழும் தந்தது வியப்பை
முருக சண்முகம்
