சத்யஜித் ரே 102ஆவது பிறந்த தினம் – மே 2

From The Desk of கட்டிங் கண்ணையா!
சத்யஜித் ரே 102ஆவது பிறந்த தினம் – மே 2
உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநராகவே பொதுவாக அறியப்படும் சத்யஜித் ரே, கூடுதலாக, எழுத்தாளர், இசையமைப்பாளர், ஓவியர், புத்தகப் பதிப்பாளர், வரைபட வடிவமைப்பாளர், சித்திர எழுத்துக்கள் எழுதுபவர், சிற்பக்கலை வல்லுநர் என்ற பல திறமைகளுக்குச் சொந்தக்காரர்.
இவரது தாத்தா உபேந்திரா கிஷோர் ராய் எழுத்தாளர், பதிப்பாளர், தத்துவவாதி, வானவியல் நிபுணர் மற்றும் அன்றய சமுதாய இயக்கமான ப்ரம்மசமாஜத்தின் முக்கிய அங்கத்தினர். இவர் தந்தை சுகுமார் ராய் விமர்சகர், வங்க மொழி எழுத்தாளர், சிறுவர் இலக்கியம் படைத்தவர் என்று குடும்பமே கலைகளில் சிறந்த விளங்கிய ஒன்று. இந்தச் சூழ்நிலையில் 1921ம் ஆண்டு மே மாதம் 2ம் நாள் சுகுமார் ராய் சுமத்ரா தம்பதியினருக்கு மகனாக சத்யஜித் ரே பிறந்தார்.
மிகச் சிறுவயதிலேயே தந்தையை இழந்த சத்யஜித் ரே தனது தாய்மாமன் அரவணைப்பில் வளர்ந்தார். கல்கத்தா நகரில் உள்ள மாநிலக் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரப் பட்டம் பெற்ற ரே சாந்திநிகேதன் பல்கலைக்கழகத்தில் ஓவியம், வரைகலை, வண்ணம் தீட்டுதல், சிலை செதுக்குதல் ஆகிய கலைகளைக் கற்றுக்கொண்டார்.
ஒரு பிரித்தானிய விளம்பர நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கிய ரே பின்னர் பதிப்பகம் ஒன்றில் புத்தகங்களின் அட்டை வடிவமைப்பாளராகப் பொறுப்பேற்றார். ஜிம் கார்பட் எழுதிய புத்தகங்கள், ஜவாஹர்லால் நேரு எழுதிய இந்தியாவைக் கண்டுணர்தல் (Discovery of India) போன்ற புத்தகங்களின் அட்டைப்படங்களை வடிவமைத்தார். அப்போதுதான் வீபூதிபூஷன் பந்தோபாத்யாய் எழுதிய பதேர் பாஞ்சாலி நாவலின் சிறுவர் பதிப்பைக் கண்டடைந்தார். இந்த நாவல் சத்யஜித் ரேயின் வாழ்க்கையையே மாற்றி அமைத்தது என்றால் அது மிகையல்ல.
தனது வேலை நிமித்தமாக லண்டன் சென்ற ரே அங்கே பல்வேறு உலகத் திரைப்படங்களைப் பார்த்தார். மீண்டும் இந்தியா திரும்பிய ரே பதேர் பாஞ்சாலி நாவலைத் திரைப்படமாக உருவாக்க முடிவு செய்தார். தயாரிப்பாளர்கள் யாரும் இந்தப் படத்திற்குப் பணம் தர முன்வராத காரணத்தால் தன் சேமிப்பையும், தனது மனைவியின் நகைகளையும் விற்றுப் படம் எடுக்கத் தொடங்கினார் ரே. பின்னர் நேருவின் சிபாரிசினால் அன்றய வங்காள அரசு பண உதவி செய்ய முன்வந்தது. வெளியான உடனேயே பதேர் பாஞ்சாலி படம் உலகமெங்கும் பெரும் புகழ்பெற்றது. இந்திய சினிமாவை பதேர் பாஞ்சாலிக்கு முன்னென்றும் பின்னென்றும் பிரிக்கவேண்டும் என்ற நிலைமை உருவானது. அப்பு என்ற கிராமத்தில் வசிக்கும் சிறுவனின் கதை இது. இதனைத் தொடர்ந்து வளர்ந்துவிட்ட அப்புவுக்கும் அவன் தாய்க்குமான உறவுச்சிக்கலைச் சொல்லும் அபராஜிதோ, அப்புவின் மணவாழ்க்கையைப் பேசும் அப்பு சஞ்சார் ஆகிய படங்களையும் சத்யஜித் ரே இயக்கினார். இந்தியாவின் வறுமையைக் காசாக்குகிறார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு. திரைப்படங்கள், ஆவணப்படங்கள் என 36 படங்களை இவர் இயக்கியுள்ளார்.
திரைப்படங்களைத் தாண்டி, வங்காள மொழியின் சிறுவர் இலக்கியத்திற்கும் ரே பெரும் பங்காற்றியுள்ளார். ப்ரொதோஷ் சந்திரா மித்ரா என்ற துப்பறிவாளர், பேராசிரியர் ஷான்கோ என்ற அறிவியலாளர் என்ற பாத்திரங்களை உருவாக்கி பல சிறுவர் கதைகளையும் இவர் எழுதி உள்ளார். வங்காள மொழியில் எழுத்துருவங்களை உருவாக்குவதிலும் ரே தலைசிறந்து விளங்கினார்.
திரைப்படத்துறையில் ரேயின் பங்களிப்புக்காக இந்திய அரசு இவருக்கு பாரத்ரத்னா விருது வழங்கி கௌரவித்தது. வாழ்நாள் சாதனையாளர் என்று இவருக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. லண்டன் பல்கலைக்கழகமும், டெல்லிப் பல்கலைக்கழகமும் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கின. இதுபோக இந்திய அரசின் திரைப்பட விருதுகளும்
From The Desk of கட்டிங் கண்ணையா