தேவிகா

From The Desk of கட்டிங் கண்ணையா!
தேவிகா இறந்த நாளின்று
60களில் கே.ஆர்.விஜயா, காஞ்சனா, ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா என பல கதாநாயகிகள் அறிமுகமாகித் திரையில் மின்னினாலும், வண்ணப் படங்களின் விகிதம் கூடினாலும் 50களின் நாயகிகளும் அவர்களுடன் சரி சமானமாகப் போட்டியிட்டார்கள். அவர்களில் தேவிகாவுக்கும் முதன்மையான இடம் உண்டு.
தேவிகா நடித்த தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவானவை.
அவரது நடிப்பாற்றலை வெளிப்படுத்த உதவிய ஒவ்வொரு சினிமாவுமே தென்னகத் திரை வரலாற்றின் பொற்கால அத்தியாயம்.
கிடைத்தத் தரமான வேடங்களில் அதி அற்புதமாக வாழ்ந்து காட்டியவர். இன்றளவும் அனைத்துத் தமிழர்களின் இதயங்களிலும் நிரந்தர இடம் பிடித்தவர் தேவிகா!
‘வேர்க்கடலைத் தோல்களும் கள்ளங்கபடமற்ற சிரிப்பொலியும்… ’ அது தேவிகாவின் ஷூட்டிங் என்று, லைட் மேன், ஸ்டில்ஸ் போட்டோகிராபர் உள்ளிட்டத் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் எளிதில் அடையாளம் காட்டி விடும்.
‘நாட்டிய தாரா’ என்ற தெலுங்கு டப்பிங் சினிமா முதல் முதலாக தேவிகாவை தமிழக ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது.
பாவ மன்னிப்பு, கர்ணன், நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, வாழ்க்கைப்படகு, வானம்பாடி, நீலவானம், மறக்க முடியுமா?, பழநி, சாந்தி, பந்தபாசம், அன்புக் கரங்கள், முரடன் முத்து, ஆனந்தஜோதி, ஆண்டவன் கட்டளை, அன்னை இல்லம் என்று தொடர்ச்சியாக பல நல்ல படங்களைக் கொடுத்தவர் தேவிகா. கொஞ்சமும் சோடை போகாத நடிப்பு அத்தனை படங்களிலும். அவற்றில் சில படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் தேவிகாவின் கதாபாத்திரமும் அவரின் நடிப்பும் எப்போதும் சோடை போனதில்லை.
சினிமா ஸ்டாராக அறிமுகமான சூழல் குறித்த தேவிகாவின் நினைவலைகள்-
‘எனக்குச் சொந்த ஊர் ஆந்திராவிலுள்ள சித்தூர். சகோதரிகள் இருவர். ஒரு சகோதரர். பழமையில் ஊறிய குடும்பம். ஆகவே கட்டுப்பாடுகள் ஜாஸ்தி. வீட்ல சினிமா மேல அத்தனை நல்ல அபிப்ராயம் கிடையாது.
என்னோட பாட்டிக்குக் கலைகள்ள ஈடுபாடு ஜாஸ்தி. கர்நாடக சங்கீதம்னா உசுரை விட்டுடுவாங்க. அருமையாப் பாடவும் செய்வாங்க.
ஒரு நவராத்திரி சமயம். பாட்டி பாட நான் மகிஷாசுர மர்த்தினியா வேஷம் போட்டுக்கிட்டு நடனம் ஆடியிருக்கேன். நடிப்பு, நாட்டியம்னு நான் எடுத்த முதல் அவதாரம் அது.
பாட்டிக்கு ஜோசியத்துல அபாரமான நம்பிக்கை. பேத்தியோட எதிர்காலம் எப்படியிருக்கும்னு தெரிஞ்சுக்குற ஆசை என்னை விட பாட்டிக்கே அதிகம்.
குடும்ப ஜோதிடர் கிட்டே என் ஜாதகத்தைக் கொடுத்துப் பலன் பார்க்கச் சொன்னாங்க.
‘கலைத்துறையில் உங்கக் குழந்தைக்கு மிகப் பிரமாதமான பேரும் புகழும் சித்திக்கும்’னு ஜொதிடர் ஆருடம் சொன்னாராம்.
வயலின், பாட்டு கிளாஸ்னு வீட்டிலேயே வகுப்புகள் ஆரம்பமாயின. என் அக்காவுக்குப் பாட்டில் ஆர்வம் கிடையாது. நான் நல்லா பாடுவேன்.
ஆடல் பாடல்ல முழுத் தேர்ச்சி பெறுவதற்குள் பாட்டியின் ஆர்வம் மற்றும் ஜொசியத்தில் கூறியது போல் அரிதாரம் பூச வேண்டியதாயிற்று. ’ – அப்படீன்னு தேவிகா சொல்லி இருந்தார்
——————தேவிகாவின் இயற்பெயர் பிரமீளா. வீட்டில் செல்லமாக ‘ராணி’ என்றும் அழைத்தார்கள். சென்னை ஐஸ் ஹவுஸில் உள்ள லேடி வெலிங்டன் பள்ளிக் கூட முன்னாள் மாணவி.
வி.என். ரெட்டி இயக்கிய ‘புட்டிலு’ தெலுங்கு படத்தில் நடனமாடத்தான் தேவிகாவுக்கு முதல் சந்தர்ப்பம் கிடைத்தது. டைரக்டர் வி.என். ரெட்டி. இயக்குநர் அதன் நாயகி ஜமுனாவிடம்,
‘ராணி பெரிய நடிகை ஆகி விடுவாள்’ என்பாராம். ஜமுனாவின் முகம் அதைக் கேட்டு கோபத்தில் தாறுமாறாகச் சிவக்குமாம்.
‘ரேசுகா’ இரண்டாவதாக வெளியானது. என்.டி. ராமாராவுடன் இணைந்து தேவிகா நடித்த முதல் படம். மிகப் பெரிய வெற்றி. ‘நாட்டுக்கு ஒரு வீரன்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு தமிழகத்திலும் பரவலாக ஓடியது.
சென்னையில் ஒட்டப்பட்ட சினிமா போஸ்டர்களில் பிரமீளாவை இனம் கண்டு கொண்டனர் பள்ளித் தோழிகள். வகுப்பில் அவர்களது கேலி கிண்டல் தாங்க மாட்டாமல் படிப்பு பாதியில் நின்றதும் அதை அடுத்து வெள்ளித் திரை தாரகை ஆனதும் நீண்ட கதை..
பின்னாளில் இயக்குநர் ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, சுமைதாங்கி மூன்று படங்களிலும் நாயகியாக நடித்தவர் தேவிகா. ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தின் நாயகியாக முதலில் தேர்வு செய்யப்பட்டவர் விஜயகுமாரி. ஆனால் அவர் தனக்கு இணையாக எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிக்க வேண்டும் என்று இயக்குநருக்குப் பரிந்துரைத்ததுடன் அல்லாமல், அந்த நிலைப்பாட்டில் பிடிவாத மாகவும் இருந்ததால் அவருக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டவர் தேவிகா.
ஒருவிதத்தில் தேவிகா நன்றி சொல்ல வேண்டியது நல்வாய்ப்பைத் தவறவிட்ட விஜயகுமாரிக்குதான். படத்தில் கதாநாயகி சீதாவாகவே மாறிவிட்டார் என்றும் சொல்லலாம். மிக அழுத்தமான ஒரு பாத்திரம் அது. தனக்குள்ளாகவே குமைந்து, வெளியில் சொல்ல முடியாத துயரங்கள் மனதில் பாரமாக அழுத்த, அதை மறைத்துக்கொண்டு போலியாகச் சிரித்து கணவனின் உடல்நலம் பெற வேண்டும் என்பது ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, முன்னாள் காதலனை நம்பவும் முடியாமல் ஒரு டாக்டரான அவரிடம் கடுமை காட்டவும் விரும்பாமல் அடக்கி வாசிக்க வேண்டிய பாத்திரம்.
அந்தப் பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து உள்வாங்கிக்கொண்டு மிகப் பிரமாதமாக நடித்திருந்தார். இரு ஆண்களுக்கு இடையில் மனத் தவிப்போடு நடமாட வேண்டிய ஒரு பெண்ணைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார். ‘சொன்னது நீதானா?’ பாடல் காட்சியில் அவரது தவிப்பும் துயரமும் நம்மையும் தொற்றிக் கொள்ளும். காதலில் தோற்றுப் போன பெண்களுக்கும் வாழ்க்கை உண்டு என்பதைத் தன் படங்களில் அழுத்தமாகச் சொன்னவர் இயக்குநர் ஸ்ரீதர்.
அவரது ‘கல்யாணப் பரிசு’ படத்துக்கு முன்னர் காதலில் தோற்ற கதாநாயகிகள் இயக்குநரால் கொல்லப்பட்டார்கள் என்பதே வரலாறு.
1962ஆம் ஆண்டின் சிறந்த நடிகையாக தேவிகா கொண்டாடப்பட்டார். சிறந்த மாநில மொழிப்படத்துக்கான விருதும் வெள்ளிப் பதக்கமும் இப்படம் வென்றது. தான் நடித்த கதாபாத்திரங்களிலேயே தன்னை மிகவும் ஈர்த்த ஒரு பாத்திரமாகவும், அந்தப் படத்தை முதன்முதலாகப் பார்த்தபோது, தன்னை மீறிய மன அழுத்தத்தால் கட்டுண்டு, கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுததாகவும் தேவிகா குறிப்பிட்டிருக்கிறார். தேவிகாவை மட்டு மல்லாமல், பல ஒட்டு மொத்தப் பெண்களையும் கவர்ந்த படம் இது.
’நெஞ்சம் மறப்பதில்லை’ நாயகி கண்ணம்மாவை யாருக்குதான் பிடிக்காது. இரு மாறுபட்ட வேடங்களை முற்பிறவி, இப்பிறவிகளில் அவர் எடுத்திருந்தாலும் கிராமிய மணம் கமழ அள்ளி முடிந்த கூந்தலும், கணுக்காலுக்கு மேலான பாவாடை தாவணியில் கள்ளம் கபடம் இல்லாத ஏழைப் பெண்ணான கண்ணம்மாவே முதலிடம் பிடித்த தேவிகா இதே நாளில்தான் மறைந்தார்
rom The Desk of கட்டிங் கண்ணையா