தமிழ் படைப்பாளிகளின் பிரம்மா சுஜாதா பிறந்த தினமின்று!

தமிழ் படைப்பாளிகளின் பிரம்மா சுஜாதா பிறந்த தினமின்று!
தமிழ்நாட்டில் இப்போ எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் யாருக்கும் எழுத்தாளர் சுஜாதாவைத் தெரியாமல் இருக்காது. அவருடைய வாசகர் படை மிகப் பெரியது.
இன்றும் ஒவ்வொரு புத்தகக் கண்காட்சி முடிவிலும் பெஸ்ட் செல்லர்களில் அவருடைய நூல்கள் இடம்பெறாமல் இருப்பதில்லை.
அவருடைய மிகப் பெரிய வாசகர் பரப்பையும் தாண்டி தமிழில் படிப்பவர்கள் அனைவரும் எங்காவது அவருடைய எழுத்துக்களை படித்திருப்பார்கள். அவர் வசனம் எழுதிய ஏதேனும் ஒரு தமிழ்த் திரைப்படத்தையாவது பார்த்திருப்பார்கள். அந்த அளவு தமிழ்ச் சமூகத்துடன் கலந்துவிட்டவர் சுஜாதா.
புனைவெழுத்தில் தனக்கென்று ஒரு பிரத்யேகமான எழுத்துப்பாணியை உருவாக்கிக்கொண்டார். சுவாரஸ்ய நடை, கச்சிதமான விவரணைகள். தகவல்களைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறும் பாங்கு, அங்கங்கே ஆங்கில வார்த்தைகள்,. மேல்நாட்டு பிரபலங்களின் பெயர்கள், மேற்கோள்களைப் பயன்படுத்துவது என தமிழ் புனைவுலகுக்கு புதியதொரு எழுத்துப் பாணியை அறிமுகப்படுத்தினார் சுஜாதா.
படித்த நவ நாகரீக இளைஞர்களை தமிழ் நூல்களை வாசிக்க வைத்ததில் சுஜாதாவின் பங்கு அளப்பரியது. அப்படிப் படிக்க வந்து அவரால் ஈர்க்கப்பட்டு எழுதத் தொடங்கி எழுத்துலகில் சாதித்தவர்கள் ஏராளம்.
புனைவெழுத்தைப் போலவே புனைவற்ற எழுத்திலும் தொடர்ந்து இயங்கிவந்தார். ‘கணையாழியின் கடைசிப் பக்கம்’, ‘கற்றதும் பெற்றதும்’ போன்ற வாராந்திர பத்திகள், ‘ஏன் எதற்கு எப்படி?’ என்ற கேள்வி பதில் தொடர் உள்ளிட்டவற்றின் மூலம் ஆன்மீகம், அரசியல், சினிமா. தொழில்நுட்பம், இலக்கியம், சமூகம் என பல துறைகளில் அவருக்கு இருந்த ஆழமான அறிவையும் விசாலமான பார்வையையும் வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
இது தவிர ‘திரைக்கதை எழுதுவது எப்படி’ என்கிற அவருடைய நூல் சினிமா இயக்குநராக விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய அடிப்படைக் கையேடு .
ஆழ்வார் பாசுரங்கள் முதல் குவாண்டம் பிசிக்ஸ் வரை அவர் எழுதாத துறையே இல்லை என்று சொல்லிவிடலாம். கணினித் தொழில்நுட்பம் அறிமுகமாகத் தொடங்கிய காலத்தில் அதைப் பற்றி எளிய தமிழில் அனைவரிடமும் கொண்டு சேர்த்தது சுஜாதாவின் ஆகச் சிறந்த சமூகப் பங்களிப்பு என்று சொல்லலாம்.
தனது கட்டுரைகளின் மூலம் இலக்கிய பல இளைஞர்கள் அங்கீகாரம் பெறக்காரணமாக இருந்துள்ளார். புகழ்பெற்ற கவிஞர்களான மனுஷ்யபுத்திரன், ந.முத்துக்குமார் போன்றோரை முதன்முதலில் அடையாளம் கண்டு பாராட்டியவர் சுஜாதா
இதை எல்லாம் தாண்டி ஜூவியில் ராத்திரி ரவுண்ட் அப் எழுதி வந்த ஆந்தையாரின் ரசிகர் தாம் என்று பெருமைப்பட்டுக் கொண்டவராக்கும் இந்த சுஜாதா..