உலக பத்திரிகை சுதந்திர தினமின்று

உலக பத்திரிகை சுதந்திர தினமின்று
உலக பத்திரிகை சுதந்திர தினம் ஐநா சபையால் 1993ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக பத்திரிகை சுதந்திர தின கொண்டாட்டத்தின் 31வது ஆண்டு விழா இன்று.இதற்கான விதை 1991ம் ஆண்டு ஆப்ரிக்க நாடான நமீபியாவின் தலைநகர் வின்தோக்கில் ஊன்றப்பட்டது.
1991ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை வின்தோக்கில் ஐநாவும் யுனெஸ்கோவும் இணைந்து கருத்தரங்கம் ஒன்றை நடத்தின. ஆப்ரிக்காவில் பன்முகத்தன்மையையும், பத்திரிகை சுதந்திரத்தையும் வளர்த்தெடுப்பதை நோக்கமாகக் கொண்ட அந்த கருத்தரங்கில்தான், உலக பத்திரிகை சுதந்திர தினத்தை ஆண்டுதோறும் ஐநா கொண்டாட வேண்டும் என்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐநாவால் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட மனித உரிமை சாசனம், ஐநா பொது அவையால் 1946ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி நிறைவேற்றப்பட்ட தகவல் சுதந்திரம் அடிப்படை மனித உரிமை எனும் தீர்மானம், 1990ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட மனித சமூக சேவையில் தகவல் அளிப்பின் பங்கு எனும் தீர்மானம், நாடுகளுக்கு உள்ளேயும், நாடுகளுக்கு இடையேயும் சுதந்திரமான யோசனைகளை பகிர்வதற்கான யுனெஸ்கோவின் 1989ம் ஆண்டு தீர்மானம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, உலக பத்திரிகை சுதந்திர தினத்தை ஆண்டுதோறும் ஐநா கொண்டாட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தின் அடிப்படையிலேயே உலக பத்திரிகை சுதந்திர தினம் 1993ம் ஆண்டு முதல் ஐநா சபையால் கொண்டாடப்பட்டு வருகிறது.
பத்திரிகை சுதந்திரத்திற்கு உலகின் பல பகுதிகளிலும் பல்வேறு அரசுகளால் நெருக்கடிகள் ஏற்படும் நிலையில், அவ்வாறு நெருக்கடிகள் அளிப்பது ஐநா தீர்மானத்திற்கு எதிரானது என்பதை சுட்டிக்காட்டவும் ,உலகின் பல நாடுகளிலும் உள்ள பத்திரிகை சுதந்திரத்தின் நிலையை மதிப்பிடவும்,
பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும்; பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பத்திரிகை பணியின்போது உயிர்நீத்த பத்திரிகையாளர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் இந்த நாள் அர்ப்பணிக்கப்படுகிறது.
அதோடு இந்த நாளில் பத்திரிகை சுதந்திரத்துக்காகப் பாடுபடும் ஒருவருக்கு யுனெஸ்கோ சார்பில், கிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருது வழங்கப்படுகிறது. கொலம்பியப் பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசாவின் நினவாக இந்த விருது 1997ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இவர் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி, இவரது அலுவலகம் முன்பாக சுட்டுக் கொல்லப்பட்டார். பத்திரிகை சுதந்திரத்திற்காக பாடுபட்டு, அதன் பொருட்டு உயிர் நீத்தவர் என்பதால் அவரை கெளரவிக்கும் நோக்கில் இந்த விருது அவரது பெயரால் வழங்கப்பட்டு வருகிறது.