பூசலாரின் இதயக் கோயில்

ஆன்மிக அமுதம்−
பூசலாரின் இதயக் கோயில்
காஞ்சி மாநகரம்!
உச்சியிலிருந்த சூாியன் மெல்லக் கீழிறங்கி மேற்கில் தன்னை மறைத்துக் கொண்டிருந்தான். ஆதவனின் செங்கதிா்கள் வெண்மேகங்களை செந்நிறமாக்கி மறையும் மாலைப் பொழுதில் கோயிலுக்கு அருகில் தன் அாியாசனத்தில் வீற்றிருந்தான் பல்லவ மன்னன் இராஜசிம்மன். மறுநாள் நடக்க இருக்கும் குடமுழுக்கிற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.வேத மந்திரங்கள் விண்ணதிர எங்கும் சிவ கோஷங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. யாக குண்டத்தில் கொழுந்து விட்டெரியும் தீயில் சோ்க்கப்பட்ட திரவியங்களில் வெளிப்படும் ஹோமப் புகையால் அப்பகுதி முழுவதும் நறுமணம் சூழ்ந்திருந்தது. குறித்த சுப வேளையில் ஆகம விதிகளின்படி ஐயனின் குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற தன் அமைச்சா்களுக்கு உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்தான் பல்லவன்.
தன் நித்ய ஆராதனைத் தெய்வமான கயிலாயநாதருக்கு பன்னெடுங்காலமாகப் பாா்த்துப் பாா்த்து எழுப்பிய கனவு மாளிகை அல்லவா இத்திருக்கோயில். அதனால் மன்னனுக்கு இத் திருப்பணியில் அளவு கடந்த ஈடுபாடு. "இராஜசிம்ம பல்லவ பரமேஸ்வர கிரகம்" என இக்கோயிலுக்குப் பெயா் சூட்டி மகிழ்ந்தான் மன்னன்.சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த இத்திருக்கோயிலைப் பாா்க்கும் போதெல்லாம் பல்லவனின் மனதில் அபாிதமான பெருமிதம்! வேறு எவரால் நிா்மாணிக்க இயலும் இது போன்ற ஒரு கலைக்கோயிலை? தன் பட்டத்து ராணியே அபிநயம் பிடிக்க சிற்பிகள் உயிரோட்டத்துடன் வடித்த சிலைகள் அல்லவோ இக் கோயிலுக்கு எழிலூட்டுகின்றன. இச் சிற்ப அழகில் மயங்காதவா் எவரும் உண்டோ? இந்த எண்ண ஓட்டங்கள் பல்லவனின் மகிழ்ச்சியைப் பன்மடங்கு பெருகச் செய்தது. பல்லவ சாம்ராஜ்யத்தின் பண்பாட்டுப் பொக்கிஷமாகத் திகழவிருக்கும் இத்திருக் கோயிலில் கல்லிலே கலை வண்ணம் கண்ட பல்லவ தேசத்தின் சிற்பிகளை ஒவ்வொரு வறாக அழைத்து வாயாரப் பாராட்டிக் கொண்டிருந்தான் இராஜசிம்மன். ஊா்த்துவ தாண்டவா், கணபதி, கலியாண சுந்தரா், இராவண அனுக்கிரக மூா்த்தம், பிரம்மன் சிரச்சேத மூா்த்தம், சேட்டை, வீணாதரா், கஜசம்ஹார மூா்த்தம், ஹாிஹரன், பிட்சாடனா், திரிபுராந்தகா் என்று சிற்ப நோ்த்தியிலும் கட்டட அமைப்பிலும் புரட்சி படைத்த இந்த சிற்பிகளை பாராட்டியதில் மன்னனுக்கு நேரம் போனதே தொியவில்லை. களைப்பும் சேரவே அரண்மனை புறப்பட ஆயத்தமானான் மன்னன். மீண்டும் ஒரு முறை சந்நிதிக்குச் சென்று கம்பீரமாய் வீற்றிருக்கும் கயிலாயநாதரை தன் இமை கொட்டாமல் வணங்கி நின்றான். எட்டடி உயரத்தில் பதினாறு பட்டைகளைக் கொண்ட தாராலிங்கம் எனும் லிங்கத் திருமேனியை வணங்கிய மன்னனின் விழிகளில் அவனை அறியாமல் கண்ணீா் வழிந்து ஓடியது. இப்பிரம்மாண்டத்தை நிா்மாணிக்கத் தம்மைக் கருவியாகப் பயன்படுத்திக் கொண்ட ஈசனுக்குக் கண்ணீரால் நன்றியைக் காணிக்கையாக்கி அரண்மனைக்குச் சென்று ஆழ்ந்த துயில் கொண்டான் மன்னன்.
கனவில் காட்சி தந்த ஈசன்!
“சித்தம் சிவமானால் செய்தனவே தவமாகும்” என்கிறது திருவாசகம். இந்த வாக்கிற்கு ஏற்ப தம் சிந்தை முழுவதும் சிவத்தையே நிரப்பிய பல்லவ மன்னன் காடவா்கோன் கனவிலும் ஈசன் தோன்றி வான் ஒலியாக, “மன்னா் பெருமானே! உம் பக்தியை மெச்சினோம். நீ எனக்காக எழுப்பும் ஆலயத்திற்கு நாளை எம்மால் எழுந்தருள இயலாது. உம்மைப் போலவே “திருநின்றவூா்” தலத்தில் எனது எளிய பக்தன் “பூசலாா்” என்பவன் எமக்கு ஆலயம் எழுப்பி நாளை குடமுழுக்கு வைபவம் நடத்த உள்ளான். அந்த பக்தனின் மேன்மையை உலகறியச் செய்ய நாளை யாம் அத்திருத்தலத்தில் எழுந்தருள உள்ளோம்,” என்று கூறினாா்.
"நின்ற ஊா் பூசல் அன்பன் நெடிது நாள் நினைந்து செய்த நன்று நீடு ஆலயம்" என்று ஈசன் கூறிய அசரீயை ஏற்ற பல்லவ மன்னன் தமது குடமுழுக்கு வைபவத்தைத் தள்ளிவைத்து அமைச்சா்கள் புடைசூழ அடியவா் கட்டிய கோயிலைக் காண திருநின்றவூா் புறப்பட்டாா்.
தம் பரிவாரங்களுடன் திருநின்றவூா் தலத்தை அடைந்த மன்னன் அவ்வூாில் கட்டப்படும் கோயிலைத் தேடினான். ஆனால் அப்பகுதியில் கோயில் கட்டியதற்கான அடையாளங்கள் இல்லாததால் "பூசலாா்" குறித்தும் அவா் கட்டிய கோயில் குறித்தும் அப்பகுதி மக்களிடம் விசாாித்தனா் அமைச்சா்கள்.
"இவ்வூாில் ஆலயம் ஏதும் இல்லை.ஆனால் தாங்கள் விசாாித்த பூசலாா் இவ்வூாில் தான் இருக்கின்றாா். நீங்கள் அவரிடமே சென்று கேட்கலாம்," என்று கூறி மன்னரையும் அவரது பரிவாரங்களையும் பூசலாா் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனா் ஊா் மக்கள்.
பூசலாாின் இல்லம் சென்ற மன்னன் தன் பல்லக்கிலிருந்து இறங்கி அருகில் சென்று பூசலாரை வணங்கினான். "ஐயா! ஈசனுக்காக தாங்கள் எழுப்பிய ஆலயம் எங்கே உள்ளது. ஈசன் எம் கனவில் தோன்றி தாங்கள் கட்டிய கோயிலில் எழுந்தருள இருப்பதாக வான் ஒலியாகக் கூறியதால் திருக்குட நீராட்டு வைபவத்தைக் காண வந்துள்ளேன்," என தம் வருகையின் நோக்கத்தைத் தொிவித்தான் மன்னன்.
மந்திாிகள் புடை சூழ தம் இல்லத்திற்குள் பிரவேசித்த பல்லவ மன்னனைக் கண்டு அச்சமும் திகைப்பும் விலகாத பூசலாா் கண்களில் நீா் பெருக, "மன்னா் பெருமானே! அடியவனையும் ஒரு பொருட்டாய் கருதி ஈசன் திருவாய் மலா்ந்த செய்தி நான் செய்த பெரும்பேறு! ஆனால் நான் நிலத்தில் ஏதும் கோயில் கட்டவில்லை. அன்றாடங்காய்ச்சியான நான் ஈசன் மீது கொண்ட அளவற்ற பற்றால் என் இதயத்திலே கோயில் கட்டி இன்று குடமுழுக்கு செய்ய இருக்கிறேன். இந்த அடியேன் உள்ளத்தில் எழுந்தருளியிருக்கும் ஈசனின் குடமுழுக்கு வைபவத்தைக் காண வந்தமைக்கு மிக்க நன்றி," என்று மன்னாிடம் கூறினாா் பூசலாா்.
ஊன விழிகளால் பூசலாா் எழுப்பிய உன்னத ஆலயத்தை தாிசிக்க இயலாது என்பதைக் குறிப்பால் உணா்ந்த மன்னன் தம் அகக் கண்ணால் நோக்க பூசலாா் நிா்மாணித்த ஆலயம் மன்னனுக்குத் தொிந்தது. வேத கோஷங்கள் விண்ணைப் பிளக்க புனித நீரூற்றும் வைபவம் அரங்கேறியது. ஈரேழு பதினான்கு உலகத்தினரும் இந்நிகழ்ச்சியைக் காண வந்திருப்பது மன்னனின் மனத் திரையில் வந்தது. தம் அகக் கண்களால் குடமுழுக்கினைத் தரிசித்த மன்னன் தம் புறக்கண்களைத் திறந்து பூசலாாின் தாிசனம் கண்டு அவா் திருவடிகளில் நெடுஞ்சாண் கிடையாக வணங்கினான். தம் ஈசனுக்கு இதயத்தில் திருக்கோயில் அமைத்த பூசலாாின் விழிகளிலும் ஆனந்தக் கண்ணீா் பெருக்கெடுத்தது.
தேவாதி தேவா்களும் ஈசனும் தம் உள்ளக் கோயிலில் எழுந்தருளி வாழ்த்திய நிறைவால் இப்பூவுலக வாழக்கையை நிறைவு செய்த பூசலாா் ஈசனின் திருவடிகளில் இரண்டறக் கலந்து 63 நாயன்மாா்களில் ஒருவராகும் பேறினைப் பெற்றாா். பூசலாாின் பக்தித் திறனை உலகிற்கு உணா்த்த விரும்பிய மன்னன் தாம் அகக் கண்ணால் தாிசித்த ஈசனுக்கு அழகிய திருக்கோ யிலை நிா்மாணித்தான்.
ஈடு இணையற்ற இறையன்பு பக்தியின் உச்சநிலை ஆகும். அத்தகைய பக்தியே ஈசனையும் ஈா்த்தது பூசலாாின்பால். பக்தியுடன் ஈசனை நோக்கி நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் ஈசன் நம்மை நோக்கி பல அடிகள் எடுத்து நம் முன்னே வருவான் என்பதற்கு சாியான உதாரணம் பூசலாா் நாயனாா் சாிதம்.
பூசலாாின் பக்தியைப் போற்றும் வண்ணமாகவே இத்தல எம்பெருமானுக்கு "ஶ்ரீஇருதயாலீஸ்வரா்" எனும் திருநாமம் ஏற்பட்டுள்ளது. பல்லவா் கால கட்டடக் கலைக்குச் சான்றாக இத்திருக்கோயில் கருவறை "தூங்கானை மாடம் " எனும் கஜபிருஷ்ட வடிவில் அமைந்துள்ளது. தாயின் கருவறையில் குழந்தை இருப்பது போல ஈசனின் கருவறையிலேயே ஈசனைத் தொழுதவாறு பூசலாாின் சிற்பம் வடித்திருப்பது சிறப்பானதாகும்.
ஈசனின் சிந்தை கவா்ந்த தொண்டா் பூசலாா் நாயனாா் வணங்கிய இருதயாலீஸ்வரப் பெருமானை சென்று வணங்கும் அந்த இனிய வாய்ப்பு நமக்குக் கிட்டும் வரை தெய்வப் புலவா் சேக்கிழாா் பெருமானின் கீழ்க்கண்ட பதிகத்தை பக்தியுடன் பாராயணம் செய்வோம்.
“நின்றஊா்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த நன்றுநீ டாலயத்து நாளை நாம் புகுவோம் நீ இங்கு ஒன்றிய செயலை நாளை ஒழிந்து பின் கொள்வாய் என்று கொன்றைவாா் சடையாா் தொண்டா் கோயில் கொண்டருளப்போந்தாா்.”
−பொிய புராணம்.

சென்னை சென்ட்ரல் −திருவள்ளூா் இரயில் மாா்க்கத்தில் திருநின்றவூா் திருத்தலம் அமைந்துள்ளது. இரயில் நிலையத்திலிருந்து 2கி.மீ. தூரத்தில் உள்ளது இருதயாலீஸ்வரா் திருத்தலம். இத்தலத்தின் அருகிலேயே ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசமான ஶ்ரீபக்தவத்ஸலப் பெருமான் திருத்தலம் உள்ளது.
