கட்டுரை

தோழர் ஆர்.உமாநாத்

தோழர் ஆர்.உமாநாத் காலமான தினம்🥲

1921ஆம் ஆண்டு கேரளத்தின் காசர்கோட்டில் இராம்நாத் ஷெனாய், நேத்ராவதி தம்பதியினருக்கு கடைசி மகனாகப் பிறந்த உமாநாத் தமது மாணவப் பருவத்தில் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பின்போது ,சுப்பிரமணிய சர்மாவின் அறிமுகக் கடிதத்துடன் பல்கலைக்கழகத்தில் இருந்த பொதுவுடைமைக் குழுவில் சேர்ந்தார். கட்சி கேட்டுக் கொண்டதன்படி கல்லூரிப் படிப்பைத் துறந்து, சென்னையில் உள்ள தலைமறைவு மையத்திலிருந்து மாநிலம் முழுவதும் ரகசியமாகத் தகவல்களைக் கொண்டு சேர்க்கும் கூரியர் பணியை ஏற்றுக் கொண்டு , முழுநேர ஊழியராகக் கட்சிப்பணியில் ஈடுபட்டார்.

1940ல் சென்னை சதி வழக்கில் பி. ராமமூர்த்தியுடன் கைதுசெய்யப்பட்ட அவர் மூன்று ஆண்டுகளைச் சிறையில் கழித்தார்.அவருடைய அரசியல் வாழ்க்கையில் ஒட்டுமொத்தமாக ஒன்பதரை ஆண்டுகளைச் சிறையில் கழித்திருக்கும் அவர், 7 ஆண்டுகள் தலைமறைவாகவும் இருந்திருக்கிறார்.

இந்தியா விடுதலை பெற்ற பிறகு 1949ல் ரயில்வே தொழிலாளர் போராட்டத்தில் தீவிரமாக செயல்பட்டார்.1951 ஆம் ஆண்டு கட்சியின் மீதிருந்த தடை நீக்கப்பட்டபோது திருச்சி சதி வழக்கில் தண்டனை பெற்றார். பின்னர் ஜாமீனில் வெளி வந்தார். 1952ல் தோழர் பாப்பா உமாநாத்தை திராவிட இயக்கத் தலைவர் பெரியார் தலைமையில் சாதி மறுப்பு திருமணம் செய்தார். பின்னர் தமிழக அரசு வழக்கை வாபஸ் பெற்றது. 1975ல் கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலை காலகட்டத்திலும் பல அடக்குமுறைகளைச் சந்தித்துள்ளார்.

1970ம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற இந்தியத் தொழிற்சங்க மைய (சிஐடியு) ஸ்தாபன மாநாட்டில் அகில இந்திய நிர்வாகியாகவும், தமிழகத்தில் நடந்த முதல் மாநாட்டில் தமிழ் மாநில பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டு 1993ம் ஆண்டு வரை அப்பொறுப்பில் இருந்தார். ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தில் பஞ்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் சட்ட சலுகைகளையும், உரிமைகளையும் பெறுவதற்கு பி.ராமமூர்த்தி மற்றும் கே.ரமணி ஆகியோருடன் இணைந்து வெற்றிகரமான வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டார்.

டால்மியாபுரம் சிமெண்ட் ஆலைத் தொழிலாளர் போராட்டத்தின் போது உமாநாத் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டபோது தமிழக முதல்வர் அண்ணா தலையிட்டு பிரச்சனை முடிவுக்கு வந்தது.

1962ல் புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் நடந்த தேர்தலில் 30,000 வாக்கு வித்தியாசத்தில் உமாநாத் வெற்றிபெற்றார். 1967 தேர்தலிலும் மீண்டும் உமாநாத் வெற்றி பெற்றார்.

உழைக்கும் வர்க்க நலனுக்காக ஓயாதுழைத்த தோழர் ஆர். உமாநாத் உடல் நலக் குறைவால் 2014-இதே மே 21ல் திருச்சியில் காலமானார். அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன. இடையறாத போராட்டக்காரரின் நினைவுகளை மறக்க இயலாது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button