காதலும் நானும் மௌனமாய் அவள்

ஊடலுக்கு பிறகான முதற்சந்திப்பில் யார் முதலில் பேச்சைத் துவங்குவது ? எனும் தயக்கத் தூரிகை வரைந்த மௌன ஓவியமாய் நானும் அவளும் ….
மேஜையின் மேல் அடிக்கடி இணைந்தும் பிரிந்தும்
பற்றிக் கொள்ள அழைப்பு
விடுக்கும் கரங்கள்…..
உனக்கு பிடிக்கும் நிறத்தில் இருக்கிறேன் பார்….எனும் நெயில்பாலிஷ் அணிந்த அவளின் விரல் கிரீடங்கள்…..
அழைப்பாய் இதழின் ஈர மினுமினுப்பு….
என் கவனம் ஈர்க்க கலையாமலே அடிக்கடி சீர் செய்யப்படும் மேலாடை…..
அவள் பரிதவிப்புகளில்தான்
எத்தனை காதலை ஒளித்து வைத்திருக்கிறாள் …..
தயக்கக்கோடு தாண்டி அவள் பேசப்போவதில்லை…..
அன்பு ராட்சசி அவள்….

எனை வதைப்பதில்
அத்தனை இன்பம் அவளுக்கு ….
தவறவிட்ட அழைப்புக்கு காரணம் கேட்பாள் ?
அவள் மட்டுமே தனிமை
சங்கிலியில் சிறைபட்டேன்
என்று குற்றம் சாட்டுவாள்…..
வாதியும் பிரதிவாதியுமாய் மாறி கண்ணீரில் அசைப்பாள்….
காதலும் நானும் மௌனமாய் அவள் அவஸ்தையை ரசித்து பின்
அணைத்து சமாதானப் படுத்தக் காத்திருக்கிறோம்….

பதிவு
லதா சரவணன்
