கட்டுரை

கந்துகூரி வீரேசலிங்கம்

ஆந்திராவின் தலைசிறந்த சமூக சீர்திருத்தவாதியும், தெலுங்கின் முதல் நாவலை எழுதியவருமான கந்துகூரி வீரேசலிங்கம் (Kandukuri Veeresalingam) காலமான தினமின்று🥲

# ஆந்திரப்பிரதேசம் ராஜமுந்திரியில் 1848-ல் பிறந்த இவரது முழுப் பெயர் கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு. நான்கு வயதில் தந்தை இறந்தார். இவரது மாமா இவரை தத்து எடுத்து வளர்த்தார். ஆரம்பத்தில் அரசுப் பள்ளியில் பயின்ற சிறுவனின் அறிவுக் கூர்மையால் ஆங்கிலப் பள்ளியில் சேர்க்கப்பட்டான். 1869-ல் மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்து ஒரு பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார். சில ஆண்டுகள் ஆசிரியராகவும் இரண்டாண்டுகள் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார். பின்னர் தவலேஸ்வரம் சென்று அங்கு ஓர் ஆங்கில வழிப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றினார்.

# ஆச்சாரமான பிராமண குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும் கீழ்த்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டார். ஜாதி அமைப்புகளை கடுமையாக எதிர்த்தார். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, 1874-ல் பெண்களுக்கான ஒரு பள்ளியைத் தொடங்கினார். 1876-ல் விவேகவர்தினி என்ற ஒரு தெலுங்கு பத்திரிகையைத் தொடங்கினார். சிந்தாமணி, சதீஹிதபோதா, சத்யசவர்தினி, சத்யவதி உள்ளிட்ட பல பத்திரிகைகளையும் தொடங்கி நடத்தி வந்தார். ஹிதகாரிணி என்ற சமூக அமைப்பைத் தொடங்கினார். அதன் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளுக்காகவும் தன்னால் தொடங்கப்பட்ட பல்வேறு அமைப்புகளின் செயல்பாடுகளுக்காவும் தன் சொத்து முழுவதையும் வழங்கினார். குழந்தைத் திருமணங் களை, முதிய வயதில் இளம் பெண்ணை மணக்கும் வழக்கங்களை எதிர்த்தார். பெண்களின் சம உரிமைகளுக்காகப் போராடினார்.

# தீர்க்கதரிசனமும், துணிச்சலும், பேராற்றலும் கொண்டிருந்தார்.

# இந்தியாவின் முதல் விதவைத் திருமணத்தை 1887-ல் நடத்திவைத்தார். விதவைகள் இல்லத்தையும் தொடங்கினார்.

சிறந்த எழுத்தாளருமான இவர், தெலுங்கு, ஆங்கிலம், சமஸ்கிருதம், மொழிகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தார். நூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய ‘ராஜசேகரா சரித்ரா’ என்ற நாவல் தெலுங்கில் எழுதப்பட்ட முதல் நாவல்.

# உலகம் முழுவதும் உள்ள பல புகழ்பெற்றவர்கள் குறித்து வாழ்க்கை வரலாற்று நூல்களையும் தனது சுயசரிதையையும் எழுதினார். ஏராளமான கட்டுரைகளையும் சமத்கார ரத்னாவளி, காளிதாசு சாகுந்தலம், தட்சிண கோக்ரஹணம் உள்ளிட்ட நாடகங்களையும் படைத்தார். தெலுங்கு இலக்கியத்துக்கு கட்டுரை, சுயசரிதை, வாழ்க்கை வரலாற்று நூல், நாவல் ஆகியவற்றை அறிமுகம் செய்தவர் இவர்.

# இயற்கை அறிவியல் மற்றும் வரலாறு குறித்த கட்டுரைகளைத் தெலுங்கு மொழியில் எழுதியுள்ளார். குழந்தை இலக்கியத்திலும் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கினார். தெலுங்கு இலக்கியத்தின் மகத்தான கவிஞர் எனப் போற்றப்பட்டார். நவீன ஆந்திரத்தின் தீர்க்கதரிசி எனக் குறிப்பிடப்பட்டார்.

# ஆந்திர மக்களை சடங்கு, சம்பிரதாயம், மூடநம்பிக்கைகளில் இருந்து தட்டி எழுப்பினார்.

‘ஆந்திர காவுல சரித்ரா’ என்ற தெலுங்கு கவிஞர்கள் குறித்த நூலை வெளியிட்டார். இது ஆந்திரா மற்றும் ஆந்திர இலக்கியத்தின் அடிப்படை வரலாறாக கருதப்பட்டது. தெலுங்கு இலக்கியத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தவர்.

# அவர் வாழ்ந்த இல்லத்தை ஆந்திர அரசு நினைவாலயமாக மாற்றியுள்ளது. ஆந்திர சீர்திருத்த இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்பட்டவரும் தெலுங்கு இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவருமான கந்துகூரி வீரேசலிங்கம் 1919-ம் ஆண்டு, மே மாதம், இதே 27ஆம் தேதி தனது 71-ம் வயதில் மறைந்தார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button