சினிமா

International Indian Film Academy Awards விருது விழா 2023

International Indian Film Academy Awards விருது விழா அபுதாபியில் நடைபெற்றது. இதில், வாழ்நாள் சாதனையாளருக்கான இந்த ஆண்டு விருது உலகநாயகன் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது.

களத்தூர் கண்ணம்மாவில் இருந்து விக்ரம் வரை ஏகப்பட்ட பிளாக்பஸ்டர் படங்களையும் தரமான படங்களையும் கொடுத்து தமிழ் சினிமாவையும் இந்திய சினிமாவையும் உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு கொண்டு சென்ற உலகநாயகன் கமல்ஹாசனுக்கு IIFA விருதினை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அபுதாபியில் நடந்த விழாவில் வழங்கினார்.

சல்மான் கான் உள்ளிட்ட ஒட்டுமொத்த பாலிவுட் பிரபலங்களும் எழுந்து நின்று கைதட்டி கமல்ஹாசனை கவுரவப்படுத்தினர்.

IIFA 2023 விருதுகள்:

சர்வதேச இந்திய அகாடமி விருதுகள் வழங்கும் விழா IIFA குழுவினரால் ஆண்டுதோறும் நடைபெற்று இந்திய சினிமாவில் சாதனை படைத்த பிரபலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு அபுதாபியில் இந்த விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களும் பங்கேற்றனர்.

வாழ்நாள் சாதனையாளர் விருது:

இந்த ஆண்டு நடைபெற்ற International Indian Film Academy Awards விருது விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கப்பட்டது.

விக்ரம் படத்தின் காட்சிகளை திரையிட்டு நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தொகுத்து வழங்கினார்.

இசைப்புயல் கையால் விருது:

அபிஷேக் பச்சன் இந்த ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை வெல்லப்போவது யார் என்பதை அறிவித்த நிலையில், அந்த விருதினை கமல்ஹாசனுக்கு வழங்கப்போவது இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தான் என அவருக்கு ஒரு அசத்தல் இன்ட்ரோ கொடுத்தார்.

மேடைக்கு வந்த ஏ.ஆர். ரஹ்மான் ஆங்கிலத்தில் கமல்ஹாசனை பற்றி புகழ்ந்து விட்டு நடுவே தமிழில் தனது ஸ்டைலில் வாழ்த்துக்கள் கமல் சார் எனக் கூறிவிட்டு அவரை மேடைக்கு அழைத்தார்.

எழுந்து நின்று கைதட்டிய அரங்கம்:

வாழ்நாள் சாதனையாளர் விருதினை கமல்ஹாசன் ஏ.ஆர். ரஹ்மான் கைகளால் ரொம்பவே சந்தோஷமாக பெற்றுக் கொண்டார். பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான் முதல் ஒட்டுமொத்த அரங்கமும் உலகநாயகனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக எழுந்து நின்று கைதட்டி அவரை மகிழ்வித்தனர்.

அபுதாபியில் ஒலித்த அனைவருக்கும் நன்றி:

விருது வாங்கிய பின்னர் பேசிய கமல்ஹாசன், “மூன்றரை வயதில் சினிமாவில் நடிக்க வந்தேன், நான் வளர்ந்தது மொத்தமும் சினிமாவில் தான். இத்தனை ஆண்டுகள் இந்த வயது வரை என்னையும் நடிக்க அனுமதித்துக் கொண்டிருக்கும் உங்கள் உயர்ந்த உள்ளங்களுக்கு நன்றி என்று ஆங்கிலத்தில் பேசிய கமல், “அனைவருக்கும் நன்றி” என இறுதியாக தமிழில் பேச கூடுதல் கரவொலி அரங்கத்தையே அதிரச் செய்தது.

கமல்ஹாசன் வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கும் வீடியோ காட்சிகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

நன்றி: பிலிமி பீட் தமிழ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button