நான்கு தலைமுறைகளின் வெறறிகரமான பாடகர்..

நானறிந்த முதல் பாடகர் எஸ்பிபிதான்;அவர் மட்டும்தான் நான்கு தலைமுறைகளின் வெறறிகரமான பாடகர்..எம்எஸ்வி யின் காலத்தில் தொடங்கிய பயணம் இளையராஜா, ரஹ்மான் என்று நீண்டு யுவன் வரை தொடர்ந்தது..
என்னைப் பொறுத்தவரை தமிழின் தலைசிறந்த பாடகரும் அவர்தான்..ஹரிஹரன் அவருக்குச் சமமானவர்..ஆனால் அவரளவிற்கு வெவ்வேறு காலகட்டங்களில் கோலோச்சிய வாய்ப்பினை எவரும் பெற்றதில்லை..
மைதா மாவை எண்ணையில் பிசைந்து விதவிதமாய் விசிறியடிக்கும் புரோட்டோ மாஸ்டரைப் போல் தன் இனிய குரலை வைத்து அவர் செய்த மாயங்கள் கணக்கே இல்லாதவை.
‘ஆயிரம் நிலவே வா ‘பாடியவர் தான் ‘சங்கீத ஜாதி முல்லை ‘ என்று ஸ்வரம் கூட்டி’ தங்கத்தாமரை மகளே’ என்று வித்தியாசம் காட்டி ‘ யாரோ யாருக்குள் இங்கு யாரோ?’ என்று காதுக்குள் கிசுகிசுத்தாரா ?என்பதை யோசிக்கிற போதே ஆச்சர்யமாய் இருக்கிறது..
எனக்கு மிகவும் பிடித்தது காதலில் அவர் வெளிப்படுத்தும் விதவிதமான பாவங்கள். ‘ என்னடி மீனாட்சி ?சொன்னது என்னாச்சு?, நேற்றோடு நீ தந்த வார்த்தை காற்றோடு போயாச்சு’ என்று விலகிப் போகும் காதலியிடம் காதலை நினைவுறுத்துவதாக இருக்கட்டும், ‘ விழியில் ஏன் கோபமோ? விரகமோ தாகமோ?’ என்று இஞ்ச் இஞ்சாக வர்ணித்து உணர்வைத் தூண்டி விடுவதாக இருக்கட்டும், ‘ சொக்குப்பொடி மீனாட்சி சொக்கநாதன் நான்தாண்டி’ என்று மூக்கடைத்த குரலில் வழிவதாக இருக்கட்டும், ‘ இது மலையாளக் கப்பங்கிழங்கா? இல்ல மைலாப்பூர் வத்தக்குழம்பா?’ என்று மெல்லிய அத்துமீறலோடு காதலிப்பவவளைக கையைப் பிடித்து இழுப்பதாகட்டும்,’ ..’ நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி’ என்று குருவாயூரப்பனைச் சாட்சியாக வைத்துக் கொண்டு குரலால் முத்தமிடுவதாகட்டும், ‘ இது கன்னங்களா? இல்லை தென்னங்கள்ளா? என்று சிலிர்த்து ‘ இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக’ என்று ஆலாபனையால் அணைத்துக் கொள்வதாக இருக்கட்டும் அவர் குரல் காதலிப்பவர்களுக்கான கனவுப்பாடம்தான்.
‘.சிலுவைகள் சிறகுகள் இரண்டில் என்ன தரப் போகிறாய்?’ என்று இறைஞ்சி விட்டு ‘ காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுவேன்,கண்களை நீ மூடிக் கொண்டால் நான் குலுங்கிக் குலுங்கி அழுவேன்’ என்று குரலின் சிறு மாறுபாட்டால் கேட்பவர்களை அழ வைக்கவும் அவரால் முடியும்..
உடன் பாடுகிற பாடகிகளை மெலிதாகச் சீண்டியபடியே உற்சாகம் கொப்பளிக்க அவர் பாடுகிற பாணி தனித்துவமான ஒன்று..ஜானகி, சித்ரா, ஸ்வர்ணலதா, ஜென்ஸி, சுஜாதா, என்று யாராக இருந்தாலும் சரி, அந்த நிமிடத்தில் அவர்கள் எஸ்பிபியின் காதலிகளே..’டூயட்’ என்கிற பாடல்வடிவத்தின் நிஜமான பொருள் அவருடைய குரலில் வழிந்து ததும்பும் இளமையின் துள்ளல்தான்..தமிழில் மட்டுமல்ல பல மொழிகளிலும் இதே அதிசயத்தை நிகழ்த்தியிருக்கிறார்..’ஹம் ஆப் கே கைன் கவுனில் ‘ படம் முழுவதும் வெளிப்படும் காதலின் சந்தோஷத்தை அவர் தன் குரலால் இழைத்திருப்பார்..உச்சரிப்பிலும் அவர் காட்டுகிற கவனம் போற்றப்பட வேண்டிய ஒன்று..அவர் தாய்மொழி தெலுங்கு என்பதை அவர் பாடிய ஆயிரக்கணக்கான தமிழ்ப்பாடல்களை மட்டும் கேட்டவர்களால் கண்டறியவே இயலாது..
இசையமைப்பாளருக்குச் சமமான பெரும் ஆளுமை பாடகர்களில் அவர் மட்டும்தான்..அவர் பாடிய பெரும்பாலான பாடல்களின் வெற்றி குறிப்பிட்ட இசையமைப்பாளரின் மெட்டின் அழகு என்பதையும் தாண்டி அவர் குரலின் தனித்துவத்தால் நிகழ்கிற அதிசயம்..திரைப்பாடல் என்பது கூட்டு வடிவம்…இசையமைப்பாளர், பாடலாசிரியர்,பாடகர்கள், வாத்திய இசைக்கலைஞர்கள், ஒலிப்பதிவுக் கலைஞர்கள் ஆகியோரின் ஒத்திசைவில் உருவாகும் சாதனை அது…ஆனால் பலரும் இதைக் கவனத்தில் வைத்துக் கொள்வதே யில்லை…இதில் ஒருவரின் பங்களிப்பு சோடை போனாலும் அந்தப் பாடல் தன் முழுமையைத் தொலைத்து விடும்..சில இசையமைப்பாளர்களுக்கு குறிப்பிட்ட காலகட்டத்தில் வாய்க்கும் உச்சத்திற்கு இந்த வெற்றிக் கூட்டணிகளே காரணம்..ஆனால் பலரும் இசையமைப்பாளரை மட்டும் தனியே தூக்கி வந்து வரம்பு மீறிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்..
எழுபதுகளின் இறுதியில் காதலின் மலர்ச்சியையும், எண்பதுகளில் காதலின் தழுவல் மற்றும் பிரிவையும், தொண்ணூறுகளில் காதலின் துள்ளல் மற்றும் தவிப்பையும், இரண்டாயிரங்களில் காதலின் கிசுகிசுப்பையும் நம் உணர்வுகளுக்கு கடத்தியவர்களில் முந்தி நிற்பவர் அவரன்றி வேறு யார்?
எம்எஸ்வி, இளையராஜா, ரஹ்மான் மட்டுமல்ல எஸ்பிபியும் தமிழ் திரையிசையின் மிக முக்கியமான அடையாளம்தான்..
* மானசீகன்
