சினிமா

எஸ்பிபி நல்ல நல்ல பாடல்களை மட்டும் தந்து விட்டுப் போகவில்லை.

நல்ல நல்ல பாடங்களையும் கூட

சமீபத்தில் நடிகர் பிரபுவின் பேட்டி ஒன்றை பார்த்தேன். அதில் எஸ்பிபி பற்றி சுவாரஸ்யமான விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தார் பிரபு.

‘அடிமைப்பெண்’ படம் வந்த சமயத்தில் சிவாஜியும் பிரபுவும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

அப்போது பிரபு ஆடியோ பிளேயரை ஓட விட்டிருக்கிறார். ‘ஆயிரம் நிலவே வா’ பாடல் ஒலித்திருக்கிறது.

பாடலை கேட்க கேட்க சிவாஜியின் முகம் ஆச்சரியத்தில் மலர்ந்தது. பக்கத்திலிருந்த பிரபு இதை பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார்.

பாடல் முடிந்ததும் சிவாஜி பிரபுவிடம்,

“பிரபு, இன்னொரு தடவை அந்த பாட்டை போடு.”

மறுபடியும் பாடல்.

கண்களை மூடி தலையை ஆட்டி ரசித்துக் கொண்டிருக்கிறார் சிவாஜி. பாட்டு முடிந்தது.

“பிரபு…”

“என்னப்பா ?”

“இன்னும் ஒரு தடவை அதை பிளே பண்ணு.”

மீண்டும்… மீண்டும்… மீண்டும்…

பிரபு அந்த பேட்டியில் சிரித்துக்கொண்டே சொல்கிறார். “மொத்தம் 50 தடவைக்கு மேலே ‘ஆயிரம் நிலவே வா’ பாடலை ரசித்து கேட்டார் அப்பா.

அதற்கு பிறகு என்னிடம் கேட்டார். ”இந்தப் பாட்டை பாடியது யாருப்பா ?”

பிரபு சொல்லியிருக்கிறார்.

“புதுசா எஸ் பி பாலசுப்ரமணியம்னு ஒருத்தர் வந்திருக்காருப்பா. அவர்தான் இதைப் பாடி இருக்கார்.”

சிவாஜி தலையை மேலும் கீழும் அசைத்துக்கொண்டே, “பிரபு, என்னோட அடுத்த படத்துல இந்த பையனை பாட வைக்கணும். விச்சு கிட்ட (MSV) இது விஷயமா உடனே பேசணும்.”

அப்படித்தான் சிவாஜிக்கு ‘பொட்டு வைத்த முகமோ’ பாடலை பாடியிருக்கிறார் எஸ்பிபி,

‘சுமதி என் சுந்தரி’

திரைப்படத்தில்.

இந்த செய்தியை அந்த பேட்டியில் சொன்ன பிரபு, இன்னொரு விஷயத்தையும் சொன்னார்.

“எஸ்பிபி அண்ணனை பொறுத்தவரை நிறைவான குணங்கள் நிறைய அவர்கிட்ட உண்டு. பல தடவை நான் அதை பார்த்திருக்கிறேன்.

அவரைப் பாராட்டி நான் ஏதாவது பேச ஆரம்பித்தால், என்னை தடுத்து நிறுத்திவிட்டு அவர் பக்கத்தில் இருப்பவர்களிடம் என்னைப் பாராட்டி இப்படி பேச ஆரம்பிப்பார் எஸ்பிபி அண்ணன்.”

“பிரபுவோட நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்.

‘என்னவென்று சொல்வதம்மா’ பாட்டை ராஜகுமாரன் படத்துக்காக நான் பாடியிருந்தேன். அந்த பாட்டுக்கு பிரமாதமான எக்ஸ்பிரஷன் கொடுத்திருந்தார் பிரபு. அதனாலதான் அந்த பாட்டு ஹிட் ஆச்சு” என்று சொல்வாராம் எஸ்பிபி.

இதைக் கேட்டவுடனே நெகிழ்ந்து போய், பேச்சு வராமல் நிற்பாராம் பிரபு.

அதற்குள் எஸ்பிபி பக்கத்தில் இருப்பவர்களை நோக்கி, “டூயட் படம் பாத்திருக்கீங்களா ?

அதுல பிரபு சாக்சபோன் வாசிக்கிற அழகிருக்கே… பியூட்டிஃபுல்.”

இதை உண்மையாகவே கண்களை மூடி மெய்மறந்து சொல்வாராம் எஸ்பிபி.

இதையெல்லாம் அந்தப் பேட்டியில் சொன்ன பிரபு, நெகிழ்ந்து போய் இப்படி சொல்கிறார்.

“நாமும் கவனிக்காத, மற்றவர்களும் நம்மிடம் சொல்லாத எத்தனையோ சின்னச் சின்ன நுணுக்கமான விஷயங்களையெல்லாம் பெரிதாக பாராட்டுவார் எஸ்பிபி.

அதனால்தான் எல்லோரும் அவரை இன்னமும் அவங்க மனசில வைத்து கொண்டாடுறாங்க.”

இப்படி சொல்லி அந்தப் பேட்டியை நிறைவு செய்தார் பிரபு.

இதில் மிகப்பெரிய பாடம் ஒன்று ஒளிந்திருக்கிறது.

மற்றவர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை நாம் தேட ஆரம்பித்தால்,

நெகட்டிவான விஷயங்களைப் பற்றி நினைக்க கூட நமக்கு நேரம் இருக்காது.

எஸ்பிபி நல்ல நல்ல பாடல்களை மட்டும் தந்து விட்டுப் போகவில்லை.

நல்ல நல்ல பாடங்களையும் கூட

நமக்கு தந்து விட்டுப் போயிருக்கிறார்.

இன்று எஸ்.பி.பி.யின்

பிறந்த நாள்.

(4 June 1946)

John Durai Asir Chelliah

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button