ஹைக்கூவைக் கொண்டாடுவோம்/கவிக்கோ நினைவைப் போற்றுவோம்!

கவிக்கோ நினைவைப் போற்றுவோம்!
கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு நாள் விழாவும், கவிக்கோ ஹைக்கூ போட்டி 2023 பரிசு வழங்கும் விழாவும், போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுதியான ‘சூரியனைச் சுமந்து செல்லும் பாட்டி’ நூல் வெளியீட்டு விழாவும் கவிக்கோ நினைவு நாளான கடந்த ஜூன் இரண்டாம் தேதி மாலை சென்னை தி. நகர் பிட்டி தியாகராஜர் அரங்கில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்ற ஆண்டைப் போலவே ஹைக்கூ கவிஞர்களும், ரசிகர்களும் உற்சாகமாகக் கலந்து கொண்டனர்.
பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் தலைமை ஏற்று உரையாற்ற, கவிஞர் மனுஷ்யபுத்திரன் ‘கவிக்கோவும் ஹைக்கூவும்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். கவிக்கோ குறித்தும் ஹைக்கூ குறித்தும் சிறப்பான உரைகளாக அவை அமைந்தன.
விழா நோக்க உரையை இயக்குனர் என்.லிங்குசாமி ஆற்றி கவிக்கோவுடனான தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். பின் பரிசு பெற்ற கவிஞர்களுக்கு சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டன.
அடுத்த ஆண்டில் இருந்து முதல் மூன்று பரிசுகளுக்கான ₹50,000/- தொடர்வதோடு ஊக்கப் பரிசான ₹1000/- பெறும் கவிதைகளின் எண்ணிக்கையை 50-இல் இருந்து 100 ஆக உயர்த்த விரும்புவதாக இயக்குனர் லிங்குசாமி தெரிவித்தது பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
கவிஞர்கள் ஜெயபாஸ்கரன், இளம்பிறை ஆகியோர் கவிக்கோ நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதோடு அவரது கவித்துவ ஆளுமை குறித்தும் குறிப்பிட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளைப் பற்றி கவிஞர் தங்கம் மூர்த்தி அழகான ஒரு உரையாற்றினார்.
பரிசு பெற்ற கவிஞர்களுக்கான வாழ்த்துரையை விஷ்ணு அசோசியே சிவக்குமார் அவர்கள் வழங்கினார்கள்.
போட்டியில் வென்ற கவிஞர்களின் சார்பாக கவிஞர் ஏகாதசி ஏற்புரை வழங்கினார்.
டிஸ்கவரி புக் பேலஸ் மு. வேடியப்பன் வரவேற்புரை ஆற்ற நான் நன்றி கூறி விழா இனிதே நிறைவுற்றது.
அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரும்பாலானவர்கள் உணவருந்தி ஒருவரோடு ஒருவர் அளவளாவி விடைபெற்றது ஒரு குடும்ப உணர்வை உருவாக்கியது .
விழா தொடங்க சிறிது காலதாமதம் ஆனதால் நிறைவதற்கும் சிறிது கால தாமதம் ஏற்பட்டது. அடுத்தடுத்த ஆண்டு விழாக்களில் இது சரிசெய்யப்படும்.
அனைவரது உரையும் YouTube இல் பதிவேற்றப்பட்டு வருகிறது. அவற்றை ஒவ்வொன்றாக பகிர்கிறேன். நேரில் வர இயலாதவர்கள் காணொளியில் கண்டு மகிழலாம்.
கவிக்கோ நினைவு ஹைக்கூ போட்டி மூலம் ஆண்டுதோறும் எண்ணற்ற கவிஞர்கள் சிறப்பான தடம் பதித்து வருவது தமிழ் ஹைக்கூ வரலாற்றில் எதிர்காலத்தில் குறிக்கப்படும் என்பது என் திண்ணமான எண்ணம்.
கவிக்கோவின் ஹைக்கூ கனவை நிறைவேற்றுவதில் தொடர்ந்து பயணித்து அவர் புகழ் போற்றி புதிய படைப்பு சக்திகளை ஊக்குவிப்போம்.
விழாவை சிறப்பித்த அனைவருக்கும் மனம் நெகிழ்த அன்பு. பத்திரிகை, ஊடகங்களில் செய்தி பகிர்ந்து வரும் நண்பர்களுக்கு இதயம் நிறைந்த நன்றி .
ஹைக்கூவைக் கொண்டாடுவோம்
கவிக்கோ நினைவைப் போற்றுவோம்!
*
பிருந்தா சாரதி
*
