உலக பெருங்கடல் நாள்

உலக பெருங்கடல் நாள் 🐌🦋🐛🐳🐋🐟🐙🦐🦑🦀🦈🐠🐟🐡🐸🐧🐊கடற்கரையோரமாய் காத்திருக்கின்றேன். கரைக்கும் கடலுக்குமிடையில் ஒரு எல்லைப் போட்டி நடந்து கொண்டிருக்கின்றது. சில காலம் கடல் வென்றுவிடுகிறது. சில காலம் கரை கடலை துரத்தி தன்னை மீட்டு விடுகிறது..
இதனால் கடலுக்கும் கரைக்கும் திட்டமானதொரு எல்லை இருப்பதேயில்லை. ஆனாலும் பலஸ்தீனை அரிக்கின்ற இஸ்ரேலைப் போல யாரும் அறியாதவாறு கடல், கரையை விழுங்கிக் கொண்டுதான் இருக்கிறது..
கடலுக்கு சொந்தமென்று ஏதுமில்லை. கரையின் மேலே போர்த்திக் கொண்டால் காலம் கழித்து மக்கள் கரையை கடலென்று சொல்லி பழகி விடுவார்கள் என்ற உலகத்தை ஏமாற்றும் தந்திரம் அதற்கும் தெரிந்திருக்கிறது..
கடலுக்கும் வானுக்கும் பிரச்சனை இருப்பதாய் கரைக்கு தெரிவதேயில்லை. அவை தங்கள் எல்லைகளை தெளிவாகத்தான் வகுத்திருக்கின்றன. வானம் கடலுடனும், கடல் வானத்துடனும் எப்போதும் சண்டையிட்டதில்லை..
தொலைதூரத்தில் அவற்றிற்கிடையேயான எல்லைக் கோட்டிற்குள்ளால் புகுந்து வருகின்ற படகொன்று இவ் ஒற்றுமைக்கான இரகசியத்தை அறிந்து கொண்டு கடலைக் கிழித்து மிடுக்குடன் வருகிறது..
வானத்திற்கும் கடலுக்குமிடையில் ஒரு இடைவெளியிருப்பதாய் கரையிடம் ரகசியம் சொல்கிறது. இதோ படகைத் தொடர்ந்து சில பறவைக் கூட்டங்களும் கூட கரையிடம் ஏதோ இரகசியம் முனுமுனுத்துச் சொல்கின்றன..
இடைவெளி என்பது புரிந்துணர்வுக்கு வழிவிடும்தான் என்பதை கரை அறியும். இருந்தாலும் கடலை விட்டும் தூரமாக கரைக்கு எண்ணமில்லை. அநியாயக்காரன் மீதும் அக்கறை கொண்டு பலஸ்தீனையும் வென்றுவிட்டது..
கடலுக்குள் அமிழ்ந்து போன கரையினை தடவி ஆறுதல் சொல்லி வருகின்றது ஏழை மீனவனின் வலை ஒன்று. கரைக்குக் கிடைக்கும் ஒரே ஆறுதல் வலை தன்னிடம் ஒப்புவிக்கின்ற செய்திகள்தான்..
தான் எல்லாம் இழந்து நிற்கும் போதும் தன்னிடம் வந்த விருத்தாளிக்கு பரிசு கொடுத்தனுப்ப மறந்ததில்லை கடலுக்குள் சிக்கியிருக்கும் கரையின் பகுதி. 💙💙💙
மனதின்ஓசைகள்
