முதல் மரியாதை

முதல் மரியாதை
பாரதிராஜா எப்போதோ பார்த்திருந்த ஒரு அயல் சினிமாவில், ஒரு முதிய வயது ஓவியனுக்கும் இளம் பெண்ணுக்கும் இடையில் காதல் ஏற்படுகிறது. இதைப் போலவே ஜெயகாந்தனின் ‘சமூகம் என்பது நாலுபேர்’ என்கிற நாவலின் மையக்கருவும் இதுதான். இந்த இரண்டு படைப்புகளின் அடிப்படையை வைத்து ஒரு புதிய கதையை உருவாக்கச் சொல்லி தனது ஆஸ்தான கதாசிரியரான ஆர்.செல்வராஜை கேட்கிறார் பாரதிராஜா.
ருஷ்ய எழுத்தாளர் தஸ்தாயேவ்ஸ்கிக்கும் அவரது படைப்புகளை எழுதித் தருவதற்கு உதவியாளராக வந்த அன்னாவிற்கும் இடையில் ஏற்படுகிற காதல் என்கிற விஷயம் ஆர்.செல்வராஜை ஈர்க்கிறது. இந்த மையத்தை வைத்துக் கொண்டு தமிழகக் கிராமத்தின் பின்னணியில் மளமளவென்று கதையை எழுதி முடிக்கிறார் செல்வராஜ். அதை வாசித்துப் பார்த்த பாரதிராஜாவிற்கு மிகவும் பிடித்துப் போக உடனே படமாக்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் துவங்குகிறார்.
சிவாஜி நடித்த பாத்திரத்திற்கு முதலில் பரிசிலீக்கப்பட்டவர் நடிகர் ராஜேஷ். ஆனால் படம் வியாபாரம் ஆகுமா என்று விநியோகஸ்தர்கள் ஆட்சேபம் எழுப்பினார்கள். எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பெயரை பரிந்துரைத்தார் செல்வராஜ். ஆனால் பாடகராக பிஸியாக இருந்த எஸ்.பி.பியால் தேதிகளை ஒதுக்க முடியவில்லை. (பின்னர் வந்த ‘கேளடி கண்மணி’யும் வயதானவர்களின் காதலைப் பேசிய படம்தான்). “சிவாஜியை அணுகிப் பார்த்தால் என்ன?” என்கிற யோசனை பாரதிராஜாவிற்கு வந்தது. உடல்நலம் சரியில்லாத நிலையிலும் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் சிவாஜி.
நன்றி: விகடன்