கணிதமேதை இராமானுஜர்

கணிதமேதை இராமானுஜர் காலமான தினமின்று!
ஈரோட்டில் பிறந்தவரென்றாலும் இங்கிலாந்து போய் கணிதத் துறையில் உச்சம் தொட்டவர் இந்த ராமானுஜன்.
கோயிலில் சாக்பீஸ் கொண்டு வரைந்து கணக்கு போட்டுவிட்டு அதற்கான விடைகளை கனவில் தேடிய அற்புதம் அவர் .பூஜ்யத்துக்கு மதிப்பு இல்லை என ஆசிரியர் வகுப்பில் சொன்ன பொழுது ;பூஜ்யத்தை ஒரு எண்ணுக்கு பின்னாடி போட்டால் மதிப்பு வருகிறதே என கேட்ட பொழுது அவருக்கு வயது பத்துக்குள்
தந்தை துணிக்கடையில் கணக்காளராக இருந்தார். ஏழு வயதில் ஸ்காலர்ஷிப் பணம் பெற்று கும்பகோணத்தில் கல்வி பயின்றார். : பள்ளி பருவத்திலேயே பல கணித இணைப்பாடுகளை (பார்முலா) மனப்பாடம் செய்து ஒப்புவித்தலில் திறன் பெற்று, கலைமகளின் பூரண அருள் பெற்றவராக ஆனார்.
‘பை’ யின் மதிப்பை பல தசமத்தில் நண்பர்களிடம் தெளிவாக சொல்லி புரியவைத்துள்ளார்.
1917 ம் ஆண்டு இங்கிலாந்து பல்கலை எப்.ஆர்.எஸ்., (FRS) பட்டம் ராமானுஜத்திற்கு வழங்கியது. டிரினிடி கல்லுாரி ‘பெல்லோஷிப்’ பெற்றும் பெருமையும் சேர்த்தார். தனது வாழ்நாளில் ஆறாயிரம் தேற்றங்கள் அடங்கிய நுாலினை எழுதி, அறிஞர்களை வியக்க செய்தவர் இவர்.
ராமானுஜம் காசநோயால் முப்பத்தி மூன்று வயதில் இதே ஏப்ரல் 26ல் மரணம் அடைந்தார் .அப்பொழுது அவருக்கு நிகழ்ந்தது பெருங்கொடுமை . கடல் கடந்து போனதற்காக அவரை ஜாதி விலக்கு செய்திருந்தார்கள் . அவர் மரணத்தின் பொழுது இறுதிச் சடங்குகளைச் செய்ய மறுத்தார்கள். அன்றைய ஹிந்து இதழ் ஆசிரியரின் முயற்சியால் ஒருவர் சடங்கு செய்ய முன்வந்தார். மொத்தமாகவே ஆறேழு பேர்தான் சுடுகாடு வரை சென்றார்கள். காலங்கள் கடந்தாலும் மேதைகளுக்கு இதுதான் நிலைமை போலும். ஆங்கிலத்தில் தேறாமல் இந்தியாவை விட்டு கிளம்பி தன் அறிவு வெளிச்சத்தால் கணித உலகின் துருவ நட்சத்திரமாக திகழும் ராமானுஜத்தின் நினைவு நாள் இன்று.