திசைகள்

அன்று வார இதழ்களில் குறிப்பிட்ட ஆறு அல்லது ஏழு எழுத்தாளர்களே மாறி மாறி எழுதிக் கொண்டிருந்தனர். நான்கு அல்லது ஐந்து ஓவியர்களே படம் வரைந்து கொண்டிருந்தனர். நம் வார இதழ்களில் இளைஞர்களுக்கு இடமில்லை, அவை இளைஞர்களைப் பிரதிபலிப்பதாக இல்லை என்று நான் சாவி ஆசிரியர் குழுக் கூட்டங்களில் தொடர்ந்து வாதிட்டு வந்தேன்.
குங்குமம் வார இதழில் இருந்து விலகிய பின் ஆசிரியர் சாவி தனது சொந்த இதழான சாவி வார இதழைத் துவக்கிய போது, அதற்கு அவ்வப்போது ஆலோசனைகள் சொல்ல, என் நண்பர்களான பாலகுமாரன், சுப்ரமண்ய ராஜு, ஆகியோரையும் என்னையும் அழைத்திருந்தார். நாங்கள் அந்த இதழின் முழு நேர ஊழியர்கள் அல்ல. சாவி வார இதழ் ஓராண்டை நிறைவு செய்த நேரத்தில், ஆசிரியர் சாவி ஐரோப்பிய நாடுகளுக்கு மூன்று மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் வெளி நாட்டுக்குக் கிளம்பும் முன் என்னை அழைத்து ” பத்திரிகையை உங்கள் பொறுப்பில் விட்டுச் செல்கிறேன். நான் திரும்பி வரும் வரை சாவி இதழுக்கு நீங்கள்தான் அறிவிக்கப்படாத (defacto) ஆசிரியர்” என்று சொன்னார். எனக்கு அது ஒரு இனிய அதிர்ச்சி. நான் அப்போது சாவி வார இதழின் முழு நேர ஊழியர் அல்ல. ஏன் முழு நேரப் பத்திரிகையாளனும் அல்ல. எந்த வெகுஜன இதழிலும் எந்தப் பொறுப்பிலும் இருந்ததில்லை. சாவி வார இதழோ அப்போது வெளிவந்து கொண்டிருந்த இதழ்களில் ஜூனியர். நாற்பது ஐம்பது வருடங்களாக வந்து கொண்டிருந்த இதழ்களுக்கு நடுவே ஒரே ஒருவருடத்தை நிறைவு செய்திருந்த இதழ். அதன் selling pointஏ ஆசிரியர் சாவிதான். சாவி இதழ் என் பொறுப்பில் இருந்த போது, உள்ளடக்கம், விற்பனை இரண்டிலும் தொய்வு ஏற்பட்டுவிடாமல் அதை நடத்திய விதம் சாவிக்கு மிகுந்த மனநிறைவைத் தந்தது. சிறிது நாள்களிலேயே, என்னை ஆசிரியராக அறிவித்து ஒரு வார இதழை வெளியிட்டார்.
அதுதான் திசைகள். அந்த இதழை முழுக்க முழுக்க என் விருப்பப்படி நடத்த முழு சுதந்திரம் தந்தார். நான் அதில் தமிழ் எழுத்துலகிற்கு முற்றிலும் புதியவர்கள் எழுத, ஓவியங்கள் வரைய இடமளித்தேன். அவர்களில் பலர் இன்றும் ஊடகங்களில் வெற்றிகளைக் குவித்து வருகிறார்கள்.
– மாலன்
நன்றி: குங்குமம்