சங்க இலக்கியங்களில் தோழி/காக்கையால் கவலையற்று இருந்தாள்

காக்கையால் கவலையற்று இருந்தாள்
—————————————————————
வீட்டுக் கூரையின் மேல் அவ்வப்போது காக்கை உட்கார்ந்து கரைவதுண்டு.
இதனை அவ்வீட்டிற்கு விருந்தினர் வருவதற்கு அடையாளம் என்பர்.
இது ஒரு பழைய நம்பிக்கை.
இந்த நம்பிக்கை இன்றும் தமிழகத்தில் நிலவி வருகிறது.
இந்த நம்பிக்கை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களிடம் குடி கொண்டிருந்தது என்பதை இப்பாடல் அறிவிக்கிறது.
பிரிந்து சென்ற தலைவன் தனது வேலையை முடித்துக் கொண்டு திரும்பி வருகிறான்.
நெடுங்காலம் பிரிவை எவ்வாறு தலைவி தாங்கியிருந்தாள் என்று வியக்கிறான்.
நான் பிரிந்து போயிருந்த காலத்தில் தலைவிக்குத் துணையாய் இருந்து ஆறுதல் கூறி நீதான் அவளைக் கலங்க விடாமல் கவனித்து வந்திருக்கிறாய்;
நீ இல்லாவிட்டால் எனது பிரிவால் ஏற்பட்ட துன்பத்தைத் தலைவியினால் தாங்கிக் கொண்டிருந்திருக்க முடியாது எனறு தோழியைப் பார்த்துக் கூறுகிறான்.
அதற்குக் காரணம் நானல்ல; விருந்தினர் வருகிறார் என்று கூவிக் கரைந்து உணர்த்திய காக்கைதான் காரணம் எனக் கூறி நகைமுகம் காட்டுகிறாள் தோழி.
தோழி கூறியதன் பொருள் புரியாததால் அவள் முகத்தை ஏறிட்டு நோக்குகிறான் தலைவன்.
தோழி கூறுகிறாள்:-
ஒருவருடைய வீட்டுக் கூரையிலோ அல்லது வாசலிலோ நின்று காக்கை கரைந்தால் அவர் வீட்டுக்கு விருந்தினர் வருவர் என்பது நம்முடைய நம்பிக்கை.
அதனால், உங்கள் வீட்டுக் கூரையில் நின்று காக்கை கரைவதற்காக நான் அதற்குத் தினமும் கொஞ்சம் உணவு வைப்பேன்.
ஒவ்வொரு நாளும் நான் கொடுக்கும் சிறிய அளவிலான உணவை விரும்பி வரும் காக்கை கரைவதைக் காட்டி நீ வந்து விடுவாய் என்று சொல்லித் தலைவியின் துன்பத்தைப் போக்கினேன்.
எனவே அந்தக் காக்கைக்கு நாள்தோறும் வைக்கும் வெறும் சோற்று உருண்டயை விட மிகச் சிறந்த விருந்து ஒன்றினை வைக்க வேண்டும்.
ஆனால், வலிமையான தேரை உடைய நள்ளியின் நாட்டிலே வாழும் ஆயர்கள் வளர்க்கும் ஏராளமான பசுக்கள் தந்த நெய்யுடன், தொண்டி வயல்களில் விளைந்த வெண்ணெல் அரிசி முழுவதையும் கொண்டு ஆக்கிய சோற்றைக் கலந்து பல கலங்களில் அளித்தாலும், என் தோழியின் துயரைப் போக்கிட அந்தக் காக்கை செய்த உதவிக்கு ஈடாகாது.
இவ்வாறு ஒரு புதுமையான, சுவையான காரணமாகத் தோழி கூறிய பதில்தான் இந்தக் குறுந்தொகைப் பாடல்.
“திண்தேர் நள்ளி கானத்து, அண்டர்
பல்ஆ பயந்த நெய்யில், தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்நெல் வெஞ்சோறு
எழுகலத்து ஏந்தினும் சிறிது, என்தோழி
பெருந்தோள் நெகிழ்ந்த செல்லற்கு
விருந்து வரக்கரைந்த காக்கையது பலியே!”
(குறுந்தொகை 210)
இது காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் என்னும் பெண்பாற் புலவர் எழுதிய பாட்டு.
நச்செள்ளை என்பது இவர் இயற்பெயர். காக்கைப் பாடினியார் என்பது சிறப்புப் பெயர்.
காக்கையைப் பற்றி இப்படியொரு புதுமையான சுவையான காரணத்தைப் புலவர் பாடியதால் இச்சிறப்புப் பெயர் பெற்றார்.
திண்தேர் – வலிமையான தேர்
நள்ளி – ஏழு வள்ளல்களில் ஒருவன்
கானத்து – காட்டில்
இங்கே கானம் என்பது காடும் காடு சார்ந்த இடமுமாகிய முல்லை நிலத்தைக் குறிக்கிறது.
அண்டர் – ஆயர்
பல்ஆ – பல பசுக்கள்
பயந்த – தந்த
தொண்டி – தொண்டி என்னும் ஊர்
நெகிழ்ந்த – மெலிந்த
செல்லல் – துன்பம் / துயர்
காக்கையது பலி – காக்கையின் உணவு
காக்கைக்கு உணவிடுவது பழந்தமிழ் நாட்டு வழக்கம்.
இன்றும் இவ்வழக்கம் தொடர்கிறது.
தலைவன் இன்னும் வரவில்லை என்பது குறித்துத் தலைவி வருந்தாமல் இருப்பதற்காக நாள்தோறும் காக்கைக்கு உணவிட்டு வந்தாள் தோழி.
அக்காக்கைகள் கூரையில் உட்கார்ந்து கரைவதைக் கேட்டுத் தலைவி வருந்தாமல் இருந்தாள்.
இது தலைவியின் கவலையைப் போக்கத் தோழி செய்த தந்திரம்.
நள்ளி: கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய இவன் கண்டீரக் கோப்பெருநள்ளி எனவும் அழைக்கப்படுகிறான்.
தொண்டி: மேற்குக் கடற்கரையில் உள்ளது. சேரர்களின் துறைமுகப் பட்டினம்.
இப்பாடல் தோன்றிய காலத்தில் தொண்டி சிறந்த துறைமுகமாக விளங்கியிருக்க வேண்டும்.
நள்ளியின் நாட்டிலே வளர்ந்த பசுவின் நெய்யும் தொண்டியிலே விளைந்த நெல்லும் மிகுந்த சுவை உள்ளவை என்பதை இப்பாட்டினால் அறிய முடிகிறது.
தே. ஆர்தர்
