திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றிய நாள்!

திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றிய நாள்!
************************************************
இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் 20 ஆண்டு காலம் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ், 1967 தேர்தலில் தோல்வி அடைந்தது.
ஆட்சியை தி.மு.கழகம் கைப்பற்றியது. புதிய முதல்_அமைச்சராக தி.மு.கழக தலைவர் அண்ணா பதவி ஏற்றார்.
பதவி ஏற்பு விழா 1967 மார்ச் 6_ந்தேதி, சென்னை ராஜாஜி மண்ட பத்தில் நடந்தது. கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில்தான் பதவி ஏற்பு விழா நடைபெறுவது வழக்கம். முதல் முறையாக, ராஜாஜி மண்டபத்தில் நடைபெற்றது.
பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு, ராஜாஜி மண்டபத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் காவல் போடப்பட்டு இருந்தது. குதிரைப் படையினரும், ஆயுதப் படையினரும் சுற்றிலும் நின்று காவல் புரிந்தார்கள். முன் அனுமதி பெற்றவர்களைத்தவிர வேறு யாரும் மண்டபத்தின் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால், மண்டபத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான தி.மு.கழக தொண்டர்கள் கொடிகளுடன் நின்று கொண்டு இருந்தார்கள்.
அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள நெடுஞ்செழியன், கருணாநிதி, மதியழகன், சத்தியவாணிமுத்து, கோவிந்தசாமி, சாதிக்பாட்சா, மாதவன், முத்துசாமி ஆகியோர் 9.50 மணிக்கு மண்டபத்தின் உள்ளே வந்தார்கள். அவர்களை தமிழ்நாடு அர சாங்க தலைமை செயலாளர் சி.ஏ.ராமகிருஷ்ணன் வரவேற்றார்.
அமைச்சர்கள் அனைவரும் அவர்களுக்காக மேடையில் அமைக்கப்பட்டு இருந்த இடங்களில் உட்கார்ந்தார்கள். சரியாக 9.56 மணிக்கு அண்ணா வந்தார். அவரை தலைமைச் செயலாளர் வரவேற்றார். பிறகு தமிழ்நாடு கவர்னர் உஜ்ஜல்சிங், அவர் மனைவியுடன் வந்தார்.
கவர்னருக்கு அண்ணா வணக்கம் தெரிவித்தார். மற்ற அமைச்சர்களை கவர்னருக்கு அறிமுகம் செய்து வைத்தார். பிறகு மேடையின் மத்தியில் கவர்னர் உட்கார்ந்தார். அவருக்கு வலது புறத்தில் அண்ணா, நெடுஞ் செழியன், கருணாநிதி, மதியழகன் ஆகியோரும், இடது புறத்தில் கோவிந்தசாமி, சத்தியவாணி முத்து, மாதவன், சாதிக்பாட்சா, முத்துசாமி ஆகியோரும் அமர்ந்தனர்.
பதவி ஏற்பு விழா 10 மணிக்கு தொடங்கியது. தலைமை செயலாளர் ராமகிருஷ்ணன் முதலில் அண்ணாவின் பெயரைச் சொல்லி அழைத்தார்.
உடனே அண்ணா பதவி ஏற்புக்காக இருந்த மேஜைக்கு வந்தார். பதவி ஏற்பு உறுதிமொழியை, கவர்னர் ஆங்கிலத்தில் படித்தார். அதன்பின் அண்ணா அந்த உறுதிமொழியை தமிழில் வாசித்தார். பின் “ரகசியகாப்பு” பிரமாணத்தை கவர்னர் ஆங்கிலத்தில் படிக்க அதன்பின் அண்ணா தமிழில் அதையும் படித்து கையெழுத்து போட்டார்.
அமைச்சர்கள் நெடுஞ்செழியன், கருணாநிதி, மதியழகன், கோவிந்தசாமி, சத்தியவாணிமுத்து, மாதவன், சாதிக்பாட்சா, முத்துசாமி ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக வந்து, உறுதி மொழியை படித்து பதவி ஏற்றார்கள்.
பதவி ஏற்பு முடிந்ததும் அவர்கள் அனைவரும் கவர்னருடன் போட்டோ எடுத்துக்கொண்டார்கள். பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு வெளிநாட்டு பத்திரிகை நிருபர்களும், புகைப்படக்காரர்களும் வந்திருந்தார்கள்.
பதவி ஏற்பு நிகழ்ச்சியைக்காண சுதந்திரா கட்சித்தலைவர் ராஜாஜி, தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம், பழைய மந்திரி வெங்கடராமன், பழைய சபாநாயகர் செல்லபாண்டியன், மாணிக்கவேலர் ஆகியோர் வந்திருந்தனர்.
அண்ணாவின் மனைவி ராணி அம்மாள், மகன்கள், மருமகள்கள் ஆகியோரும் நெடுஞ்செழியன், கருணாநிதி குடும்பத்தினரும் வந்திருந்தனர். பதவி ஏற்பு விழா முடிந்ததும், அண்ணாவும், மற்ற அமைச்சர்களும் ராஜாஜியிடம் சென்றார்கள். அவர்களை ராஜாஜி வாழ்த்தினார். பழைய மந்திரி வெங்கடராமன் கை குலுக்கினார். 10.35 மணிக்கு மண்டபத்தை விட்டு அண்ணா வெளியே வந்தார். வெளியே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செயதார்கள்.
அமைச்சர்களை நோக்கி மாலைகளையும், பூக்களையும் வீசினார்கள். கூடி இருந்தவர்களை நோக்கி அண்ணா கைகளை அசைத்தார்.
பிறகு அண்ணாவும், மற்ற அமைச்சர்களும் கார்களில் கோட்டைக்கு (தலைமைச் செயலகம்) சென்றார்கள். அண்ணாவின் “அம்பாசிடர்” கார் கோட்டைக்குள் நுழைந்தது. அதைத்தொடர்ந்து மற்ற மந்திரிகள் அவரவர் கார்களில் வந்தனர்.
வாசலில் அண்ணாவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சொக்கலிங்கமும், மற்ற அதிகாரிகளும் அவரை வரவேற்றார்கள். மாடியில் உள்ள முதல்-அமைச்சர் அறைக்கு அழைத்துச் சென்றார்கள்.
சரியாக 10.43 மணிக்கு, முதல்-அமைச்சரின் அறைக்குள் அண்ணா நுழைந்து, நாற்காலியில் அமர்ந்தார். அமைச்சர்கள் நெடுஞ்செழியன், கருணாநிதி மற்ற அமைச்சர்கள் அந்த அறைக்கு வந்து உட்கார்ந்தார்கள்.
சுதந்திரா கட்சியைச் சேர்ந்த தலைவர் சா.கணேசன், அண்ணாவுக்கும், மற்ற அமைச்சர்களுக்கும் ரோஜாப்பூ மாலை போட்டு வாழ்த்து தெரிவித்தார்.
பிறகு அண்ணா ஒவ்வொரு அமைச்சரையும் அவரவர் அறைக்கு அழைத்துச்சென்று, விட்டு வந்தார். அண்ணாவின் மேஜையில் வைப்பதற்காக, திருவள்ளுவர் படம் ஒன்றை அன்பில் தர்மலிங்கம் வழங்கினார். மற்ற அமைச்சர்களுக்கு அண்ணாவின் படத்தை கொடுத்தார்.
அண்ணாவுக்கும், மற்ற அமைச்சர்களுக்கும் வாழ்த்து தெரிவிப்பதற்காகவும், மாலைகள் போடுவதற்காகவும் ஏராளமானபேர் கூடி இருந்தனர். அவர்கள் சாரிசாரியாக வந்து மாலை அணிவித்தனர்.
பழைய மேயர்கள் முனுசாமி, மோசஸ், நகரசபை உறுப்பினர் கள் ஆகியோரும் மாலை அணிவித்தனர்.
தமிழக சட்டசபை தேர்தல் நடந்த அதே நேரத்தில், இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தலும் நடந்தது. பல மாநிலங்களில் காங்கிரஸ் தோற்றபோதிலும், குறைந்த மெஜாரிட்டியுடன் மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார்.
அண்ணா பதவி ஏற்றபின், அவருடன் டெல்லியில் இருந்து பிரதமர் இந்திரா காந்தி டெலிபோனில் பேசினார்.
“தமிழ்நாட்டில் புதிதாகப் பதவி ஏற்றுள்ள தி.மு.க. அமைச்சரவைக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார். அவர் தொடர்ந்து பேசுகையில், “தி.மு.க. அரசுக்கு, மத்திய அரசு முழு ஒத்துழைப்பையும் அளிக்கும்” என்று தெரிவித்தார்.
இந்திரா காந்தியின் வாழ்த்துக்கு அண்ணா நன்றி கூறினார். அண்ணா அமைச்சரவையில், மொத்தம் 9 பேர் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் இலாகா விவரம் வருமாறு:_
1. அண்ணா: முதல்-அமைச்சர் பொறுப்புடன் நிதி, உள்துறை இலாகாக்கள்.
2. இரா.நெடுஞ்செழியன்: கல்வி.
3. கருணாநிதி: பொதுப்பணி.
4. மதியழகன்: உணவு.
5. கோவிந்தசாமி: விவசாயம்.
6. சத்தியவாணிமுத்து: ஆதிதிராவிடர் நலம்.
7. மாதவன்: சட்டம்.
8. சாதிக்பாட்சா: மக்கள் நல்வாழ்வுத்துறை.
9. முத்துசாமி: உள்ளாட்சி.
தகவல்: கட்டிங் கண்ணையா!