தி. ஜானகிராமன்,

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்
தி. ஜானகிராமன்,
சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் பிறந்தநாள் இன்று.
சரியாக இனம் கண்டுகொள்ளப்பட்டிருந்தால் தமிழ் இலக்கியச் சூழலில் தீர்க்கமான கலையுணர்வு இருந்திருக்குமானால் ‘மோகமுள்’ எழுதிய கைகளுக்கு முதல் ஞானபீடப் பரிசு கிடைத்திருக்கும். தமிழ்நாட்டில், இன்றைய தமிழ்நாட்டில் அது அமிழ்ந்திருக்கும் ரக அறிவார்த்த கலைச்சூழலில் எந்த ஒரு கலைஞனும் அறிவாளியும் சிலுவை சுமக்கப் பிறந்தவன்தான். தி.ஜானகிராமன் அதிர்ஷ்டவசமாக, அல்லது அவருக்கிருந்த அவர் எழுத்துக்கிருந்த இனிமை, கவர்ச்சி காரணமாக அவருக்கிருந்த அடங்கிப்போகும் சுபாவம் காரணமாக சிலுவை சுமக்க நேர்ந்ததில்லை.
இன்னமும் ஒரு ஆரோக்கியமான கலையுணர்வுள்ள சூழலில் தி.ஜானகிராமன் தந்திருக்ககூடிய அளவு, அவர் தரவும் இல்லை. அவரது திறன்கள் ஒரு பூரணத்துவத்துடன் மலர, இலக்கிய சமூகம் இடம் தந்ததில்லை. சமூகத்துடன் முரட்டுத்தனமாக முரண்படும், போரிடும் சுபாவம் அவரதல்ல. இயல்பிலேயே அடங்கிப்போகும் ‘சரிதான்’ என்று ஒதுங்கிப் போகும் சுபாவம் கொண்டவர்.
அவர் எழுத்து, அவரது ரசனை, அவரது விருப்பு வெறுப்புகள் எல்லாம் – அவரது கிண்டலும், நமட்டுச் சிரிப்பும்கூட – எல்லாமே அவர் பிறந்த தஞ்சை மண்ணின் குணங்கள். அவர் தொட்டது, செய்தது எல்லாமே தஞ்சை மண்ணின் குணம் கொண்டவை.
அவர் காலத்திய அவருக்குச் சற்று மூத்த எழுத்தாளர் பலர், தஞ்சை மண்ணைச் சேர்ந்தவர்கள்தாம். ஏன், ஒரு சில பத்துக்கள் முந்திய எழுத்தாளர் பெரும்பாலோர் தஞ்சை மண்ணின் பிரபுக்கள்தாம்.
ஆனால் தஞ்சை மண்ணின் விசேஷ குணமான சங்கீதம், தி.ஜானகிராமனின் எழுத்துக்களில் மலர்ந்தது போல பரப்பிலும் ஆழத்திலும் வியாபகம் பெற்றது போல வேறு எவர் எழுத்திலும் பெற்றதில்லை.
– வெங்கட் சாமிநாதன்
எஸ்.வி.சகஸ்ரநாமம் வீட்டில்தான் தி.ஜானகிராமனைப் பார்த்தேன். அவருடைய ‘நாலு வேலி நிலம்’, ‘வடிவேலு வாத்தியார்’ முதலிய நாடகங்களை சகஸ்ரநாமம்தான் மேடையேற்றினார். நாலு வேலி நிலம் திரைப்படமாகக் கூட வந்தது. அதில் சகஸ்ரநாமத்துக்குப் பெரிய நஷ்டம். நாலு வேலி நிலத்தை சாதாரணமா ஆயிடக் கூடிய கதையை, ரொம்ப நன்னா, தளுக்கா எழுதியிருந்தார். வடிவேலு வாத்தியார் சகஸ்ரநாமத்துக்கு அவ்வளவா பிடிக்கலை. அப்புறம் ‘மோகமுள்’ நாவல் வந்தது. அப்போவெல்லாம் ஆயிரத்து நூறு காப்பிகள் போடுவார்கள். மொத்தமா ஸ்டாக் பண்ணி வைப்பார்கள். தயாரான புத்தகங்களை விற்க முடியாதபடி ஒரு சிக்கல் வந்தது. அப்போ என்னிடம் தி.ஜா. “இது கொஞ்சம் ‘unwieldy’ யா இருக்கு, ‘streamline’ பண்ணு,”ன்னார். நானும் அதை எடுத்துக் கொண்டேன். ஆனால் அதை செய்து முடிக்க முடியலை. ஒண்ணு அவர் வயசிலே பெரியவர். அப்புறம் ஒரு அட்மைரரால அந்த வேலையைச் செய்ய முடியாது. ஆனா அந்த மாதி எடிட்டெல்லாம் பண்ணாமலே அந்த நாவல் வெளி வந்து பேரும் புகழும் பெற்றது. சில இடங்கள் அதுலெ பிரமாதமா வந்திருக்கும்.
– அசோகமித்திரன்
நன்றி: சொல்வனம்