மனிதரும் மனிதரே :


திருத்தந்தை புனித காயுஸ் மறைந்த தினமின்று
புனிதரும் மனிதரே : திருத்தந்தை புனித காயுஸ் மறைந்த தினமின்று..
திருஅவையின் 28ம் திருத்தந்தையாக கி.பி. 283 டிசம்பர் 17 முதல் கி.பி. 296 ஏப்ரல் 22 வரை ஆட்சி செய்தவர் திருத்தந்தை புனித காயுஸ். இலத்தீன் மொழியில் காயுஸ் என்னும் பெயருக்கு “மகிழ்ச்சி நிறைந்தவர்” என்பது பொருள். கிறித்தவ மரபுப்படி, திருத்தந்தை காயுஸ், இத்தாலி நாட்டுக்குக் கிழக்கே அட்ரியாட்டிக் கடலோரமாக உள்ள தல்மாசியாப் பகுதியில் சலோனா நகரில் பிறந்தவர். திருத்தந்தை காயுஸ், உரோமைப் பேரரசன் தியோக்ளேசியனின் உறவினர் என்று கூறப்படுகிறது.
“திருத்தந்தையர் நூல்” என்னும் பண்டைக்கால ஏடு தரும் குறிப்பின்படி, திருத்தந்தை காயுஸ், புனித சூசன்னா, புனித திபூர்சியுஸ் ஆகியோரால் மனமாற்றம் பெற்ற பலருக்குத் திருமுழுக்கு கொடுத்தவர் எனத் தெரிகிறது. கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரலாற்று ஏடு ஒன்று தரும் தகவல்படி, புனித சூசன்னாவின் தந்தையின் சகோதரர் திருத்தந்தை காயுஸ் ஆவார். திருத்தந்தை காயுஸ் உரோமை மறைமாவட்டத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்து, திருத்தொண்டர்களின் பொறுப்பில் ஒப்படைத்தார்.
அவரது ஆட்சிக்காலத்தில் புதிய கோவில்கள் கட்டப்பட்டன. கல்லறைத் தோட்டங்களும் உருவாக்கப்பட்டன. அவரது ஆட்சியின்போது உரோமையை ஆண்ட பேரரசர் தியோக்ளேசியன் ஆவார். அம்மன்னரது ஆட்சியின் பிற்பகுதியில் கி.பி. 303 இல் கிறித்தவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டனர். திருத்தந்தை காயுஸ் கி.பி. 296ம் ஆண்டு ஏப்ரல் 22ம் நாள் இறந்தார்.
1854ல் ஜொவான்னி பத்தீஸ்தா ரோஸ்ஸி என்னும் இத்தாலிய அகழ்வாய்வாளர் திருத்தந்தை காயுசின் கல்லறையில் இருந்த கல்லெழுத்தைக் கண்டுபிடித்தார். அப்போது புனித காயுசின் முத்திரை மோதிரமும் கிடைத்தது. திருத்தந்தை எட்டாம் உர்பான், காயுசின் உடலை 1631ல் உரோமை புனித காயுஸ் கோவிலுக்கு மாற்றினார். அக்கோவில் 1880களில் அழிந்ததைத் தொடர்ந்து அவ்வுடல் பார்பெரீனி சிறுகோவிலில் வைக்கப்பட்டது

10Kavi Murasu Praveen and 9 others