பெரியாரின் ஈரோடு வேலைத்திட்டத்தை நீதிக்கட்சியின் வேலைதிட்டமாக்கிய பொப்பிலி அரசர்

பெரியாரின் ஈரோடு வேலைத்திட்டத்தை நீதிக்கட்சியின் வேலைதிட்டமாக்கிய பொப்பிலி அரசர்
பொப்பிலி அரசர் அவர்களின் நினைவு நாள் இன்று
ராமகிருஷ்ண ரங்கா ராவ் என்னும் இயற்பெயர் கொண்ட பொப்பிலி அரசர் பிப்ரவரி 20, 1901 அன்று பொப்பிலி அரச குடும்பத்தில் பிறந்தார். ராமகிருஷ்ண ரங்கா ராவுக்கு ஐரோப்பிய ஆசிரியர்களைக் கொண்டு வீட்டிலேயே கல்வி அளிக்கப்பட்டது. 1921-ல் அவரது தந்தை மறைந்த பின் பொப்பிலியின் பதின்மூன்றாவது அரசராக இவர் அறிவிக்கப்பட்டார்.
நீதிக்கட்சியில் இணைந்தார்
அரசியல் ஆர்வம் கொண்ட பொப்பிலி அரசர் அன்று தென்னிந்தியாவில் பார்ப்பனர் அல்லாதார் உரிமைகளுக்காக உருவான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற நீதிக்கட்சியில் இணைந்து கொண்டார்.
வகித்த பதவிகள்
பொப்பிலி அரசர் ரங்கா ராவ் 1925-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினரானார். 1927 வரை அப்பதவியில் நீடித்தார். 1930-ல் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் விசாகப்பட்டினம் தொகுதியில் நீதிக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இக்காலக்கட்டத்தில் தான் அவர் ஆந்திர பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பணியாற்றினார். 1931-ல் லண்டனில் நடை பெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் இந்திய நிலச்சுவான்தார்களின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார்.
நீதிக்கட்சி சார்பில் முதலமைச்சரானார்
நீதிக்கட்சியின் மூத்த தலைவர்களின் மறைவிற்குப் பின், நீதிக்கட்சியில் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்களை சரிசெய்ய முனிசாமி நாயுடுவை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு நீதிக்கட்சி தலைவரானார். அதன்பின் தந்தை பெரியார், தமிழ்வேல் பி.டி.ராசன் ஆகியோர் உதவியுடன் 1932-ல் பொப்பிலி அரசர் முதலமைச்சரானார். 1936 வரை அப்பதவியில் நீடித்தார்.
பொப்பிலி அரசர் 25.8.1936 முதல் 31.3.1937 வரை முதன்மை அமைச்சராய் இருந்தார். 1936-ல் அவரது ஆட்சிக்காலம் முடிந்தாலும் புதிய இந்திய அரசியல் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதால் புதிய ஆட்சியினர் பதவிக்கு வரும் வரை ஆட்சி நீடித்தது.
அனைத்து வகுப்பினருக்கும் தனி இடஒதுக்கீடு
பொப்பொலி அரசர் சென்னை மாகாண எல்லைக்குள் இயங்கும் எல்லா மத்திய அரசுத் துறை வேலைகளிலும், பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார், ஆதித்திராவிடர் ஆகிய மூன்று வகுப்பினருக்கும் தனித்தனி இடஒதுக்கீடு தரவேண்டும் எனக்கோரி, 1935-ல் அதைப் பெற்றுத் தந்தார்.
தான் ஒரு பெரும் அரச குடும்பத்தில் பிறந்திருந்தாலும், ஜமீன்தார்களுக்கும் நிலவுடமையாளர்களுக்கும் எதிரானவராகவும், உழைக்கும் மக்களுக்கானவாரகவும் பொப்பிலி அரசர் திகழ்ந்தார்.
உழைக்கும் மக்களுக்கான இனாம் குடிகள் மசோதா
அவரது ஆட்சியில் கொண்டுவந்த சீர்திருத்தங்களில் முதன்மையானது. இனாம்தார்களின் நிலங்களில் உழைக்கும் குடிமக்களின் நலனைக் காக்க, பொப்பிலி அரசர் ஒரு சட்டம் கொண்டு வந்தார். அது ‘இனாம் குடிகள் மசோதா’ எனப்பட்டது. இதன்படி இனாம் நிலங்களில் உழைக்கும் மக்களுக்கு குறைந்தபட்ச கூலி நிர்ணயம் செய்யப்பட்டது. இனாம்தார்களின் அதிகாரம் குறைக்கப்பட்டது. நிலத்தின் மீது இனாம்தார்களுக்கு இருந்த அதிகாரங்கள் ரத்து செய்யப்பட்டது.
அதோடு மட்டுமல்லாமல் பெரியாரின் ஈரோடு வேலைத்திட்டம் என்னும் சுயமரியாதை சமதர்மக் கட்சியின் வேலைத்திட்டத்தை ஜஸ்டிஸ் கட்சியின் வேலைத்திட்டமாக்கினார்.
நீதிக்கட்சி ஜமீன்தாரர்கள் கட்சி எனும் விஷம்ப் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும்
பொப்பிலி அரசர் 1934 ஜூன் ஏழாம் நாள் நடந்த நீதிக்கட்சி கூட்டத்தில் பேசியது வரலாற்றில் மிக முக்கியமானதாகும்.
”ஜஸ்டிஸ் கட்சி என்றால் முதலாளிமார், ஜமீன்தார்கள் கட்சியே தவிர பொது மக்கள் கட்சி அல்ல என்று சொல்லப்படுவது மிகமிக சகஜமாகிவிட்டது. இதை நாம் பொய்யாக்கிக் காட்டாவிட்டால் கட்சியிலுள்ள உண்மை உழைப்பாளிகளுக்கு இதைவிட வேறு அவமானம் வேண்டியதில்லை. ஆதலால் தகுந்த வேலைத்திட்ட முறைகளை ஏற்படுத்தி பாமர ஜனங்களுக்கு நன்றாக பிரச்சாரம் செய்து நமது எதிரிகளின் விஷமப் பிரச்சாரத்தை முறியடிப்பதுடன் ஏழை பொதுமக்களுக்கு பயன்படத்தக்க முறையில் உழைத்தாக வேண்டும் என்று பேசினார்.
நீதிக்கட்சி மாநாட்டில் பொப்பிலி அரசர் வைத்த வேலைத்திட்டங்கள்
அவர் பேசியதோடு மட்டுமல்லாமல் 1934 செப்டம்பர் 29 அன்று நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் அதற்கான வேலைத்திட்டத்தையும் முன்வைத்தார்.
- பொதுமக்கள் தேவைக்கும் வசதிக்கும் நன்மைக்கும் அவசியமானதாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தொழிற்சாலைகள், இயந்திர சாலைகள், போக்குவரத்து சாதனங்கள் முதலியன அரசாங்கத்தாலேயே நடைபெறும்படி செய்ய வேண்டும்.
- உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும், அவற்றை வாங்கிப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கும் மத்தியில் தரகர்கள், லேவாதேவிகாரர்கள் இல்லாமல் கூட்டுறவு கஷ்டத்தையும், வாங்குபவர்களின் நஷ்டத்தையும் ஒழிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
- விவசாயிகளுக்கு இன்றுள்ள கடன்களை ஏதாவது ஒரு வழியில் தீர்ப்பது இனி அவர்களுக்கு கடன் தொல்லை ஏற்படாமல் இருக்கும்படி ஏற்பாடுகள் செய்ய வேண்டும்
- குறிப்பிட்ட காலத்திற்குள் குறிப்பிட்ட ஓரளவு கல்வியாவது எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும்.
- ஓரளவுக்கேனும் மதுவின் கேடு ஒழியும்படி செய்யவேண்டும்.
- ஓரளவுக்கு வேலைகள் அனைத்தும் எல்லா ஜாதி மத காரர்களுக்கும் சரிசமமாக கிடைக்க வேண்டும்.
- மதங்கள் எல்லாம் ஒருவருடைய தனி எண்ணமாக தனி நிறுவனங்களாக இருக்கவேண்டும். அரசியலில் அரசியல் நிர்வாகத்தில் அவை எவ்வித சம்பந்தமும் குறிப்பும் பெறாமல் இருக்க வேண்டும்.
- சாதி உயர்வு, தாழ்வு அளிப்பதற்காக அரசாங்கத்திலிருந்து தனிப்பட்ட முறைகளை கையாள்வது ஏதாவது பொருள் செலவிடுவதோ ஆகியவை கண்டிப்பாக இருக்கக் கூடாது.
- கூடியவரை ஒரு குறிப்பிட்ட ரொக்க வரும்படிகாரருக்கும், தானே விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கும், வரிப்பலுவே இல்லாமலும் மனித வாழ்க்கைக்கு சராசரி தேவையான அளவுக்கு மேல் வரும்படி உள்ளவர்களுக்கும் அந்நியரால் விவசாயம் செய்யப்படுவதன் மூலம் பயனடைந்தவர்கள் வருமானவரி முறை போல நில வரி விகிதங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
- லோக்கல் போர்டு, முனிசிபாலிட்டி கூட்டுறவுத் துறை ஆகியவற்றுக்கு இன்னும் அதிகமான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு இவற்றின் மூலம் மேலே குறிப்பிட்ட பல காரியங்கள் நிர்வாகம் செய்ய வசதிகள் செய்து தக்க பொறுப்பும் நாணயமும் உள்ள சம்பள அதிகாரிகளைக் கொண்டு அவற்றை நிர்வாகம் செய்ய வேண்டும்.
உள்ளிட்டவை அதில் முக்கியமானதாகும்.
பெரும் பணக்காரர்கள் வெளியேறினர்
தான் ஒரு ஜமீன்தாரராக இருந்தபொழுதும் முன்வந்து நீதிக்கட்சியின் வேலைத்திட்டமாக பொப்பிலி அரசர் இதனை வைத்தார். அதனாலேயே அந்த கட்சியில் இருந்த பெரும் பணக்காரர்கள் வெளியேறினார்கள்.
நீதிக்கட்சியை ஒழிக்க நினைத்த ராஜாஜி
இதனைப் பயன்படுத்தி 1938-ல் இந்தி எதிர்ப்பின் போது இராஜாஜி நீதிக்கட்சியின் தலைவர் பொப்பிலி அரசரை அக்கட்சியின் தலைவர் பதவியை விட்டு விலகுமாறு மிரட்டினார். பொப்பிலி அரசர் பயப்படவில்லை. பொப்பிலி அரசர் விலகிவிட்டால் நீதிக்கட்சியை ஒழித்து விடலாம் என இராஜாஜி கனவு கண்டார். ஆனால் அதன் பின் நீதிக்கட்சிக்கு பெரியார் தலைமையேற்றார் என்பது வரலாறு.
பொப்பிலி அரசர் 1946-51 இல் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகப் பணியாற்றினார். பின்னர் பல ஆண்டுகள் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார்.
1967-ம் ஆண்டு ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் வென்று 1972 வரை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். மார்ச் 10, 1978 இல் மரணமடைந்தார்.