எழுத்தாளர், சொற்பொழிவாளர், சிலேடைப் பேச்சில் வல்லவரான கி.வா.ஜகன்னாதன் பிறந்த தினம் இன்று

எழுத்தாளர், சொற்பொழிவாளர், சிலேடைப் பேச்சில் வல்லவரான கி.வா.ஜகன்னாதன் பிறந்த தினம் இன்று.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் (1906) பிறந்தார். இளம் வயதிலேயே திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்தர்அலங்காரம், கந்தர்அனுபூதி உள்ளிட்டவற்றை மனப்பாடமாகக் கூறுவார். எழுதுவதிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். சிதம்பரம் நடராஜர் மீது ‘போற்றிப் பத்து’ என்ற பதிகத்தை 14-ம் வயதில் எழுதினார். முருகன் மீதும் பல பாடல்கள் எழுதினார். ‘ஜோதி’ என்ற புனைப்பெயரில் இவர் எழுதிய கவிதை கள் பிரபல இதழ்களில் வெளியாகின. காந்திஜியால் கவரப்பட்டவர், ராட்டையில் நூல் நூற்று கதர் ஆடைகளை அணிந்தார்.
சென்னையில் உ.வே.சா.வுடன் தங்கி, குருகுல முறையில் தமிழ் பயின்றார். அவரது தமிழ்ப் பணிக்கு உதவுவதையே தன் வாழ்நாள் லட்சியமாக ஏற்றார். அவரது அன்புக்குப் பாத்திரமாகி, அவரது உதவியாளராகவும் செயல்பட்டார்.
* இலக்கண, இலக்கிய, சங்ககால நூல்கள், காப்பியங்கள், பிரபந்தங்கள், சிற்றிலக்கியங்கள் என அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். ‘வித்வான்’ தேர்வு எழுதி மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேறி திருப்பனந்தாள் மடத்தின் ஆயிரம் ரூபாய் பரிசைப் பெற்றார். 1932-ல் கலைமகள் இலக்கிய இதழில் பணியாற்றும் வாய்ப்பு பெற்றார். தன் எழுத்தாற்றல், உழைப்பால் அதன் ஆசிரியராக உயர்ந்தார். இளம் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தினார்.
தனது பேச்சாற்றல், சிலேடைப் பேச்சால் கி.வா.ஜ அனைவரையும் வசீகரித்தார். இவை பல நூல்களாகவும் வெளிவந்தன. நாடோடிப் பாடல்கள் மீது மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். பல கிராமங்களுக்கும் சென்று மக்களைச் சந்தித்து அவர்களைப் பாடச் சொல்லிக் கேட்டு, குறிப்பெடுத்தார். அவற்றைத் தொகுத்து, நூலாக வெளியிட்டார்.
சிறுகதைகளும் எழுதினார். திருக்குறள், திருவெம்பாவை, திருப்புகழ், பெரியபுராணம் நூல்களுக்கு விளக்கவுரை எழுதினார். ஏராளமான பரிசுகள், விருதுகளைப் பெற்றார். இவரது ‘வீரர் உலகம்’ என்ற இலக்கிய விமர்சன நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.
* வாகீச கலாநிதி, செந்தமிழ்செல்வர், தமிழ்ப் பெரும்புலவர், திருநெறித் தவமணி, சொல்லின் செல்வர் உள்ளிட்ட ஏராளமான பட்டங்கள் பெற்றார். திறனாய்வாளர், உரையாசிரியர், கவிஞர், பதிப்பாளர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர், கதாசிரியர் என்ற பன்முகப் பரிமாணம் கொண்ட கி.வா.ஜ. 82ஆவது வயதில் (1988) காலமானார்