கட்டுரை

நான் அதிகம் படிக்கவில்லை என்பதால் என்னை அவமதித்துள்ளனர்!

நான் அதிகம் படிக்கவில்லை என்பதால் என்னை அவமதித்துள்ளனர்!”

– `இன்ஃபோசிஸ்’ சுதா மூர்த்தி

இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவர் சுதா மூர்த்தி. இந்தியாவில் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸின் அறக்கட்டளையை ஆரம்பகாலம் தொட்டு வளர்த்தெடுத்தவர்களில் முக்கியமானவர். கோடிகளில் புரண்டாலும் நடுத்தர வர்க்கத்தின் மதிப்பீடுகளோடு வாழ்க்கையை முன்னெடுப்பவர்.

வீட்டையும் வேலையையும் திறம்பட நிர்வகிப்பது, மாறிவரும் சூழலில் குடும்பத்தினரிடம் பிணைப்பை அதிகரிப்பது எப்படி, தலைமுறைகளைத் தாண்டி உள்ளங்களைப் புரிந்துகொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதில் சுவாரஸ்யமான விஷயங்களின் தொகுப்பு இங்கே…

“தாய் என்பவள்தான் தன் குழந்தைகளிடம் அளவு கடந்த அன்பைப் பொழிபவள். அதிகபட்ச பொறுமைசாலியும் தாய்தான். தன் குழந்தைகளுக்காகக் கூடுதலாக உழைக்கக்கூடியவள் தாய். அவள்தான் குழந்தையின் முதல் ஆசிரியர். தாய்தான் முதலில் குழந்தைக்கு மொழியைக் கற்றுக்கொடுக்கிறாள். தாயின் மொழிதான் குழந்தையின் மொழியாக மாறுகிறது. அதனால்தான் நாம் பேசும்மொழியை `தாய்மொழி’ என்று அழைக்கிறோம்.

அன்னையர் தினம் கொண்டாடப்படும் அன்று மட்டும் அன்னையர் தினம் கிடையாது. தியாகம், பொறுமை இவற்றைத் தாண்டி நாகரிகம், கலாசாரத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் மிகப்பெரிய இணைப்புப் பாலம் தாய்தான். ஒவ்வொரு நாளும் அன்னையர் தினம்தான்.

அன்னையை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். பெண்களையும் மதியுங்கள். `எந்த இடத்தில் பெண்ணுக்கு மரியாதை கொடுக்கப்படுகிறதோ அங்கு கடவுள் வாழ்கிறார்’ என்று ஒரு கூற்று உண்டு” என்றவர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

உங்கள் எளிமையை யாராவது தவறாகப் புரிந்துகொண்டால் என்ன செய்வீர்கள்?

யாராவது என்னிடம் `நீங்கள்தான் பெஸ்ட்’ என்றால் அதை நம்ப மாட்டேன். எனக்குத் தெரியும் என்னைவிட சிறந்தவர்கள் இருப்பார்கள் என்று. அதே போல `நீங்கள் மிகவும் மோசமானவர் (Worst)’ என்றால் அதையும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். எனக்குத் தெரியும் நான் அப்படிக் கிடையாது. நான் யார் என்பது எனக்குத் தெரியும்.

நான் சமூக சேவை செய்து வருவதால் பலருக்கு நிதியுதவி அளிப்போம். அதில் உதவி கிடைத்தவர்கள் என்னை `பெஸ்ட்’ என்பார்கள். உதவி கிடைக்காதவர்கள் நான் `மோசமானவர்’ என்பார்கள்.

நான் கிராமப் பகுதியிலிருந்து வந்தேன் என்பதாலும் அதிகம் படிக்கவில்லை என்பதாலும் என்னை அவமதிப்பது போன்று சிலர் நடத்தியிருக்கிறார்கள். நான் புடவை அணிந்து, தலையில் கொண்டைபோட்டு, பூ வைத்திருப்பதால் `தந்திரமானவள்’ என்ற தோற்றமும் எனக்கு உண்டு. சிலர் நான் பழைய ஃபேஷனாக இருக்கிறேன் என்றும் விமர்சித்திருக்கிறார்கள்.

பழைய ஃபேஷனாக இருந்தால் என்ன நமது மனது பிரகாசமாகவும் உள்ளத்தில் இரக்கம் இருந்தால்போதும். ஆனால், எப்போதுமே அதைப் பற்றி நான் கவலைப்பட்டதே கிடையாது. என்னைப் பொறுத்தவரை நான் செய்யும் ஒரு காரியம் சட்டபூர்வமாக, சமூக ரீதியாக, ஒழுக்க ரீதியாக, நீதி நெறிகளுக்குட்பட்டு சரியாக இருந்தால் அதைத் தைரியமுடன் செய்ய வேண்டும் என்பதே என் குறிக்கோள்.

பெருந்தொற்றுக் காலத்தில் பேரன்டிங் எப்படி இருக்க வேண்டும்?

குழந்தைகளை வளர்ப்பது சிலர் நினைப்பது போல எளிதான காரியம் கிடையாது. இப்போது நாம் பார்க்கும் கோவிட் பெருந்தொற்று மட்டுமல்ல ஸ்பானிஷ் ஃப்ளூ, காலரா, பிளேக் என ஒவ்வொரு நூற்றாண்டிலும் இதேபோல கொள்ளை நோய்கள் வந்து போகும். அது மனித குலத்தை உடல்ரீதியாக மட்டுமல்ல மனரீதியாகவும் அதிகம் தொந்தரவு செய்யும். சற்று பொறுமையாக இருந்து, பாசிட்டிவ் எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். நான் நாள்தோறும் அதிக அளவில் நெகட்டிவ்வான விஷயங்களை வாசிக்கவோ பார்க்கவோ மாட்டேன்.

`இதுவும் கடந்து போகும்’ என்று உங்கள் மனதிடமே அடிக்கடி சொல்லுங்கள். எதிர்மறை எண்ணங்களுக்கு ஆட்படுவது எளிது. அதற்கு இடமளிக்காமல் பாசிட்டிவ்வாக இருக்க முயற்சி செய்யுங்கள். உங்களால் முடிந்தவரை அதிக நேரம் குழந்தைகளிடம் செலவு செய்யுங்கள். முந்தைய காலங்களைவிட தற்போது குழந்தைகளை வளர்ப்பது மிகவும் சிரமம்தான். காரணம், டிவி, கேட்ஜெட்ஸ் எனக் கவனத்தைச் சிதறடிக்கும் விஷயங்கள் உள்ளன.

உங்கள் குழந்தைகளுடன் இணைந்து புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைத் தொடங்குங்கள். டிவியை ஆன் செய்துவிட்டு, `நான் டிவி பார்க்கிறேன், நீ புத்தகம் படி’ என்று குழந்தையிடம் சொல்லக் கூடாது. இருவரும் புத்தகங்கள் படிக்க வேண்டும்.

நீங்கள் மற்றவருக்கு உதவுங்கள். வீட்டில் சிறிது உணவு சமைத்து அதை அருகிலிருப்பவர்களுக்கும் தேவையிருப்பவருக்கும் கொடுக்கலாம். உங்களைப் பார்த்து உங்கள் குழந்தை கற்றுக்கொள்ளும். நீங்கள் என்ன செய்தாலும் அதை உங்கள் குழந்தை பின்பற்றும். குழந்தைக்குப் பெற்றோர்தான் ரோல் மாடல்.

உங்கள் குழந்தைகளை எப்படி பணிவுள்ளவர்களாக உருவாக்கினீர்கள்?

நம்மைச் சுற்றி பணம் இருக்கும்போது குழந்தைகளை வளர்ப்பது சிரமம். பணமில்லாமல் இருக்கும்போது குழந்தைகளை வளர்ப்பது எளிது. காரணம், `என்னிடம் பணமில்லை’ என்று உண்மையைச் சொல்லிவிடலாம். ஆனால், பணம் இருக்கும்போது குழந்தைகளிடம் அப்படிச் சொல்ல முடியாது. காரணம் குழந்தைகளுக்கு நம்மிடம் பணம் இருப்பதும் தெரியும். அவர்கள் கேட்கும் விஷயங்களை வாங்கிக் கொடுக்க முடியும் என்பதும் தெரியும்.

அதுபோன்ற நேரங்களில் என் குழந்தைகளிடம் `உங்களைவிட சாமர்த்தியமான, திறமையான குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால், பணம் இல்லாததால் உங்களுக்குக் கிடைத்த சிறந்த கல்வி அவர்களுக்குக் கிடைக்கவில்லை. உங்கள் செலவுகளைக் குறைத்துக்கொண்டு அதுபோன்ற தேவையிருப்பவர்களுக்கு உதவ வேண்டும்’ என்று சொல்வேன்.

என் குழந்தைகளுக்கு பாக்கெட் மணி என்ற ஒன்றைக் கொடுத்ததேயில்லை. `என்ன வேண்டும் என்று என்னிடம் சொல்லுங்கள். நான் வாங்கிக் கொடுக்கிறேன்’ என்றுதான் சொல்லுவேன். அவர்கள் அநாவசியமாகக் கேட்கும் எதையும் உடனே வாங்கிக் கொடுக்க மாட்டேன்.

உதாரணத்துக்கு, என் மகள் ஒரு டிரெஸ் கேட்டால் அதைப் பொங்கல் வரையோ யுகாதி வரையோ காத்திருந்து, அதை வாங்குவதற்கு ஏதாவது காரணம் வந்தால்தான் வாங்கிக் கொடுப்பேன். உங்கள் குழந்தைகள் என்னவாக விரும்புகிறீர்களோ அதை முதலில் நீங்கள் செய்யுங்கள். `டிரெஸ் வாங்காதே’ என்று என் பிள்ளைகளிடம் சொல்லும்போது நான் அதை வாங்குவதில்லை. நீங்கள் ஒரு விஷயத்தைப் பின்பற்றாமல் அதை உங்கள் பிள்ளைகளுக்கு போதிக்காதீர்கள். நீங்கள் பணிவாக இருந்தால் உங்கள் குழந்தைகளுக்கும் அந்தக் குணம் தானாக உருவாகும்.

நன்றி: விகடன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button