உலக கால்நடை தினம் இன்று

உலக கால்நடை தினம் இன்று.
நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாம்பேட்டை என்னும் கிராமம். இயற்கை மிகுந்த அந்த கிராமத்தில், மழை பெய்யும் காலத்தில் மேற்கு பக்கத்தில் இருந்து கிழக்கு பக்கமாக மழை நீர் தெருவில் ஓடுவதை பார்க்கும் போது சில நேரம் நனைவதும் காகித கப்பல் விடுவதும் அன்றைய காலத்தின் மகிழ்வான தருணம்.
அந்த ஈர மண்ணில், ஓரறிவு உயிராய் வளரும் புல்.
புல் என்பதன் பொருள், தமிழ் அகராதியில் கால்நடைகளுக்கு என இயற்கை அமைத்த உணவுப் பொருள் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மழை நீரால் புல் வளர்ந்தது. வளர்ந்த அந்த புல்லினை, கன்று ஈன்ற பசுவொன்று சாப்பிடும் போது அந்தப் புல்லே மகிழ்வுறும்.
அழகான அந்த புல். பனி விழும் காலத்தில் அதன் நிலையும், மழைக்காலத்தில் வளர்ந்த நிலையும், பசுவிற்கு உணவாகவும், பச்சை நிறம் கொண்ட அந்தப் புல்லே பசுவின் மடியில், கன்று வந்து பால் குடிக்கும் போது பாலாகும் மாறியது போல, புல்லின் பல்வேறு நிலையை ஒரு கவிதையாக படித்துள்ளேன்
ஓரறிவு உள்ள உயிரினம்
பனி விழும் காலம்
ஈர மண்ணின் மடியில்
புல்லின் நுனியில்
வெள்ளை முத்துக்கள்
தங்கியும் தொங்கியும்
விளையாடும் கோலம்
இருவிழிகளும் இரசிக்கும் காலம்
இயற்கை தந்தது நமக்கும்
இனிமையென்றேன் இப்புவிக்கும்
மழை பெய்யும் காலம்
தென்றலெனும் அசைவில்
மெல்ல தலைதனை ஆட்டி
நீராடி மகிழும் கோலம்
சற்று வளர்ந்து நிற்கும்
தன்னுள்ளே மகிழ்ந்து சிறக்கும்
கன்றை ஈன்ற பசுவொன்று
மெல்ல பசித்தேடியதை கண்டு
கண்டது பசுவை சுகமாக
தந்தது தன்னையே உணவாக
நாழிகை கொஞ்சம் போனபின்னே
கன்றை கண்டது துள்ளும் முன்னே
தாய்மடி தேடி பாலை உண்டு
பசியும் மறந்ததே இளங் கன்று
பச்சை புல்லால் பசுவும் மகிழ
வெள்ளை பாலால் கன்றும் மகிழ
இருவர் பசியும் போனதிங்கே
இனிதாய் கன்று விளையாடுதிங்கே
இயற்கை தந்த தாவரம் புல்லே
இனிமை தந்தது என் மனதுக்குள்ளே
முருக. சண்முகம்
சென்னை 56