கைதிகள் துணிகளை துவைக்க சலவை இயந்திரம்: தமிழக சிறைகளில் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை

தமிழக சிறைகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒருபகுதியாக சிறை கைதிகளின் துணிகளை துவைக்க சலவை இயந்திரம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் அவர்களின் துணிகளை அவர்களே துவைக்க வேண்டும். இதில், சிலர் துணிகளை சரியாக சலவை செய்து பயன்படுத்துவது இல்லை என்றும், இதனால் சிறைகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதை தடுக்கும் வகையில் இயந்திரம் மூலம் துணிகளை துவைக்கும் வசதியை ஏற்படுத்தி கொடுக்க சிறைத் துறைஅதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறை, 5 மகளிர் சிறை, ஒரு பார்ஸ்டல் பள்ளி ஆகிய 15 சிறைகளில் ரூ. 60 லட்சம் செலவில் 15 கனரக தொழில் கூட சலவை இயந்திரம் (Heavy duty industrial power laundry) பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி புழல் மத்திய சிறையில் நேற்று நடைபெற்றது.
சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை டிஜிபி அமரேஷ் புஜாரி தலைமை தாங்கினார். மேலும், தண்டனை சிறை கைதி பிரேம்குமார், ரிப்பன் வெட்டி சலவை இயந்திரத்தை இயக்கினார். நிகழ்ச்சியில் சென்னை சரக டிஐஜி ஆ.முருகேசன், மத்திய சிறை கண்காணிப்பாளர்கள் நிகிலா நாகேந்திரன், கிருஷ்ணராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.