பணி நிரந்தரம் செய்ய கோரி தமிழகம் முழுவதும் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சாலை மறியல்

திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி நேற்று மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, சென்னைகே.கே.நகரில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆர்.ரவிக்குமார் தலைமை வகித்தார்.
போராட்டத்தின் போது, போலீஸாரின் தடுப்புகளை மீறி சாலையில் அமர்ந்த ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
மறியல் போராட்டம் குறித்து ஆர்.ரவிக்குமார் கூறியதாவது: மின்வாரியத்தில் சுமார் 12 ஆயிரம்ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர். கடந்த 2007-ம்ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரப் படுத்தப்பட்டனர்.
அதன் பின்னர் ஒப்பந்த ஊழியர்களை அடையாளங்கண்டு பணி நிரந்தரம் செய்ய மின்வாரிய நிர்வாகம் மறுத்து வருகிறது. கஜா, தானே, ஒக்கி போன்ற புயல்கள் மற்றும் சென்னை பெருவெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் மின் விநியோகத்தை சீரமைத்து, தடையில்லா மின்சாரம் வழங்கி அரசுக்கு இவர்கள் பெருமை சேர்த்தவர்கள்.
மழை, வெயில் என பாராமல் உற்பத்தி நிலையங்களில் எரியும் நிலக்கரியின் வெப்பத்துக்கு நடுவே பணியாற்றி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பணியிலும், மனிதர்கள் நடமாட முடியாத மலை பிரதேசமான காடம்பாறை, குந்தா, கோதையாறு, பாபநாசம் உள்ளிட்ட நீர்மின் உற்பத்தி வட்டங்களிலும் மின் தொடரமைப்பு மற்றும் பொதுக் கட்டுமான பகுதிகளிலும் அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவ்வாறு கடுமையாக பணியாற்றியது மட்டுமின்றி, பணி நிரந்தரம் கோரி பல கட்டங்களாக மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். இவர்கள் பயனடையும் வகையிலேயே அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது.
அதை நிறைவேற்றும் வகையில் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் வகையில் வேலைநிறுத்தம் போன்ற அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வோம். இவ்வாறு அவர் கூறினார்.