
சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 3 முக்கிய பாலங்கள் ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை ஓட்டேரி நல்லா கால்வாய் முதல் ஸ்ட்ப்பன்சன் சாலை வரை இருந்த பழைய பாலத்தை இடித்து, 282 மீட்டர் நேளம் கொண்ட புதிய பாலத்தை 43 கோடி ரூபாய் செலவில் குடிமை அமைப்புத் துறை கட்டி வருகிறது. இந்த பாலத்தின் பணிகள் முடிந்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மின் விளக்குகள், நடைபாதை, சிசிடிவி போன்றவற்றை இப்போது நிறுவி வருகிறார்கள்.
இதே போல, வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகில் 61.98 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் பணிகள் முடிவுக்கு வந்துள்ளன. இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்தால் கொளத்தூர் மெயின் ரோடு மற்றும் தெற்கு ஐ.சி.எஃப் சாலைக்கு இடையிலான பாதைகளை இணைக்கும். தற்போது, கொளத்தூர் பக்கத்தில் ஒரு வளைவின் கட்டுமானம் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்து ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும்.
சென்னை டி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து மாம்பலம் ரயில் நிலையத்தை இணைக்கும் ஸ்கைவாக் என்ற பறக்கும் நடைபாதை பணிகள் 26 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. 600 மீட்டர் கொண்ட இந்த பாலம் பயன்பாட்டுக்கு வந்தால் ரங்கநாதன் தெருவில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும். இப்போது இதன் பேரும்பாலான பணிகள் முடிந்து லிப்ட், எஸ்கலேட்டர், சிசிடிவி, மின்விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.