சேலத்தில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.15 ஆக சரிவு

மகாராஷ்டிராவில் இருந்து வரத்து அதிகரிப்பு: சேலத்தில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.15 ஆக சரிவு
சேலம்: மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால், பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.15ஆக சரிந்துள்ளது. மகாராஷ்டிராவில் தற்போது வெங்காயம் அறுவடை சீசன் என்பதால், தமிழகத்துக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சேலத்தில் விலை கிலோ ரூ.15-க்கு விற்கப்படுகிறது.
இது குறித்து சேலம் பால் மார்க்கெட்டில் உள்ள மொத்த வியாபாரிகள் கூறியதாவது: தமிழகத்துக்குத் தேவையான பெரிய வெங்காயம் மகாராஷ்டிரா, கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்படுகிறது. தற்போது, மகாராஷ்ர மாநிலத்தில் வெங்காயம் அறுவடை செய்யப்படுகிறது. இதனால் அங்கிருந்து அதிக எண்ணிக்கையில் வெங்காய மூட்டைகள் கொண்டு வரப்படுகின்றன.
கடந்த மாதத்துக்கு முன்னர் வரை, சேலத்துக்கு தினமும் 10 முதல் 15 லாரிகளில் பெரிய வெங்காய மூட்டைகள் வரத்தாகின. தற்போது, தினமும் 30 லாரிகள் அளவுக்கு அவற்றின் வரத்து உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் விளையும் சின்ன வெங்காயமும் மார்க்கெட்டுக்கு அதிகளவில் வருகிறது. வரத்து அதிகமாக இருக்கும் நிலையில், வெங்காயத்தின் தேவை குறைந்த அளவே இருக்கிறது.
இதன் காரணமாக, கடந்த மாதம் வரை கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையான பெரிய வெங்காயம், தற்போது தரத்துக்கேற்ப ரூ.15 முதல் ரூ.20 என குறைந்து விட்டது, என்றனர்.