என்னாது பயந்துட்டு போறோமோ.. நாங்கள் ஏன் அவசர அவசரமா ரயில் ஏறோம் தெரியுமா?

தமிழகத்தில் எங்களுக்கு 100 சதவீதம் பாதுகாப்பு உள்ளது என வடமாநிலத்தவர்கள் நெகிழ்ச்சி
வடமாநிலங்களில் வேலைவாய்ப்புகள் இல்லாததால் அவர்கள் புலம் பெயர்ந்து மற்ற மாநிலங்களில் தங்கி பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் தமிழகத்தின் கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் மில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்கள்.
அது போல் கட்டடத் தொழில், ஹோட்டல் தொழில், பாதுகாப்பு பணி, ஜவுளிக் கடை, நகைக்கடை உள்ளிட்ட இடங்களிலும் வடமாநிலத்தவர்கள் பணி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் கொல்லப்படுவதாக ஒரு போலியான வீடியோ சமூகவலைதளங்களில் பகிரப்பட்டது.
வடமாநிலத்தவர்கள் இதை பார்த்த வடமாநிலத்தவர்களின் குடும்பத்தினர் மிகவும் அச்சமடைந்துள்ளனர். தங்கள் உறவுகளை மீண்டும் சொந்த மாநிலத்திற்கே அழைத்து வருவதாகவும் பேச்சுகள் பரவலாக உள்ளன. இதையடுத்து இந்தி பேசும் வட மாநில தொழிலாளர்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என தமிழக காவல்துறை சார்பில் அறிக்கை வெளியானது.
வடமாநிலத்தவர்கள் அச்சம் கொள்ளும் வகையில் யார் வதந்தி பரப்பினாலும் அவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பீகார் மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது போன்ற போலியான வீடியோ பரவிய நிலையில் பீகார் மாநில அனைத்து கட்சி குழு அமைத்து திருப்பூரில் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் வடமாநிலத்தவர்கள் திடீரென சாரை சாரையாக சொந்த ஊர் செல்கிறார்கள். ஒருவேளை உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர்கள் கிளம்பி செல்கிறார்களா என்ற எண்ணத்தில் அவர்களிடம் இதுகுறித்து கேட்டோம். அவர்கள் கூறுகையில் நாங்கள் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்காக ஊருக்கு செல்கிறோம். மீண்டும் ஒரு மாதம் கழித்து இங்குதான் வருவோம்.
100 சதவீதம் பாதுகாப்பு தமிழகத்தில் எங்களுக்கு 100 சதவீதம் பாதுகாப்பு இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் பணியாற்றி வரும் எங்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. நாங்கள் இப்போது பயந்து கொண்டு எங்கள் ஊருக்கு செல்லவில்லை. ஹோலி பண்டிகை 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இப்போது சென்றால்தான் எங்களால் 7ஆம் தேதி காலையாவது சொந்த ஊருக்கு செல்ல முடியு
நாங்கள் 3 , 4 தலைமுறைகளாக சென்னையில் இருக்கிறோம். எங்களை யாருமே வடமாநிலத்தவர்களாக பார்த்ததில்லை. எங்களிடம் எந்த பிரச்சினையும் செய்ததில்லை. சென்னையில் நாங்கள் வசிப்பதால் நாங்கள் சென்னை மக்கள், இதில் ஜாதி, மதம், மொழி, இனம் என்ற எந்த பாகுபாட்டையும் தமிழக மக்கள் எங்களிடம் காட்டியது இல்லை, எங்களுடன் ஒரு குடும்பமாகத்தான் பழகுகிறார்கள். நாங்கள் வைத்திருக்கும் கடைகளில் தமிழக மக்கள் அதிகம் வியாபாரம் செய்கிறார்கள். எங்களுடன் குடும்பத்தில் ஒருவருடன் பழகுவதை போல் பழகுகிறார்கள்.
நாங்ள் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம். எங்கள் ஊரில் தொழில் செய்வது கடினம். ஆனால் இங்கு வாழ்வாதாரம் நன்றாகவே இருக்கிறது. எனவே வெளியே பரவும் செய்தியை எல்லாம் நம்பாதீர்கள் என வட மாநிலத்தவர்கள் பேட்டி அளித்துள்ளார்கள். தமிழகத்தில் வட இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாக போலியான பிரச்சாரங்கள் வந்த நிலையில் இவர்கள் அளித்திருக்கும் பேட்டி அவை எல்லாம் பொய் என்பதை பொட்டில் அடித்தாற் போல் சொல்கிறது.