உள்நாட்டு செய்திகள்

ஆஸ்கர் விருது வென்ற ஆவண படத்தில் நடித்த தம்பதியருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

ஆஸ்கர் விருது வென்ற ஆவண படத்தில் நடித்த தம்பதியருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு: யானைகள் முகாமில் உள்ள 91 பணியாளர்களுக்கும் தலா ரூ.1 லட்சம்

சென்னை: ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப் படத்தில் இடம் பெற்ற பொம்மன், பெல்லி தம்பதியர்களை நேரில் வரவழைத்து அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். மேலும், யானைகள் முகாமில் மொத்தம் உள்ள 91 பணியாளர்களுக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். திரை உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதில், தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் ‘தி எலிபேண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப் படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.

தமிழ்நாட்டின் முதுமலை யானைகள் தொடர்பானது இந்த ஆவணப் படமானது, வனத்தில் தாயை பிரிந்து தத்தளிக்கும் குட்டி யானைகள், முதுமலையில் பராமரிக்கப்படுகின்றன. 2017ம் ஆண்டு ரகு, 2019ல் பொம்மி ஆகிய இரு குட்டி யானைகள் முதுமலைக்கு கொண்டு வரப்பட்டன. முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதி பொம்மன், பெல்லி. இவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது தான் ‘தி எலிபேண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப் படம். இப்போது இந்த ஆவணப் படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. தாயை பிரிந்த குட்டி யானைகளுக்கும், அந்த யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெல்லி என்ற தம்பதியரின் கதையே இந்த தி எலிபேமன்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம்.

இந்த படத்தில் நடித்த பொம்மன், பெல்லி தம்பதியினருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆவணப் படத்தில் இடம் பெற்ற யானைக் குட்டியின் பராமரிப்பாளர்களான பொம்மன், பெல்லி தம்பதியர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று தலைமை செயலகத்தில் சந்தித்தனர். இவர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து, பாராட்டுப் பத்திரமும், பொன்னாடையும் அணிவித்து தலா ரூ.1 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கினார்.

இந்த ஆவணப் படத்தின் மூலம் தமிழ்நாடு வனத்துறையின் செயல்பாடு மற்றும் யானைகள் பராமரிப்பு முறை உலக அளவில் கவனம் பெற்றது. தமிழ்நாட்டில் உள்ள இரண்டு யானைகள் முகாம்களான முதுமலையில் உள்ள தெப்பக்காடு மற்றும் ஆனைமலையில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் மொத்தம் 91 பணியாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 லட்சம் வீதம் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும், யானை பராமரிப்பாளர்களாகிய இவர்கள் வசிக்கத் தேவையான சுற்றுச்சூழலுக்கு இசைந்த, அவர்கள் பண்பாட்டிற்கு உகந்த வீடுகள் கட்ட ரூ.9.10 கோடி நிதி உதவியை அரசு வழங்கும் எனவும் அறிவித்துள்ளார். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமை ரூ.5 கோடி செலவில் மேம்படுத்தவும் அரசு அறிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில், சாடிவயல் பகுதியில், யானைகள் பராமரிக்கத் தேவையான தங்கும் இடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளுடன் ஒரு புதிய யானைகள் முகாம் ரூ.8 கோடி செலவில் அமைக்கப்படும்.

தமிழ்நாடு முதல்வரின் 2022ம் ஆண்டு உதகை பயணத்தின் போது முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் ‘அதிநவீன யானைகள் பாதுகாப்பு மையம் மற்றும் சுற்றுச்சூழல் வளாகம்’ ஒன்று ஏற்படுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். இது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி, புலிகள் காப்பக கள இயக்குநர் து.வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

  • யானை குட்டி வளர்ப்பது சிரமம்
    ஆஸ்கர் விருது பெற்ற முதுமலை தம்பதிக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வழங்கினார். முதல்வரிடம் பரிசுத்தொகை பெற்ற பிறகு முதுமலை தம்பதிகள் நிருபர்களிடம் கூறியதாவது: ஆவணப்படத்தில் யானை குட்டியுடன் நடித்தது மூலம் அந்த படத்துக்கு ஆஸ்கர் விருது பெற்றது சந்தோஷம். இந்த மாதிரி வருவோம் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. தமிழ்நாடு வனத்துறைக்கு மிகப்பெரிய நன்றி. தவறி வரும் குட்டிகளை கொண்டு வந்து வனத்துறை அரசு அதிகாரிகள் எங்களிடம் கொடுப்பார்கள். அதை வளர்த்து கொடுப்போம். முதல்வர் எங்களை நேரில் அழைத்து வாழ்த்து சொன்னது மிகப் பெரிய சந்தோஷம். காட்டில் தவறி வரும் யானை குட்டியை எங்களிடம் வளர்க்க வனத்துறை கொடுப்பார்கள். யானைக்குட்டியை கவனிக்க மட்டுமே பணம் வழங்குவார்கள்.

நாங்கள் யாரும் பணம் வாங்குவதில்லை. யானை குட்டி வளர்ப்பது சிரமம். குழந்தையை வளர்ப்பது போன்று தான் நாங்கள் வளர்த்தோம். வனத்துறை அதிகாரிகள் சொன்ன மாதிரி நாங்கள் நடந்து கொள்வோம். ஆக்கிரமிப்பால் யானைகள் நடமாட்டம் வனத்துறை பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் சொன்ன மாதிரி நடந்து கொண்டால் மக்களுக்கு பாதுகாப்பு. யானை வந்தால், அதிகாரிகள் சொல்வார்கள், ‘காட்டு பகுதியில் நடமாடக் கூடாது’ என்று சொல்வார்கள். அவர்கள் சொன்ன மாதிரி நடந்து கொண்டால் யாருக்கும் பாதிப்பு வராது. 2016 முதல் யானை குட்டிகளை வளர்த்து வருகிறோம். இதுவரை 3 குட்டிகள் வளர்த்துள்ளோம். பெரிதான பிறகு வனத்துறை அதிகாரிகளிடம் கொடுத்து விடுவோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button