குரு சிஷ்யன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.

மூத்த இசையமைப்பாளர் சுவாமி தட்சிணாமூர்த்தி இந்தப் படத்துக்கு ( ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது) இசையமைத்தார். இசைஞானி இளைய ராஜா, பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் இருவருக்கும் கர்னாடக இசையை கற்றுக் கொடுத்தவர் சுவாமி தான். அவரது இசைக்கோப்பு முறையைப் பார்ப்பதற்கே உற்சாகமாக இருக்கும். அவர் ஒன்… டூ… த்ரீ என்று கம்பீரக் குரலோடு தன் இசைக் குழுவினரை இயக்குகிற விதமே தனி.
‘ஆண்டவன் இல்லா உலகமிது’, ‘நல்ல மனம் வாழ்க…’ போன்ற பிரபலமான பாடல்களை இந்தப் படத்தில் அவர் அமைத்திருந்தார். அந்த இசை மேதை சுவாமி தட்சிணாமூர்த்திக்கு ஒரு சிக்கல் வந்தது.
இசையமைப்பில் வித்தியாசமாக ஒரு படத்தை எடுக்கும் ஆசையோடு இயக்குநர் ஒருவர் அவரை சந்தித் தார். பாடல்களுக்கான சூழலை விளக்கிவிட்டு, படத்தில் ஒரு பாடல் மட்டும் மாடர்ன் எலெக்ட்ரானிக் இசைக் கருவிகளைக் கொண்டு இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று
சுவாமியிடம் இயக்குநர் கூறினார். சுவாமியும் ஒப்புக்கொண்டார். எலெக்ட்ரானிக் இசைக் கருவிகளை வைத்து தான் இசையமைத்ததே இல்லையே என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது தான், சுவாமிக்கு இசையமைப்பாளர் இளையராஜா அவர்களின் நினைவு வந்து, அவரிடம் விஷயத்தைக் கூறியிருக்கிறார். தனக்கு கர்னாடக இசையைப் பயிற்றுவித்த குருவே, இப்படி கேட்டதும் சம்மதிக்காமல் இருந்துவிடுவாரா ராஜா? உடனே சம்மதித்து, ‘‘என்ன மாதிரி பாடல் என்பதை மட்டும் சொல்லுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று இளையராஜா கூறினார்.
ஒலிப்பதிவு கூடத்தில் அந்தப் பாடலை கண்டக்ட் செய்கிற வேலையில் இளையராஜா இறங்கி விட்டார். பாடல் பதிவு நடை பெற்றபோது நான் ராஜாவைப் பார்க்க அங்கு போயிருந்தேன். சுவாமி அவர்கள் என்னை பார்த்ததும் இந்த விஷயங்களை சொன்னார். பெரும்பாலும் ஒரே தொழிலில் இருப்பவர்களுக்குள் போட்டியும், பொறாமையும் இருக்கும். ஆனால், அங்கே கர்னாடக இசையைக் கற்றுக்கொடுத்த குருவுக்கு, எலெக்ட்ரானிக் இசைக் கருவிகளை வைத்து பாடல் பதிவு செய்துகொண்டிருந்தார் சிஷ்யர் இளையராஜா. சிஷ்யரிடம் குரு புதுமைகளை கற்றுக் கொண்டிருக்கிறார். குரு சிஷ்யன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பார்ப்பதற்கே நெகிழ்ச்சியாக இருந்தது. தெரிந்ததைக் கற்றுக் கொடுப்பதற்கும், தெரியாததைக் கற்றுக் கொள்வதற்கும் வயது என்ன தடை?
- எஸ்.பி.முத்துராமன்
நன்றி: பழனியப்பன் சுப்பிரமணியம்