இலக்கியம்

நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி எனப் போற்றப்படும் புதுமைப்பித்தன் (Pudhumaipithan) இறந்த தினம் இன்று

நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி எனப் போற்றப்படும் புதுமைப்பித்தன் (Pudhumaipithan) இறந்த தினம் இன்று🥲

l கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலி யூரில் (1906) பிறந்தார். இயற் பெயர் சொ.விருத்தாசலம். தந்தை தாசில்தார். அவர் ஓய்வு பெற்றதும் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு குடும்பம் குடியேறியது.

l தொடக்கக் கல்வியை செஞ்சி, கள்ளக்குறிச்சி, திண்டிவனத்தில் பயின்றார். நெல்லை இந்துக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். உலக இலக்கியங்களை தேடித் தேடி வாசித்தார். இவரது முதல் படைப்பான ‘குலாப்ஜான் காதல்’ 1933-ல் வெளிவந்தது.

l இவரை பத்திரிகை உலகுக்கு அழைத்து வந்தவர் வ.ராமசாமி. சென்னையில் 1934-ல் குடியேறினார். ‘ஊழியன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். ‘மணிக்கொடி’ இதழில் இவரது படைப்புகள் பிரசுரமாகின. அதில் வெளியான இவரது முதல் சிறுகதை ‘ஆத்தங்கரைப் பிள்ளையார்.’

l ‘மணிக்கொடி’, ‘கலைமகள்’, ‘ஜோதி, ‘சுதந்திரச் சங்கு’, ‘ஊழியன்’, ‘தமிழ்மணி’ உள்ளிட்ட பல இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளிவந்தன. ‘புதுமைப்பித்தனின் கதைகள்’ என்ற தொகுப்பு 1940-ல் வெளியானது. ‘கிராம ஊழியன்’, ‘சிவாஜி’ போன்ற சிற்றிதழ்களில் பணம் பெற்றுக்கொள்ளாமல் எழுதினார். ‘தினமணி’, ‘தினசரி’ பத்திரிகைகளிலும் பணிபுரிந்தார்.

l எழுத்துப் பணியில் 15 ஆண்டுகளுக்கும் குறைவாகவே ஈடுபட்டார். அதற்குள் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், எண்ணற்ற மொழிபெயர்ப்புகள், புத்தக விமர்சனங்கள் எழுதினார்.

l சென்னை, தஞ்சாவூர் அல்லாத பிற வட்டார வழக்கு தமிழில் எழுதிய முதல் எழுத்தாளர் இவர். இவரது கதாபாத்திரங்கள் பெரும்பாலும் நெல்லைத் தமிழ் பேசின. மாக்சிம் கார்க்கி, எர்னஸ்ட் டோலர், ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற படைப்பாளிகளின் 50-க்கும் மேற்பட்ட படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்தார்.

l இவர் சிறந்த இலக்கிய விமர்சகரும்கூட. சொ.வி., ரசமட்டம், மாத்ரு, கூத்தன், நந்தன், கபாலி, சுக்ராச்சாரி, இரவல் விசிறிமடிப்பு ஆகிய புனைபெயர்களில் எழுதினார். இலக்கியத்தின் பல துறைகளிலும் எழுதினாலும், சிறுகதைகள்தான் இவருக்கு தனியிடம் பெற்றுத் தந்தன. ‘காஞ்சனை’, ‘நாசகாரக் கும்பல்’, ‘மனித யந்திரம்’, ‘பொன்ன கரம்’, ‘இது மிஷின் யுகம்’, ‘சாபவிமோசனம்’, ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’, ‘ஒருநாள் கழிந்தது’, ‘சிற்பியின் நரகம்’, ‘செல்லம் மாள்’ முதலான அற்புதமான படைப்புகள் சாகாவரம் பெற்றவை.

l திரைப்படத் துறையிலும் ஆர்வம் செலுத்தினார். ‘அவ்வை’, ‘காமவல்லி’ ஆகிய படங்களில் பணிபுரிந்தார். சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, திரைப்படம் தயாரிக்க முயன்றார். அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.

l கூர்மையான சமூக விமர்சனம், அபாரமான அங்கதம், கதை வடிவங்களில் பரிசோதனை, வேகமான நடை, ஆழம், துல்லியமான சித்தரிப்புகள், வலுவான பாத்திரப் படைப்புகள் ஆகியவை இவரது தனி முத்திரைகள்.

l ‘ராஜமுக்தி’ படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுத 1947-ல் புனே சென்றிருந்தபோது, காசநோயால் பாதிக்கப்பட்டார். ஊர் திரும்பிய பிறகும் உடல்நிலை தேறவில்லை. மிகக் குறுகிய காலமே படைப்புலகில் இருந்தாலும் தமிழ் இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த புதுமைப்பித்தன் 42-வது வயதில் (1948) மறைந்தார். இவரது படைப்புகள் 2002-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button