பளியத்து ஜெயச்சந்திரக்குட்டன் என்ற பி. ஜெயச்சந்திரன்.

லவ்லி சிங்கர் பி.ஜெயச்சந்திரன் பர்த் டே
அறுபதுகளின் இறுதிவரை கனமான குரல் வளம் கொண்ட பாடகர்களை முன்னிலைப்படுத்தி இயங்கி வந்த திரையிசை, எழுபதுகளில் புதிய தலைமுறை நடிகர்களான கமல், ரஜினி போன்றவர்களின் வருகையால் மென்மையான குரல்வளம் நிறைந்த பாடகர்களின் வசம் வந்தது.
இளைய தலைமுறையின் துள்ளல், துடிப்பு, உற்சாகத்தைப் பிரதிபலிக்க ஒரு எஸ்.பி.பி. கிடைத்தார். அமைதியான நதியோட்டமாக மனத்தை வருட ஒரு ஜேசுதாஸ் கண்டெடுக்கப்பட்டார். இந்த இருவரின் ஆளுமை திரையிசையை வசப்படுத்திக்கொண்ட நேரத்தில், மலையாளத் தேசத்திலிருந்து மற்றுமொரு மயக்கும் குரலால் தமிழ் ரசிகர்களைக் கட்டிப்போட வந்தவர்தான் பளியத்து ஜெயச்சந்திரக்குட்டன் என்ற பி. ஜெயச்சந்திரன்.
. ‘கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்…’, ‘வசந்த காலங்கள்… இசைந்து பாடுங்கள்…’, ‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…’, ‘இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே…’, ‘மாஞ்சோலை கிளிதானோ…’, ‘கொடியிலே மல்லிகைப்பூ…’, ‘என் மேல் விழுந்த மழைத்துளியே…’, ‘கட்டாளம் காட்டுவழி…’ உட்பட மனதை ரம்மியமாக்கும் பாடல்களைப் பாடியவர். தமிழ், மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் 15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை செய்தவர் ஜெயச்சந்திரன்.
துல்லியமான உச்சரிப்பு, பொருளுணர்ந்து பாவநயத்தோடு குரலால் மெருகூட்டுவது ஆகியவற்றில் தனித்தன்மையோடு பிரகாசித்தார் ஜெயச்சந்திரன். பி. சுசீலாவுடன் பாடிய ‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்’ (‘நானே ராஜா நானே மந்திரி’) பாடலுக்கு மயங்காதவர் யாருமே இல்லை. மனோஜ் கியான் இசையில் ‘இணைந்த கைகள்’ படத்தில் ‘அந்திநேரத் தென்றல் காற்’றை எஸ்.பி.பி.யுடன் சேர்ந்து வரவழைத்தார்.
விக்ரமனின் ‘பூவே உனக்காக’ படத்தில் எஸ்.ஏ. ராஜ்குமாரின் இசையில் சுஜாதாவுடன் பாடிய ‘சொல்லாமலே யார் பார்த்தது’ பாடலில் ஜெய் சேட்டனின் குரல் வசீகரம் சொல்லாமலே புரியும்.
ஆக.. எம்.ஜி.ஆர்., ரஜினி காலத்தில் தொடங்கி, மூன்றாம் தலைமுறையிலும் டச்-சில் இருக்கும் இசை இனிப்பு மிட்டாய் ஜெயசந்திரனுக்கு ஆந்தை சினிமா அப்டேட்ஸ் சார்பில் ஹேப்பி பர்த் டே சொல்வதில் மகிழ்ச்சி
From the Desk of கட்டிங் கண்ணையா