50% சம்பளம் கட் – ஃப்ரெஷர்களுக்கு Wipro நிறுவனம் கொடுத்த பேரதிர்ச்சி!

தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனமான விப்ரோ, புதிதாக வேலைக்குச் சேர உள்ள ஊழியர்களின் சம்பளத்தை 50 சதவீதம் வரை குறைந்துள்ளது. ஃப்ரெஷர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்த Wipro
உலக அளவில் நிலவும் பணவீக்கம், பொருளாதார மந்தநிலை போன்ற காரணங்களால் ஐ.டி. நிறுவனங்கள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ முதன் முறையாக வேலைக்குச் சேர உள்ள ஃப்ரெஷர்களின் சம்பளத்தை பாதியாக குறைந்துள்ளது. இதுகுறித்து பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
விப்ரோ தனது விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், முதலில் அறிவிக்கப்பட்ட ஊதியத்தை விட குறைவாக பெற விரும்புவீர்களா? என விருப்பம் கேட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, விப்ரோ நிறுவனம் இதுவரை ஃப்ரெஷர்களுக்கு ஆரம்ப கட்ட ஊதியமாக ஆண்டுக்கு 6.5 லட்சம் ரூபாய் வழங்கி வந்த நிலையில், அதற்குப் பதிலாக ரூ. 3.5 லட்சம் பேக்கேஜை எடுக்க விரும்புகிறீர்களா? எனக் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. திடீர் முடிவுக்குக் காரணம்
உலக அளவில் நிலவி வரும் நிச்சயமற்ற பொருளாதார தன்மை, வளர்ந்து வரும் மந்தநிலை தொடர்பான கவலைகளால் 2022ம் ஆண்டு நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணியாணை வழங்குவதை விப்ரோ நிறுவனம் நிறுத்திவைத்திருந்தது. இந்நிலையில், செலவினங்களைக் குறைக்கும் நோக்கில், ஃப்ரெஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ள விப்ரோ ஊதியத்தை பாதியாக குறைக்கத் திட்டமிட்டுள்ளது. ஃப்ரெஷர்களுக்கான வேலை வாய்ப்பை பொறுத்தவரை விப்ரோ எலைட், டர்போ என்ற இரண்டு வகையான தேர்வு முறையை பின்பற்றுகிறது. இதில் எலைட்டின் திட்டத்தின் கீழ் தேர்வாகும் ஃப்ரெஷர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3.5 லட்சமும், டர்போ ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6.5 லட்சமும் சம்பளமாக வழங்கப்படும் எனக்கூறப்படுகிறது. பிப்ரவரி 16ம் தேதி டர்போ திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு விப்ரோ நிறுவனம் மின்னஞ்சல் ஒன்றினை அனுப்பியுள்ளது
. அதில், எலைட் திட்டத்தை தேர்வு செய்யும் படி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, 6.5 லட்சம் ரூபாய் ஆண்டு சம்பளத்திற்கு தேர்வானவர்களை, 3.5 லட்சம் ரூபாய் ஆண்டு சம்பளத்திற்கு வேலை பார்க்க விருப்பமா? எனக் கேட்கப்பட்டுள்ளது. விப்ரோ ஃப்ரெஷர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், “எங்கள் தொழில்துறையில் உள்ள மற்றவர்களைப் போலவே, நாங்கள் தொடர்ந்து உலகளாவிய பொருளாதாரங்கள் மற்றும் வாடிக்கையாளர் தேவைகளை மதிப்பீடு செய்கிறோம், இது எங்கள் பணியமர்த்தல் திட்டங்களிலும் முக்கியக்காரணியாக உள்ளது. பணியில் சேர காத்திருப்பவர்களுக்கான வாய்ப்புகளை ஆராய்கையில், உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் பொறுமையை நாங்கள் பாராட்டுகிறோம். தற்போது ஊழியர்களை பணிக்கு எடுக்கும் போது சம்பளத்தை 3.5 லட்சமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. FY23 தொகுப்பில் தேர்வாகியுள்ள பட்டதாரிகள் இந்த ஆப்ஷனை தேர்வு செய்யும் வாய்ப்பினை வழங்க விரும்புகிறோம்,” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது
. விப்ரோவின் இந்த புதிய ஆஃப்ரை ஏற்றுக்கொள்ளும் மாணவர்கள் மார்ச் 23ல் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக சம்பளத்தைத் தேர்வு செய்வோருக்கு அவர்களது விருப்பம் நிறைவேற்றப்படும் என்றும், ஆனால், அவர்கள் எப்போது பணியமர்த்தப்படுவார்கள் என்ற உத்தரவாதம் வழங்கப்பட மாட்டாது என்றும் விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. விப்ரோவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
இந்த நேரத்தில் பொருளாதார சூழ்நிலை மற்றும் வணிகத் தேவைகளை மனதில் கொண்டு நிறுவனத்தின் பணியமர்த்தல் திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன,” எனத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் குறைவான செயல்திறன் காரணமாக 454 ஃப்ரெஷர்களை விப்ரோ நிறுவனம் பணிநீக்கம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஃப்ரெஷர்களுக்கான ஊதியம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது நேர்காணலில் தேர்வானர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.