சினிமா

காலத்தால் அழியாத கானங்களைத் தந்த மலேசியா வாசுதேவன்!

காலத்தால் அழியாத கானங்களைத் தந்த மலேசியா வாசுதேவன்!

சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான திரைப்பாடல்களைப் பாடிய அருமையான பாடகரும், குணச்சித்திர நடிகருமான மலேசியா வாசுதேவன் அவர்கள் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

1944ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்து மலேசியாவில் வசித்துவந்த சத்து நாயர் – அம்மாளு தம்பதிக்கு 8ஆவது மகனாய் பிறந்த இவர், மலேசியாவில் தமிழர் இசைக் குழு ஒன்றில் முக்கிய பாடகராக விளங்கி வந்தார்.

மலேசியாவில் பல நாடகங்களில் நடித்த அனுபவத்தை நம்பிக்கையாகக் கொண்டு, சென்னை வந்து திரைப்பட வாய்ப்புகளைத் தேடினார்.

மலேசியத் தமிழர்கள் கூட்டாகத் தயாரித்த “இரத்தப் பேய்” என்ற தமிழ்ப் படத்தில் முதல் முறையாக நடிகனாக அறிமுகமானார்.

இளையராஜாவின் “பாவலர் பிரதர்ஸ்” குழுவில் பல மேடைக் கச்சேரிகளில் பாடி வந்தார்.

ஒருமுறை தனது குழுவில் பாடிக்கொண்டிருந்த மலேசியா வாசுதேவனை அழைத்த இளையராஜா, கமலுக்கு டிராக் ஒண்ணு பாடணும். சரியா இருந்தா, இந்தப் படத்தில் இருந்தே உனக்கு வெற்றிப் பயணம் ஆரம்பம் ஆயிரும்டா’ என்று அவரை ஊக்கப்படுத்தியிருக்கிறார்.

”ஆட்டுக்குட்டி முட்டையிட்டு” உள்பட அந்தப் படத்தில் அவர் பாடிய இரண்டு பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்.

அதுவரையில் கேட்டிருந்த எந்த வகையிலும் சேராத புதுவகையான குரலை ரசிகர்கள் ஆமோதிக்கவே, மலேசியா வாசுதேவனுக்கான ஐ.டி கார்டாக அந்தப் பாடல்கள் மாறியிருந்தது. இளையராஜாவுக்கும் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

அதற்கு முன்பாகவே ஜி.வெங்கடேஷ் இசையமைப்பில் வெளியான ‘பொல்லாத உலகில் ஒரு போராட்டம்’ படத்தில் பாடல்களை அவர் பாடியிருந்தாலும் ‘16 வயதினிலே’ படம் புது அடையாளத்தைக் கொடுத்தது.

கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள் என இளையராஜா கமிட்டான அடுத்தடுத்த படங்களிலும் மலேசியா வாசுதேவனின் குரல் மேஜிக் செய்தது.

“கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ..” என்று ஸ்ருதி சுத்தமாக ஒலித்த அவரது குரல், தமிழ் இசை ரசிகர்களின் ஆதர்சமாகத் தொடங்கியது.

‘புதிய வார்ப்புகள்’ படத்தின் “வான் மேகங்களே..” பாடல் அவரை மேலும் பிரபலமாக்கியது. முரட்டுக்காளை படத்தில் இடம்பெற்றிருந்த “பொதுவாக எம் மனசு தங்கம்” பாடல் இன்றுவரை ரஜினியின் ஃபேவரைட் பாடல்களில் ஒன்று.

ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடங்கி எந்தவொரு விளையாட்டுப் போட்டிகளிலும் தவறாமல் இடம்பெறும் பாடல் அது. ரஜினியின் மாஸை பட்டி, தொட்டியெங்கும் தனது குரல் வழியே கடத்தியிருப்பார் மலேசியா வாசுதேவன்.

பாடகராக மட்டுமல்லாது வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்திருந்தார் அவர்.

ரஜினியின் ஹிட் பாடல்களில் இன்னொரு முக்கியமான பாடல் “ஆசை நூறு வகை…” பாடல். எஜமான் படத்துக்குப் பிறகு ஒரு சின்ன இடைவெளிக்குப் பின்னர் அருணாச்சலம் படத்தில் “சிங்கம் ஒன்று புறப்பட்டதே” பாடல் ரஜினிக்கு மாஸ் ஏற்றியது.

ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்தும் சத்தங்கள் ரொம்பவே வித்தியாசமாக இருப்பதாக ஆரம்பகால கட்டங்களிலேயே கணித்த தீர்க்கதரிசி மலேசியா வாசுதேவன்.

முதல் மரியாதையில் இடம்பெற்றிருந்த பூங்காற்று திரும்புமா, வெட்டி வேரு வாசம், நெற்றிக்கண் படத்தின் மாப்பிள்ளைக்கு மாமன் மனசு, படிக்காதவன் படத்தின் ஒரு கூட்டுக் கிளியாக, சுவரில்லா சித்திரங்கள் படத்தின் காதல் வைபோகமே,

புன்னகை மன்னன் படத்தின் மாமாவுக்குக் குடுமா குடுமா, மிஸ்டர் பாரத் படத்தில் எஸ்.பி.பியோடு இவர் பாடிய என்னம்மா கண்ணு, மிஸ்டர் ரோமியாவில் இடம்பெற்றிருந்த மோனாலிசா மோனாலிசா உள்ளிட்ட பாடல்கள் இவரது குரலில் ஒலிக்கும் குறிப்பிடத்தக்க பாடல்களாகும்.

கமலின் ‘ஒரு கைதியின் டைரி’ தொடங்கி 85 படங்களுக்கும் மேலாக நடிகராகவும் வலம் வந்த அவருக்குத் தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவப்படுத்தியது.

மலேசியாவில் ரப்பர் தோட்டங்களில் வேலை பார்த்தது தொடங்கி, தமிழ் திரையுலகில் சாதித்தது வரை அவரது வாழ்க்கைப் பயணத்தை ஒரு ஆவணப்படமாக எடுத்திருக்கும் அவரது மகனும் நடிகருமான யுவேந்திரன், ஒரு படமாக எடுக்க இருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

“அப்பா கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.

அப்பாவின் மேனரிசங்களை அவர் சிறப்பாகக் கொண்டுவருவார் என்று நம்புகிறேன்” என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் யுவேந்திரன்.

பாடகர், நடிகர் தவிர 1991-ம் ஆண்டு வெளியான நீ சிரித்தால் தீபாவளி படம் மூலம் இயக்குநர் அவதரமும் அவர் எடுத்திருந்தார்.

2010-ம் ஆண்டு வெளியான பலே பாண்டியா படத்தில் இடம்பெற்றிருந்த ஹேப்பி பாடல் அவர் இறுதியாகப் பாடிய பாடலாகும்.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு 2003-ம் ஆண்டு முதலே ஓய்வில் இருந்த மலேசியா வாசுதேவன், 2011-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார்.

– நன்றி: முகநூல் பதிவு, தாய்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button