இலக்கியம்

உலகம் உன்னுடையது

உலகம் உன்னுடையது

*

மனிதரில் நீயுமோர் மனிதன்; மண்ணன்று!

இமைதிற! எழுந்து நன்றாய் எண்ணுவாய்!

தோளை உயர்த்துச்

சுடர் முகம் தூக்கு!

மீசையை முறுக்கி மேலே ஏற்று!

விழித்த விழியில் மேதினிக் கொளி செய்!

நகைப்பை முழக்கு!

நடத்து லோகத்தை!

உன்வீடு – உனது பக்கத்தின் வீட்டின்

இடையில் வைத்த சுவரை இடித்து

வீதிகள் இடையில் திரையை விலக்கி

நாட்டொடு நாட்டை இணைத்து மேலே

ஏறு! வானை இடிக்கும் மலைமேல்

ஏறு விடாமல்; ஏறு மேன்மேல்!

ஏறி நின்று பாரடா எங்கும்;

எங்கும் பாரடா இப்புவி மக்களைப்!

பாரடா உன் மானிடப் பரப்பை!

பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்!

‘என்குலம்’ என்றுனைத் தன்னிடம் ஒட்டிய

மக்களட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்!

அறிவை விரிவுசெய்! அகண்டமாக்கு!

விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!

அணைந்துகொள்! உன்னைச் சங்கமமாக்கு;

மானிட சமுத்திரம் நானென்று கூவு!

பிரிவிலை; எங்கும் பேதமில்லை

உலகம் உண்ண உண்! உடுத்த உடுப்பாய்!

புகல்வேன்; ‘உடைமை மக்களுக்குப் பொது’

புவியை நடத்துப் பொதுவில் நடத்து!

*

– பாவேந்தர் பாரதிதாசன்

*

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளில் அவரது கவிதைகளின் ஒளியில் அவரைக் காட்டிய புதிய உலகைக் காண்போம்

*

பிருந்தா சாரதி

*

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button