தீராக் காதல்

கொஞ்சம் தாமதம்தான். ஆனால் பெட்டர் லேட் தேன் நெவர் அல்லவா?
முன்னாள் காதல், காதலர்களின் பிரிவுக்குப் பிறகு இந்நாளில் தொடர்ந்தால்..?
இந்தக் கேள்வியின் அடிப்படையில் எல்லா மொழிகளிலும் நூறு படங்கள் வந்திருந்தாலும் எப்போதும் இட்லி, தோசை மாதிரி அலுக்காத சப்ஜெக்ட்களில் ஒன்று.
பொடி, ஆனியன், மசாலா, நெய், பேப்பர்ரோஸ்ட் என்று தோசைகளில் வரிசைக் கட்டும் வகை போல கொஞ்சம் கொஞ்சம் மாற்றி சுவை குறையாமல் தரமுடியும்.
ஒவ்வொரு எழுத்தாளரும் குறைந்தது தலா இரண்டு கதைகள் இந்த வகையில் எழுதியிருப்பார். நான் ஒரு மெகா சீரியல் (வரம்) உள்பட ஏழெட்டு எழுதியிருப்பேன்.
எழுத்தாளர் ஜி.ஆர்.சுரேந்தர்நாத் இந்தக் கதையை இயக்குனருடன் இணைந்து வேறு ஒரு வகையாக எழுதியிருக்கிறார்.
கதாப்பாத்திரங்களிடம் ஒரு நேர்மை இருக்கிறது. திரைக்கதையில் எதார்த்தம் தூக்கலாக இருக்கிறது.
ஒவ்வொருவரின் கோணத்திலும் உணர்வுகள் சரியாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
கிளைமாக்ஸ் என்பதற்காக நாடகத்தனம் ஏதுமின்றி இயல்பாக, கவிதையாக அமைந்து நிறைவைத் தருகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ் மீது கோபப்படுவதா, பரிதாபப்படுவதா என்று நம்மையே கேள்வி கேட்கவைத்து ‘பாவம் அவள்தான் என்ன செய்வாள்?’ என்று பதிலையும் நம்மையே யோசிக்க வைத்திருப்பது புத்திசாலித்தனமான திரைக்கதை.
ஐஸ்வர்யா ராஜேஷால் எந்தப் பாத்திரத்திலும் ஒரு நம்பகத்தன்மை சேர்க்க முடிகிறது. நன்றாக நடிக்கும் ஜெய் அதிகமான படங்களில் பார்க்க முடியாமல் போவதற்கு வேறேதோ காரணமிருக்கலாம்.
பல இடங்களில் கவித்துவமான எதார்த்தமான வசனங்கள் ‘அட!’ போட வைக்கின்றன.
தீராக் காதல் என்று இலக்கண சுத்தமாக ஒற்றெழுத்து போட்டிருக்கும் கவனம் படம் முழுக்கவே இருக்கிறது என்பதால் இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் மற்றும் குழுவினருக்கு பாராட்டுக்கள்.
Pattukkottai Prabakar Pkp
