”கே. வி.மகாதேவன் மறைந்த தினமின்று:

!
”கே. வி.மகாதேவன் மறைந்த தினமின்று:
தமிழ்சினிமாவின் ஆரம்பகால புள்ளிகளோடு கைகோர்த்து வளர்ந்து, அடுத்தடுத்த தலைமுறைக்கும் தாக்குப்பிடித்து சாதனையாளாராக திகழ்வது என்பது மிகச்சிலருக்கு மட்டுமே கிடைத்த வரம். 1940களில் தொடங்கி 1990கள் இறுதிகள் வரை 60 ஆண்டு காலம் இசைமழையாய் பொழிந்தவர் கிருஷ்ணன்கோவில் வெங்கடாச்சலம் மகாதேவன் என்கிற கே.வி.மகாதேவன்.
ஐம்பதுகளின் இறுதியில் தொடங்கி, அறுபதுகளில் நன்றாக வேர்விட்டு, எழுபதுகளின் இறுதிவரை இந்தியத் திரையிசையை சிலந்தி வலைபோல் ஆக்கிரமித்திருந்தது மேற்கத்திய சங்கீதம். அதன் வேகத்தில் நமது பாரம்பரியமான கர்நாடக சங்கீதம் தன் முக்கியத்துவனத்தைத் திரையில் மெல்ல மெல்ல இழந்துகொண்டு வந்தது. சுத்தமான கர்நாடக இசையில் பாடல்கள் அமைத்தால் “இது என்ன பாகவதர் காலமா?” என்று கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான நேரத்தில் செந்தேனாக கர்நாடக இசையைத் திரையிசையில் குழைத்துத் தந்தவர்தான் ‘திரை இசைத்திலகம்’ என்று அனைவராலும் முடிசூட்டப்பட்ட கே.வி.மகாதேவன்.
இந்த முயற்சியை பண்டிதர் முதல் பாமரர்வரை அனைவரும் ரசிக்கத்தக்க விதத்தில் செய்து வெற்றியடைந்தார். அதற்கு உடனடியாக நினைவில் ஓடிவரும் உதாரணம் என்றால் அது 1965-ல் அவரது இசையமைப்பில் வெளிவந்த ‘திருவிளையாடல்’. அந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கர்நாடக இசையின் மேன்மையை எளிதாய்த் துலங்கச் செய்த அற்புத்தை ஒரு கட்டுரையில் சொல்லி முடியுமா என்ன? திருவிளையாடலில் இடம்பெற்ற மற்ற பாடல்களை விடுங்கள், ‘ஞானப் பழத்தைப் பிழிந்து’ பாடலை எடுத்துக்கொள்ளுங்கள்.
தவத்திரு சங்கரதாஸ் ஸ்வாமிகள் நாடக மேடைக்காக எழுதிய விருத்தப் பாடல் அது. அதை அப்படியே எடுத்துக்கொண்டு, முழுமையாக ஒரு ராகத்துக்குள் பொருத்தி, கே.பி. சுந்தராம்பாளைப் பாடவைத்து பண்டிதர் முதல் பாமரர்வரை அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கொடுக்க வேண்டும் என்றால் எவ்வளவு நம்பிக்கையும் துணிவும் ஒரு இசை அமைப்பாளருக்கு இருந்திருக்க வேண்டும்! அது கே.வி. மகாதேவனுக்கு இருந்தது. அதனால் அவரால் அந்தப் பாடலை ஒரு வெற்றிப்பாடலாகக் கொடுக்க முடிந்தது.
“திரை இசைப் பாடல்களுக்கு நமது கர்நாடக இசை பொருத்துவதைப் போல வேறு எதுவும் பொருந்துவதில்லை” என்ற அழுத்தமான கருத்தைப் பலதரப்பட்ட பாடல்கள் மூலமாக நிரூபித்திருக்கிறார். புன்னாகவராளி ராகத்தில் “நாதர் முடிமேலிருக்கும் நல்ல பாம்பே” என்று கர்நாடகரீதியில் அமைத்தவர் அதே ராகத்தைப் பயன்படுத்தி ‘எலந்தப் பயம்’ என்ற ‘பணமா பாசமா’ படத்தின் பாடலை அமைத்து பாமர மக்களின் இதயத்தையும் வென்றிருக்கிறார்.
ஒரு கோரஸ் பாடகியாக இசை வாழ்க்கையைத் தொடங்கிய எல்.ஆர். ஈஸ்வரியை முதன்முதலாகப் பின்னணிப் பாடகியாக ‘நல்ல இடத்து சம்பந்தம்’ படத்தின் மூலமாக அறிமுகம் செய்தவர் கே.வி.எம்தான். மறைந்த ஜெயலலிதாவை முதன்முதலாகச் சொந்தக் குரலில் ‘அம்மா என்றால் அன்பு’ பாடலைப் பாடவைத்தவர். ‘ஆயிரம் நிலவே வா’ பாடலின் மூலம் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை இங்கே அறிமுகம் செய்தவரும் அவர்தான்.
இசை அமைப்பாளர்களுக்கான தேசிய விருது முதன்முதலாக 1967ம் ஆண்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டபோது முதல் வருடமே அதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கே.வி.மகாதேவன். பின்னர் ‘சங்கராபரணம்’ படத்துக்காக இரண்டாம் முறை தேசியவிருதுபெற்றார். திரையிசை என்பது மனதைச் சுகமாக வருடும் தென்றல் போன்றது என்ற உணர்வை கே.வி.மகாதேவனின் பாடல்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தந்துகொண்டிருக்கின்றன என்பதே அவர் இன்னமும் வாழ்கிறார் என்பதற்கு சாட்சி
From The Desk of கட்டிங் கண்ணையா