சினிமா

தியாகராஜன் ⁩

From The Desk of கட்டிங் கண்ணையா!🔥

ஹேப்பி பர்த் டே @⁨Act Thiagarajan⁩ சார்💐

இப்போ நடிகர் பிரசாந்தின் அப்பா தியாகராஜன் என்று சொன்னால்தான் தெரியும்.. ஆனால் இவர் எண்பதுகளில் ஆக்ஷன் ஹீரோவாக இருந்தார் என்றால் இன்றைய தலைமுறைக்கு ஆச்சரியமாக இருக்கக் கூடும். பல படங்களில் அவர் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராகவும், இயக்குநராகவும் விளங்கியவர் தியாகராஜன். அடிப்படையில் ஒரு மருத்துவரின் மகனான தியாகராஜன் மெடிக்கல் ரெப்ரெஸெண்டேட்டிவாக திகழ்ந்தவர். அதனையடுத்து கால சூழ்நிலை காரணமாக சினிமாவுக்குள் நுழைந்த அவர் முதலில் ஆடியோ கம்பெனி ஒன்றில் வேலை பார்த்தார். அப்போது இளையராஜா, பாரதிராஜா உள்ளிட்டோருடன் பழக்கம் ஏற்பட்டது.

இளையராஜா, பாரதிராஜாவுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் நெருக்கமாக மாற மூன்று பேரும் இணைந்து படங்களை விநியோகம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி ராஜாஸ் சினி கம்பைன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி மகேந்திரன் இயக்கிய பூட்டாத பூட்டுக்கள் படத்தை சென்னை மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் விநியோகம் செய்தனர். தொடர்ந்து பல படங்களை விநியோகம் செய்துவந்த தியாகராஜனை பாரதிராஜா நடிகராக அறிமுகப்படுத்தினார்.

1981-ல் பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படம் தியாகராஜனுக்கு நல்ல அறிமுகமாக இருந்தது. அப் படத்தில் சில்க் ஸ்மிதாவுக்கு கணவராக நடித்திருந்தார். கொடூர கணவரான அந்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்த தியாகராஜன் முதல் படத்திலேயே பட்டித்தொட்டியெங்கும் நடிகராக புகழடைந்தார். குறிப்பாக தியாகராஜன் போல தனக்கு ஒரு கணவர் வந்துவிடவேக்கூடாது என படம் பார்த்த பெண்கள் நினைக்கும் அளவுக்கு அவரது நடிப்பு இருந்தது.

அதன் பிறகு நிறைய படங்களில் வாய்ப்புகள் வர தொடர்ந்து நடித்தார். தெலுங்கு, இந்தியிலும் பிசியானார். .அப்போது அவர் அந்தி மயக்கம், டிக் டிக் டிக், பாயும் புலி, முள் இல்லாத ரோஜா, நாடோடி ராஜா, நெஞ்சங்கள் என பல படங்களில் நடித்து பிஸியாக நடித்தார். இவரது திறமையை பார்த்த பாலுமகேந்திரா தான் இயக்கிய நீங்கள் கேட்டவை படத்திலும் நடிக்க வைத்தார். அது அப்போதைக்கு பலராலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.

இப்படி தியாகராஜன் ஏகப்பட்ட படங்களில் நடித்தாலும் அவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது மலையூர் மம்பட்டியான் திரைப்படம். இன்றுவரை தியாகராஜன் என்றாலே மம்பட்டியானாக நடித்தாரே அவர்தானே என பலரும் கூறுவார்கள். அப்படத்தில் மம்பட்டியானாக நடித்து அதகளம் செய்திருந்தார். இளையராஜா இசையமைக்க ராஜசேகர் படத்தை இயக்கினார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது . இதன் டைட்டில் காட்சியின் போது வரும் இளையராஜாவின், ‘காட்டுவழிப் போற பெண்ணே கவலைப்படாதே… காட்டுப்புலி வழி மறக்கும் கலங்கி நிற்காதே… மம்பட்டியான் பெயரைச் சொன்னா புலி பதுங்கும் காட்டுல..’ பாடல் படத்துக்கு ஓர் ஓர்மையை தந்து, எதிர்பார்ப்பை உருவாக்கும் விதத்தில் அமைந்திருக்கும்.

தொடர்ந்து படங்களில் நடிச்சு வந்த தியாகராஜனுக்குள் ஒரு டைரக்டர் இருந்தார். அவரை வெளிக்கொண்டு வரும் விதமாக பூவுக்குள் பூகம்பம் படத்தை முதன்முதலாக இயக்கினார். படம் டீசண்ட்டான வரவேற்பைப் பெற்ற சூழலில் தொடர்ந்து சேலம் விஷ்ணு, ஆணழகன், மன்னவா, ஷாக், ஜெய், மம்பட்டியான் உள்ளிட்ட படங்களை இயக்கி கவனிக்கப்படும் இயக்குநராகவும் வலம் வந்தார்.அலைகள் ஓய்வதில்லை படத்தின் மெகா ஹிட்டைத் தொடர்ந்து நடந்த பாராட்டு விழாவில் எம்ஜிஆர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போதிலிருந்து எம்ஜிஆருக்கும் தியாகராஜனுக்கும் பழக்கமும் ஏற்பட்டுவிட்டது. தியாகராஜனின் குண நலன்கள் எம்ஜிஆருக்கு பிடித்துவிட தியாகராஜன் இயக்கிய பூவுக்குள் பூகம்பம் படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அது வரை இசைக்கென் விழா ஏதும் நடந்தது இல்லையாம்.. மேலும் எம்ஜிஆர் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வது இதுவே முதன்முறை. அப்படி கலந்துகொள்ளும் அளவுக்கு தியாகராஜன் எம்ஜிஆருக்கு நெருக்கமா என ஆச்சரியமும் ஏற்பட்டது.

இதுக்கிடையிலே தன் மகன் பிரசாந்த்தை டாக்டராக்க வேண்டும் என்பதுதான் தியாகராஜனின் ஆசை. ஆனால் கால சூழ்நிலை அவரையும் நடிகராக்கிவிட்டது. பிரசாந்த் நடிப்பில் வெளியான படங்கள் ஹிட்டாகி அவருக்கு ஒரு நல்ல இமேஜ் கிடைக்க ஆரம்பித்தது தான் பீக்கில் இருந்தபோதே நடிப்பதை நிறுத்திவிட்டார் தியாகராஜன். ஏனெனில் அப்போது தியாகராஜன் கொஞ்சம் முரட்டுத்தனமான கதாபாத்திரங்களில் நடிச்சு வந்தார். எனவே தனக்குள்ள இமேஜ் பிரசாந்த்துக்கு சென்றுவிடக்கூடாது என அஞ்சி அந்த முடிவை தைரியமாக எடுத்தார் தியாகராஜன்.

தமிழின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் பிரசாந்த். சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர் நடிக்க வந்தாலும் அவர் திறமை வளர்ந்ததற்கு முழுக்க முழுக்க தியாகராஜன் தான் காரணம். ஏனெனில் அவரை சிறு வயதிலேயே பியானோ, கராத்தே, ஜிம்னாஸ்டிக், நடனம் என பலவற்றை கற்றுக்கொள்ள வைத்தார் தியாகராஜன். அது பிரசாந்த்துக்கு சினிமாவில் வெல்ல ரொம்பவே உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.

சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த பிரசாந்தை வைதே தனது இரண்டாவது இன்னிங்ஸை அந்தகன் என்ற படத்தின் மூலம் தொடங்குகிறார். அந்தப் படம் ஹிந்தியில் மெகா ஹிட்டான அந்தாதூன் படத்தின் ரீமேக்காகும். அப்படத்தை தியாகராஜனே டைரக்ட் செஞ்சிருக்கார்.. ஏதேதோ காரணத்தால் ரிலீஸ் ஆகாமால் இருக்கும் அந்தகன் மூலம் 77 வயதை தாண்டும் தியாகராஜன் சாருக்கு புது வசந்தம் பிறக்க வாழ்த்துகளையும், வணக்கதையும் தெரிவித்துக் கொள்கிறோம்

From The Desk of கட்டிங் கண்ணையா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button