கி. இராஜநாராயனனோட ஒரு ப்ளஸ் பாயிண்ட் கலைத் தன்மையை விட அவரோட சொற்கள்

கி. இராஜநாராயனனோட ஒரு ப்ளஸ் பாயிண்ட் கலைத் தன்மையை விட அவரோட சொற்கள். எப்பவுமே எந்த சொற்கள் மக்களிடையே உணர்ச்சிளை வெளிப்படுத்துமோ அந்த சொற்களை அதேபடி இலக்கியத்தில் கொண்டு வருவோமேயானால் மனசில பல அதிர்வுகளை ஏற்படுத்த இயலும். எந்தசொற்கள், அதிர்வுகளை ஏற்படுத்தலையோ அது கரையேறாது. உதாரணத்திற்கு, தினமும் நம்ம காகத்தை பார்க்கிறோம். அது ஒரு அழகான பொருள் பார்க்கிறோம். அது ஒரு அழகான பொருள் அல்ல. அது ஒரு அருவருப்பான பொருள் இல்ல. யாராவது காக்கையை அப்படியே பார்த்துகிட்டேவா இருப்போம். இல்லை. இந்த காக்கை, ஒரு கலைஞன் வரைவானேயானால் கொஞ்ச நேரம் பார்க்கலாம். என்னன்னா ஏதோ ஒரு இது நம்ம மனசுல வீணை கம்பியை தட்டுது. நான் ஹைதராபாத் மீயூசியம் போனேன். அங்கே ஆர்ட் மீயூசியம் ஹேலரியில ஒரு படம் இருக்கு. `மெர்சென்ட் ஆப் வெனிஸ்’ல வர வெனிஸ் நகர தெருவை வரைஞ்சி வச்சிருக்காங்க. உண்மையில நான் அப்படியே நின்னுட்டேன். என்னை பிறகு இழுத்துதான் கொண்டு வந்தான் அந்த கைடு பிரமிச்சு போனேன். நான் ஏதோ ஒரு வெனிஸ் நகரத்து தெருவிலே நிற்கிறது போல உணர்ந்தேன். இது எப்படி ஏற்பட்டது. காரணம் என்னன்னா கண்ணுக்கு புலப்படாத, மனசுக்கு சிந்தனைக்கு எட்டாத ஏதோ ஒரு தன்மை நம்மை அதோட இழைக்குது. அது வந்து ஓவியம் மூலம், இசை மூலம், சொற்கள் மூலம். இயற்கையில் பலப்பல வண்ணங்கள் இணைந்து இருப்பது போல, சொற்களால் கோர்வைன்னு ஒன்று இருக்கு. இது தானாக விழனும். விலங்கிடாத மொழியா இருக்கனும். எல்லார்கிட்டேயும் என்ன சொல்வேனா, மீரானுக்கு மொழினா அதை விட்டுறனும். அதுல இலக்கணம் பார்க்காதீங்க. மரபு பார்க்காதீங்க. சொல் பாக்காதீங்க. தமிழானு பாக்காதீங்க. இது மீரானோட மொழி. இது இப்படித்தான் இருக்கும்னு நெனச்சிட்டு படிங்க அதான் நல்லது.
-தோப்பில் முகமது மீரான்
நன்றி: தீராநதி