சினிமா

தமிழ்த்திரையுலகின் கம்பீரம்

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்…!

தமிழ்த்திரையுலகின் கம்பீரம்

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்…!

திருச்செங்கோடு இராமலிங்கம் சுந்தரம் என்னும் T.R.சுந்தரம் தனியொருவரின் பெருங்கனவுதான் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்.

படப்பிடிப்பு தளம், பாடல் பதிவு செய்வதற்கான அறை, கூடம், திரைப்படத்தை போட்டுப்பார்க்க ஒரு அரங்கம் என அனைத்து வசதிகளுடனும், 1935 இல் “மாடர்ன் தியேட்டர்ஸ்” நிறுவனம் உருவானது..!

தமிழ்த்திரையுலகில் பல பிரபலங்களை உருவாக்கிய பழம்பெருமை வாய்ந்த சேலம் மார்டன் தியேட்டரில் எம்.ஜி.ஆர், கருணாநிதி மற்றும் V.N.ஜானகி உள்ளிட்ட முன்னால் முதல்வர்கள் நடித்துள்ளனர்.இந்த தியேட்டரில் பணியாற்றியுள்ளார். கண்ணதாசன், மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போன்றோர் மாடர்ன் தியேட்டருக்க்கு வந்து பாடல் எழுதி உள்ளனர்..!

9 மொழிகளில் 118 திரைப்படங்களை தயாரித்த பெருமை மாடர்ன் தியேட்டருக்கு உண்டு. 1936-ல் நேருவும், வல்லபாய் படேலும் மாடர்ன் தியேட்டருக்கு சென்று படப்பிடிப்பை கண்டு களித்துள்ளனர்..!

படப்பிடிப்பு குறிப்பிட்ட தேதியில் தொடங்கி, குறிப்பிட்ட தேதியில் முடியவேண்டும் என்பதில்

T.R.சுந்தரம் கண்டிப்பாக இருந்தார்..!

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் சுமார் 250 தொழிலாளர்கள் வேலை செய்தார்கள். சுந்தரம் தமது நிறுவனத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல் படுத்தினார்.

நடிகைகள் உள்ள பகுதிக்கு, நடிகர்கள் போகக்கூடாது. கதை வசனம் முழுமையாகத் தயாரான பிறகுதான், நடிகர் நடிகைகள் யார் என்பது முடிவாகும். நன்றாக ஒத்திகை பார்த்த பிறகுதான் படப்பிடிப்பு தொடங்கும். இங்கு நடிக்க வந்த நடிகர்கள் கூட ஒரு தொழிலாளர்களைப் போல சரியான நேரத்துக்கு வருவது, கட்டுப்பாட்டோடு பணியாற்றுவது, வீண் வம்பு, விவகாரம் இவற்றில் ஈடுபடாமல் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது என்று இருந்தார்கள்.

1951-இல் சர்வாதிகாரி,1952-ல் வளையாபதி, 1960-இல் பாக்தாத் திருடன் போன்ற பல வெற்றிப் படங்களை மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தினர் எடுத்தனர். இந்நிறுவனம் எடுத்த முதல் வண்ணப்படம் அலிபாபாவும் 40 திருடர்களும் ஆகும்…!

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்கள் விவரம் வருமாறு:

தட்ச யக்ஞம், கம்பர், தாயுமானவர், மாணிக்கவாசகர், உத்தமபுத்திரன், பக்த கெளரி, தயாளன், மனோன்மணி, செளசெள, பர்மா ராணி, ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி, ஆதித்தன் கனவு, திகம்பர சாமியார், மந்திரிகுமாரி, பொன்முடி, சர்வாதிகாரி, தாய் உள்ளம், திரும்பிப்பார், இல்லறஜோதி, சுகம் எங்கே?, கதாநாயகி, மகேஸ்வரி, அலிபாபாவும் 40 திருடர்களும், பாசவலை, ஆரவல்லி, பெற்ற மகளை விற்ற அன்னை, தலைகொடுத்தான் தம்பி, வண்ணக்கிளி, கைதி கண்ணாயிரம், குமுதம், கொஞ்சும் குமரி, அம்மா எங்கே?, வல்லவனுக்கு வல்லவன், வல்லவன் ஒருவன், இரு வல்லவர்கள், எதிரிகள் ஜாக்கிரதை, காதலித்தால் போதுமா, நான்கு கில்லாடிகள், சி.ஐ.டி.சங்கர், ஜஸ்டிஸ் விஸ்வநாதன், கருந்தேள் கண்ணாயிரம் இப்படிப் பல படங்கள் உண்டு.

ஜெய்சங்கரை வைத்து பல 007 மாதிரியான துப்பறியும் படங்களையும் T.R.சுந்தரம் எடுத்திருக்கிறார். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் எடுத்த மொத்த படங்களின் பட்டியல் அந்த நிறுவனத்தின் வாயிலில் பெரிய விளம்பரப் பலகையில் எழுதி வைத்திருந்தார்கள்…!

இந்த நிறுவனத்தின் தயாரிப்பு அரங்கில் 1982ஆம் ஆண்டுவரை 150க்கும் மேலான தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, சிங்களம் மற்றும் ஆங்கிலத்திலும் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தமிழ்த் திரைப்படங்களே..!

1963ல் சுந்தரம் மறைந்தார். இன்று மாடர்ன் தியேட்டர்ஸ், சுந்தரம் கார்டன்ஸ் என்ற குடியிருப்புப் பகுதியாக மாற்றம் பெற்றுள்ளது. நுழைவு வாயில் பகுதி மட்டுமே மிஞ்சியிருக்கிறது.,,!

அந்த முகப்பு நுழைவு வாயில் சுவரை தவிர வேறு அடையாளங்கள் பின்பக்கம் இருப்பதாகவும் தெரியவில்லை. இன்று மார்டன் தியேட்டர் அதன் அனைத்து சுவடுகளையும் இழந்து விட்டது.!

எல்லாத்தையும் கடந்துபோகச் செய்துவிடும் காலத்தால், மனதில் தேங்கிப்போன சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நினைவுகளை எப்போதும் மறக்க செய்ய முடியாது..!

– ஈசன் எழில் விழியன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button