மறக்க முடியாத நடன இயக்குனர் புலியூர் சரோஜா.

மறக்க முடியாத நடன இயக்குனர் புலியூர் சரோஜா…!
1980 களில் தென்னிந்திய திரையுலகில் ஜொலித்த சினிமா நட்சத்திரங்களின் வளர்ச்சியில் நடன இயக்குனர் புலியூர் சரோஜாவின் பங்கு முக்கியமானது..! குறிப்பாக தமிழ் திரையுலகில் ரஜினி கமல் இருவரின் அபிமான நடன இயக்குனர், அவர்களை அழகாக ஆட வைத்து ரசிகர்களை ரசிக்க வைத்த நடன இயக்குனர் புலியூர் சரோஜா அவர்கள். சிறுவயதில் சென்னை ராயபுரத்தில் ஒரு சர்க்கஸ் மாஸ்டர் இடம் சாகசங்களை பயின்று பின்பு ஜெமினி, ஜுபிடர் கம்பெனிகளில் திரைப்பட குரூப் டான்ஸராக சேர்ந்து பல படங்களில் குரூப் டான்ஸ்களில் பங்கேற்று, மேலும் அன்றைய நடிகைகளுக்கு டூப் நடிகையாக நடித்து பின்பு படிப்படியாக உயர்ந்து நடன இயக்குனர் ஆனவர் புலியூர் சரோஜா அவர்கள்..!
மக்கள் திலகம் எம் ஜி ஆரை “அன்பே வா” படத்தில் நாடோடி பாடலுக்கு பிரேக் டான்ஸ் ஆட வைத்தவர் புலியூர் சரோஜா தான்…!
1980 களில் இளையராஜா இசையில் வெளிவந்த எண்ணற்ற பாடல்களுக்கு நடன இயக்குனர் புலியூர் சரோஜா தான்…! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பாயும் புலி “ஆடி மாச காத்தடிக்க” பாடல், ராஜா சின்ன ரோஜாவில் “சூப்பர் ஸ்டார் யாருன்னு” கேட்டா பாடல் உள்ளிட்ட பாடல்களுக்கு நடன இயக்குனர் புலியூர் சரோஜா அம்மா தான். கலைஞானி கமலஹாசனுக்கு சகலகலா வல்லவனில் “இளமை இதோ இதோ” பேர் சொல்லும் பிள்ளையில் “அம்மம்மம்மா வந்திங்கு” உள்ளிட்ட நிறைய பாடல்கள் புலியூர் சரோஜா அம்மா தான்.அதனால் ரஜினி கமல் இருவர் ரசிகர்களின் விருப்பு நடன இயக்குனராக திகழ்ந்தவர் புலியூர் சரோஜா அவர்கள். சில்க் ஸ்மிதா புகழின் உச்சிக்கு சென்றதற்கு புலியூர் சரோஜா அவர்கள் அமைத்துக் கொடுத்த நடன அசைவுகள் தான் காரணம்…! நேத்து ராத்திரியம்மா உள்ளிட்ட பெரும்பாலான சில்க் ஸ்மிதா பாடல்களுக்கு நடன இயக்குனர் புலியூர் சரோஜா தான். இவரது கணவர் ஜி சீனிவாசன் புதிய வார்ப்புகள் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவர்களின் ஒரே மகன் சத்திய நாராயணன். தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடன இயக்குனராக வலம் வந்த புலியூர் சரோஜாவின் வாழ்க்கையை அவரது மகனின் அகால மரணம் அடியோடு புரட்டி போட்டுவிட்டது…! அவரது மகன் விபத்து ஒன்றில் பலியான பின் புலியூர் சரோஜா அவர்கள் சினிமா உலகை விட்டு விலகி விட்டார்..! தற்போது வசிக்கிற வீடு உள்பட தனது சொத்துக்களை தானமாக எழுதி வைத்துவிட்டார். மேலும் அவரது மகனின் நினைவாக குறைந்த கட்டணத்தில் ஏழை குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடம் ஒன்றை தற்போது நடத்தி வருகிறார்…!
எண்ணற்ற ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்துக் கொடுத்து
1980களில் ஸ்டாராக ஜொலித்த நடன இயக்குனர் புலியூர் சரோஜா அவர்களை 80ஸ் 90ஸ் ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாது…!
-ஈசன்_எழில்விழியன்