பிரெண்டன் ஃப்ரேசர்.

நான் 30 வருடங்களுக்கு முன்னர் நடிக்கத் தொடங்கினேன். எனக்கு எதுவும் சுலபமாகக் கிடைத்துவிடவில்லை. ஆனால் எனக்கு இதற்காக ஓர் உதவி வந்து கொண்டிருந்தது. அது ஒரு கட்டத்தில் நின்றுபோன பிறகுதான் அதன் அருமையை நான் உணர்ந்தேன்.
இந்த விருதுக்காகவும், மரியாதைக்காகவும் நன்றி சொல்ல விரும்புகிறேன். என் சக நடிகர்கள் இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது. எனக்கு இது ஓர் ஆழ்கடல் தேடல் போலத்தான் இருந்தது. இந்தத் தேடலில் நான் மூச்சு விடுவதற்கான காற்று என் மகன்கள், என் மேலாளர் மற்றும் என் முதல் துணை ஜீன் மூர் (கேர்ள் பிரெண்ட்) ஆகியோரிடமிருந்து வந்தது. (அரங்கை நோக்கி…) உங்கள் அனைவருக்குமே மீண்டும் என் நன்றிகள். நான் உங்கள் அனைவருக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் முடித்தார் பிரெண்டன் ஃப்ரேசர்.
54 வயதான பிரெண்டன் ஃப்ரேசர் ‘தி மம்மி’, ‘ஜார்ஜ் ஆஃப் தி ஜங்கிள்’, ‘Journey to the Center of the Earth’ போன்ற கமெர்ஷியல் பொழுதுபோக்குப் படங்களின் மூலம் இந்தியாவிலும் பிரபலமானார். அவர் ‘தி வேல்’ படத்தில் 600 பவுண்டுகள் எடையுள்ள ஒரு மனிதராகக் கடினமான சிகை அலங்காரங்கள் எல்லாம் செய்து நடித்திருந்தார். இந்தப் படத்துக்காக மட்டும் 20 குறிப்பிடத்தகுந்த விருதுகளை வென்று சாதனை படைத்திருக்கிறார்.
இவர் தன் கரியரில், அதிக ரிஸ்கான ஸ்டன்ட் காட்சிகளில் நடித்ததால் அவ்வப்போது பல்வேறு அறுவைசிகிச்சைகள் செய்யவேண்டியிருந்தது. மூட்டு மாற்று அறுவைசிகிச்சை தொடங்கி குரல் நாண் அறுவைசிகிச்சை வரை பல சிக்கல்களை எதிர்கொண்டார். டிவி மற்றும் பிற படைப்புகளில் தொடர்ந்து நடித்து வந்தாலும் 2010-ம் ஆண்டில் ஹாரிசன் ஃபோர்டுடன் நடித்த ‘Extraordinary Measures’ படத்துக்குப் பிறகு வேறு எந்தப் பெரிய படவாய்ப்பும் இவருக்குக் கிடைக்கவில்லை. இவர் ஹாலிவுட்டால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக இவரின் ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
2003-ம் ஆண்டு ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் அசோசியேஷனின் அப்போதைய தலைவர் பிலிப் பெர்க் தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கடந்த 2018-ம் ஆண்டு வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார் பிரெண்டன். கோல்டன் குளோப்ஸ் விருதுக்கான ஒரு விருந்து நிகழ்வில் இது நடந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
தற்போது ‘தி வேல்’ படத்துக்காக அதே ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் அசோசியேஷனின் கோல்டன் குளோப் விழாவின் சிறந்த நடிகர் விருதுக்காக பிரெண்டன் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். ஆனால், அதனுடனான அவரின் மோசமான அனுபவத்தைக் காரணம் காட்டி, விருது நிகழ்வில் தான் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்திருந்தார் பிரெண்டன்.
சர்ச்சைகள், சந்தித்த மோசமான அனுபவங்கள் போன்றவற்றைக் கடந்து பிரெண்டன் ஃப்ரேசர் இப்போது மீண்டும் சாதித்திருப்பது பலருக்கும் ஊக்கமளிக்கும் ஒன்றாக இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 90ஸ் கிட்ஸின் ஆதர்ச ஹாலிவுட் ஹீரோக்களில் ஒருவரான பிரெண்டனுக்கு வாழ்த்துகள்!
நன்றி: விகடன்